Thursday, May 17, 2007

சன் டிவி தொடர்களை ரசிப்பது (அ) சகிப்பது எப்படி

முதலில் உங்கள் வீட்டில் சன் டிவி இணைப்பு இல்லையா! ஜோராக ஒரு முறை கை தட்டி விட்டு விலகி விடுங்கள்- பெரியவர்களானால் நல்ல ஒரு நாவல் படிக்கவும், இளைஞர், இளைஞிகள் எனில் வேறு நல்ல வேலை இருந்தால் பார்க்கவும், சிறுவர், சிறுமியர் எனில் அழுது அடம் பிடித்து Cartoon சானல் மாற்ற சொல்லி பார்க்கவும்.

தலையெழுத்தை நொந்து நொந்து சன் டிவி பார்ப்பவர்களுக்கும், சன் டிவி க்கு ஒரு வருடம் contract போட்டு தலையை சுவற்றில் இடித்துக் கொள்ளலாமா அல்லது நல்ல பாறாங்கல்லில் மோதலாமா என்று இருக்கும் மற்றவர்களுக்கும் முதலில் ஒரு சின்ன யோசனை - டிவியை தூக்கி பரணையில் sorry இங்கு பரண் கிடையாதே so, attic-ல் போட்டு விட்டு அக்கடா
என்று இருங்கள். அதுவும் முடியாதவர்கள் கீழ்கண்ட சில விதிகளை பின் பற்றினால் சன் டிவியின் சகிக்காத தொடர்களை ரசிப்பதோடு, வாழ்வில் அல்சர், இரத்த கொதிப்பு போன்ற வியாதி இனி வாராது அந்த சூரிய பகவான் அருள் புரிவார்.

முக்கிய விதி:
எல்லா தொடரிலும் வரும் எல்லா கதாபாத்திரங்களுக்கும், கீ கொடுத்தால் ஓடும் கை கடிகாரத்திற்கு எவ்வளவு மூளை உண்டோ, அவ்வளவு மூளைதான் அவர்களுக்கும்.
இனி உப விதிகள்:

1. எந்த தொடரும் இப்போது முடியும் என எப்போதும் சொல்ல முடியாது, எனவே, தொடர் இப்படி முடியுமா, அப்படி முடியுமா என மண்டை குழம்புவது ஒரு கால விரயம்.
2. எல்லா தொடரிலும் ஒரு வில்லன் (அ) வில்லி உண்டு, அவர்கள் கொஞ்சம் கோணல் சிரிப்பு சிரித்தபடி கடித்து கடித்து வசனம் பேசுவார்கள், சீனுக்கு சீன் உதார் விடுவார்கள்.
3. எல்லா தொடரிலும் ஒரு ஏழை அப்பா (அ) அம்மா நிச்சயம் உண்டு, அவர்கள் எப்போதும் அழுதபடியே இருப்பார்கள்.
4. எல்லா தொடரிலும் நன்கு படித்த, பணக்கார பெண்ணும், வாசக்கதவை மூடி, டெலிஃபோனை பிடுங்கி விட்டால், வெளியே போகத்தெரியாமல் பூனை மாதிரி வீட்டிலேயே இருப்பாள்.
5. எல்லா தொடரிலும், யாராவது ஒருவருக்கு ஒரு சின்ன வீடு இருக்கும்.
6. எல்லா கதாநாயகனுக்கும் ஒரு கெட்ட Flashback கட்டாயம் இருக்கும்.
7. எல்லா தொடரிலும் ஒன்று (அ) இரண்டு கதாபாத்திரங்கள் ரொம்ப நல்லவர்கள், ஆனால் எப்போதாவதுதான் வருவார்கள்.
8. ஒரு தொடரில் வரும் நடிகர், நடிகைகள் எல்லா தொடர்களிலும் வருவார்கள், so, ஒரே தொடரை தொடர்ந்து பார்க்காமல், ஒரு நாளைக்கு ஒன்று என்று பார்த்தாலும் புரியும்.
9. எல்லா மாயாஜால தொடர்களிலும், சமீபத்திய எல்லா ஆங்கிலப்பட ட்ரிக் கண்டிப்பாக இருக்கும்.
10. அம்மன், முருகன் தொடர்களை பார்ப்பதை தவிர்க்கவும், பார்த்தால், கொஞ்சம் இருக்கும் கடவுள் பக்தியும் போய், நாஸ்திகராவது சர்வ நிச்சயம்.
11. நியூஸ் - நடு நடுவே வரும் கேள்வி - பதில் மட்டும் OK, so, mute செய்து விடுவது உத்தமம்.
12. Pepsi - தொடரை ரசிக்க, பாடல்காட்சி வரும் வரை mute செய்து விடுவது ரொம்ப நல்லது, செய்தால், கேட்கப்படும் அபத்த கேள்விகளை கேட்டு எதையாவது எடுத்து டிவி மேல் வீசலாம் என்ற கோபம் வராது தவிர்க்கலாம், டிவி ரிப்பேர் செலவும் மிச்சம் பிடிக்கலாம்.
13. அரட்டை அரங்கம் - தவிர்ப்பது நல்லது, கொஞ்சம் இருக்கும், மூளையும் மழுங்கிவிடும் அபாயம் இருக்கிறது, இந்தியா பற்றி நமக்கு இருக்கும் பொது அறிவு பெரிய கேள்விக்குறியாகிவிடும். மேலும், பார்த்த பின் ஒரு வாரம் வரை - காதில் 'ஒய்ங்க்' என்று ஒரே இரைச்சலாக இருக்கும். எதற்காக எல்லோரும் கத்தி கத்தி பேசுகிறார்கள்?
14. உங்களோடு உங்கள் குழந்தைகளும் தொடர்களை பார்க்கின்றார்களா, தினமும் பார்க்கின்ற ஒவ்வொரு தொடருக்கும், $1.00 வீதம் உண்டியலில் போட்டு வந்தால், பிற்காலத்தில் அவர்கள் பிழைக்க ஒரு பொட்டிக்கடை வைக்க பணம் தயார்.

-முரளி

Monday, May 14, 2007

நிதர்சனம்

காலையில் எழுந்திருந்து மணி பார்க்கும் போது தூக்கி வாரிப் போட்டது. மணி 7.30. எப்படி அலாரம் அடித்தது தெரியாமல் தூங்கினோம்!.

இது ரொம்ப சகஜம் என்றால், உங்களுக்கு கிரி என்னும் வேதகிரியாகிய என்னைத் தெரியாது.

காலை 5.30 மணிக்கு எழுந்து 6.30 வரை தியானம், யோகா செய்து ஒரு வெதுவெதுப்பான குளியல், 7 லிருந்து - 7.30 வரை பூஜை, காலை சிற்றுண்டி முடித்து, 8 மணிக்கு ஷ¤ போட்டு 'Car Pooling' காருக்காக வாசலில் ஐந்தே ஐந்து நிமிடம் காத்திருப்பு, 6 வது நிமிடம் என் கார் காரஜிலிருந்து கிளம்பி விடும்.

இன்னும் என்னைப் பற்றி சொல்லிக் கொண்டே போனால், இந்த சிறு கதை ஒரு மெகா சீரியல் ஆகிவிடும் வாய்ப்பிருப்பதால், இதை இத்துடன் நிறுத்தி விட்டு கதைக்கு மீண்டும் வருகிறேன்.

"என்ன ஆச்சு இன்னிக்கு? எப்படி அத்தனை நாழி தூங்கினோம்?. இந்த கோமளம் வேற எழுப்பாம விட்டுட்டா!"

"வாசலில் இருந்து இன்னும் நியூஸ் பேப்பர்-கூட எடுக்கல!"

"லீவுக்கு காலேஜிலேர்ந்து வந்த பரத்தும், தீபாவும் எங்க போனாங்க! வீடே வேறிச்சோடி கிடக்கு!" -னு யோசிச்சுண்டே கிளம்ப ஆரம்பிச்சேன்.

மணி 7.30 ஆயுடுத்தேன்னு, தியானம், யோகா எல்லாம் வேண்டாம்னு முடிவு பண்ணி, குளிக்கப் போனேன். பாத் டப்-ல குழாய் எதையும் திறக்கவே முடியலை. ஒரு வழியா குளியல முடிச்சேன்.

மாடில இருந்து, கீழ இறங்கி ஹாலுக்குப் போற வழில கிச்சன் சிங்க்-ல ராத்திரி சாப்பிட்டுட்டு போட்ட தட்டும் மற்ற பாத்திரங்கள் இருந்ததை பார்க்க ஆச்சர்யமா இருந்தது. கோமளம் அந்த விஷயத்தில் ரொம்ப கறார், எவ்வளவு நேரமானாலும், ராத்திரி கிச்சனை ஒழிக்காம வந்து படுத்துக்கவே மாட்டாள். அவளுக்கு ஏதாவது உடம்பு சரியில்லையா! ஒரு வேளை ஏதாவது ஹாஸ்பிடல் போறதா சீட்டு எழுதி வெச்சுட்டு போய் இருக்காளானு பார்த்தேன், அதுவும் காணம்னதும், என்ன ஆச்சுனு கொஞ்ச நாழி குழம்பி போய் யோசிச்சிண்டு இருந்தேன்.

அப்போ, ஹால்ல நேத்து ராத்திரி, சாப்பிட்டுட்டு ரொம்ப நாள் கழிச்சு எல்லோரும் ஒன்னா சேர்ந்து ஜாலியா அரட்டை அடிச்சுண்டு இருந்தது ஞாபகம் வந்தது. பரத்-க்கு வர Semester-ஓட படிப்பு முடிஞ்சுடுது. அவனுக்கு கேம்பஸ் இன்டர்வ்யூ-ல வேலை கிடைச்சிடுச்சு, தீபா-க்கு இன்னும் ஒரு வருஷம் படிப்பு பாக்கி இருக்கு. அந்த ஆண்டவன் க்ருபைல ரெண்டு பேரும் படிப்புல மகா சுட்டி. எனக்கு ஒரு செலவும் இல்லாமல் ஸ்காலர்ஷிப்-ல படிக்கராங்க. நேத்து ராத்திரி, பரத் வேற, என்னை மாதிரி, என் அப்பா மாதிரி, ஆக்ட் பண்ணி பேசினதை பார்த்து, கண்ல ஜலம் வர மாதிரி சிரிச்சது ஞாபகத்துக்கு வந்தது.

"ஆமா அந்த அரட்டையில் எப்போ மாடிக்குப் போனோம், எப்ப தூங்கினோம்கறதே மறந்து போச்சே!".


அப்போ கடிகாரம் மணி அடிச்சதும்தான் 8 ஆச்சுன்னு ஞாபகம் வந்தது. கட கட னு கிளம்பி வாசலுக்கு வரவும், என் ஆபிஸ்ல என் பக்கத்து ஸீட் ஜெஃப் கார் கொண்டு வரவும் சரியா இருந்தது.

நான் கார் கிட்ட வரவும், ஜெஃப் கார் கதவை திறந்து கீழே இறங்கினான். நான் "Hi Jeff Good Morning" னு சொன்னதுக்கு பதிலே சொல்லாமல், கொஞ்ச நேரம் என்னையே வெறிச்சுப் பார்த்தான், அப்புறம், என் பக்கத்து வீட்டு சார்லஸ் கிட்ட போய் ஏதோ பேசிட்டு வந்தான். சரி வண்டில போகும் போது பேசிக்கலாம்னு நானும் விட்டுட்டேன்.

வண்டி எங்க தெரு கடக்கும் போது எதுத்தாப்ல பரத் என் காரை ஓட்டிண்டு வந்ததை பார்த்தேன். பின் ஸீட்-ல தீபா கோமளத்தைத் தாங்கி பிடிச்சுண்டு இருந்தாள். முன் ஸீட்-ல சார்லஸ்-ன் பையன் டோனி இருந்தான். அப்பாடா, ஒன்னும் ப்ரச்சனை இல்ல, எல்லாம் நார்மல்-னு மனசு லேசாயிடுச்சு. பீஸ் போனதும் வீட்டுக்கு போன் பண்ணி என்ன ஆச்சுனு விசாரிச்சுக்கலாம்னு நினைச்சுண்டேன்.

ஒருவழியா ஆபீஸுக்கு வந்தோம், அப்போ, தினமும் எனக்கு வணக்கம் சொல்ற ரிசப்ஸனிஸ்ட் நான் வணக்கம் சொல்லியும் எனக்கு திரும்ப வணக்கம் சொல்லவே இல்லை.

அப்போ எங்க டிவிஷன் டைரக்டர் எட்வர்ட் வந்து "எல்லோரும் கொஞ்சம் மெயின் கான்ஃப்ரன்ஸ் ஹாலுக்கு வாங்க ஒரு முக்கியமான செய்தி சொல்லனும்”-னு உரக்க சொன்னார்.

"ஓருவேளை, போன வாரம், ஒரு பெரிய ப்ராஜெக்ட்-அ ராப்பகலா நானும், என் டீம்ல இருக்கற 10 பேரும் சேர்ந்து முடிச்சு கொடுத்ததுக்கு, இப்ப பாராட்றங்களா! " இல்லைனா ஆபீஸ்ல எல்லோரும் பயந்துண்டு இருந்த மாதிரி, Layoff - னு யோசிச்சுண்டே நான் கான்ஃப்ரன்ஸ் ஹாலுக்கு வந்ததை எல்லோரும் பார்த்து இருக்கணும், ஆனா யாரும் என்னைப் பார்த்து ஒரு வணக்கம் கூட சொல்லலை. சரிதான், நம்பள Layoff பண்ணிட்டாங்க, இந்த வீட்டு லோன் என்ன ஆகும், பசங்க படிப்பு எல்லாம் எப்படி சமாளிக்கப் போறோம் -னு யோசிச்சிண்டு இருந்த போது, "அட என்ன இப்படி பைத்தியக்காரத்தனமா யோசிக்கிறோம்!"-னும் மனசுக்குள்ள தோணித்து. அப்போ கான்ஃப்ரன்ஸ் ஹாலுக்கு எங்க கம்பெனி சேர்மன் வந்தார்.

அவர் வந்து பேசின உடனே எனக்கு என் தலை மேல இடி விழுந்த மாதிரி இருந்தது. கூடவே, காலைல இருந்து இப்ப வரைக்கும் நடந்ததுக்கு அர்த்தம் புரிஞ்சுடுத்து. எனக்கு கோமளத்தையும், பரத்தையும், தீபாவையும் உடனே பார்க்கனும்னு போறேன். என்னடா இவன் பாட்டுக்கு கிளம்பிட்டானே, சேர்மன் என்ன சொன்னார்-னு உங்களுக்கு சொல்லலைனு நினைக்கிறீங்க இல்ல, அவர் ஆங்கிலத்தில சொன்னத தமிழ்ல கொடுத்து இருக்கேன், படிச்சுக்கங்க. அப்பறம் முடிஞ்சா வீட்டுக்கு வாங்க.

"உங்கள் அனைவருக்கும் இந்த காலை நேரத்தில் இந்த செய்தியை சொல்ல மிகவும் வருந்துகிறேன். நம் எல்லோருக்கும் மிகவும் பரிச்சயமான, கடும் உழைப்பாளியான நமது அருமை நண்பர் திரு.கிரி அவர்கள் நேற்று இரவு கடும் மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டு, சிகிச்சை பலனின்றி, இன்று காலை 5.30 மணிக்கு காலமானார் என்பதை மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

அவரைப் பிரிந்து வாடும் ............"

Monday, May 07, 2007

தடயம் - அத்தியாயம் - 4

"அந்தப் படங்கள்ல இருக்கரது யாரு?"

"அருள்மொழி, அது தேவராஜ், இந்த வீட்டு ஓனர், ஏன்"

"அவர் எங்க இப்ப?"

"தெரியலை அதை கண்டுபிடிக்க முயற்சிகள் நடக்குது. "

"இங்க நடந்திருக்கரத வெச்சு பார்த்தா, அவரோட உயிருக்கு ஆபத்து, சீக்கிரம் கண்டு பிடிக்கனும்" என்ற அவருடைய கணிப்பைக் கேட்ட செல்வமும், சந்தானமும் உறைந்து நின்றனர்."

"அருள்மொழி, கொ‎ஞ்சம் புரியரமாதிரி சொல்லுங்க!"

"இந்த வீட்டுல அவங்க எதையும் கலைக்கல, so அவங்க கொள்ளையடிக்க வரலை. அந்த ஆளை அவங்க கொலை செய்திருக்கரதப் பாக்ரப்போ அவங்க ப்ளான், யாருக்கோ மெசேஜ் அனுப்பரது, தேவராஜைக் கடத்திகிட்டு போரது. சீக்கிரம் அவரை கண்டுபிடியுங்க, அவ்ளவுதான் சொல்லமுடியும்."

"thanks அருள்மொழி, நீங்க உங்க ரிப்போர்ட்டை குடுங்க, நாங்க அவனைக் கண்டுபிடிக்கர முயற்சியைத் தீவிரப் படுத்தரோம்."

"செல்வம், தேவராஜ் வீட்டுப் போன், அவனுடைய செல் போன் ரெண்டில இருந்தும் கடந்த ரெண்டு மாசத்துல பண்ணப்பட்ட கால் அத்தனையும் ட்ரேஸ் பண்ணுங்க, வந்த கால் எவ்வளவு, எவ்வளவு நேரம் பேசினாங்கங்ர விவரம் எல்லாம் எடுங்க. அவனோட கம்பேனி பொது மேளாளர் - நாகராஜனை வர வைங்க, அவனோட கம்பேனிக்கு அவன் காணலைங்கரது இப்ப தெரிய வேண்டாம்".

"சரி சார்"

அப்போது சந்தானத்தின் செல் போன் அடித்தது.

"இது எனக்குத் தெரிந்த நம்பர் இல்லையே" என்றபடி சற்று யோசித்தவர், "செல்வம் எதுக்கும் இந்த காலை ட்ரேஸ் பண்ணுங்க" என்றபடி அழைப்பை ஏற்று பேசத் துவங்கினார்.

"ஹலோ, சந்தானம் பேசறேன், யார் பேசரது"

"என்ன தேவராஜைக் காணும்னு தேட ஆரம்பிச்சிட்டியா?"

"யார் நீங்க?, தேவராஜ் எங்க?" என்றபடி செல்வத்திடம் பேசுவது யார் என்பது பற்றி சைகை செய்கிறார்.

"தேவராஜ் இப்ப எங்க கிட்டதான் இருக்கான், அவன் உயிரோட வேணும்னா, நாங்க சொல்றத நீ செய்யனும்."

"என்ன செய்யனும்? அதுக்கு முன்னாடி நான் தேவராஜோட பேசனும்"

"பேசலாம், அதுக்கு முன்னாடி நாங்க சொல்ற ஒரு காரியத்தை நீ பண்ணு, அதை சரியா பண்ணினா அவன்கூட பேச ஏற்பாடு செய்றோம்."

"என்ன செய்யனும்?"

"எதைச் சொன்னாலும் கண்டிப்பா செய்வியா?"

"சொல்லு கண்டிப்பா செய்யரேன்"

"அப்படியா! வெரி குட், பக்கதுல இருக்கர ஒரு கான்ஸ்டபிள டக்குனு உன் துப்பாக்கியால சுட்டு கொன்னுடு"

"வாட்!!!!"

"ரொம்ப கத்தாதே, என்ன கேட்கப் போறோம்ன்னு தெரியாம எதுக்கு வாக்கு குடுக்கர"

"உங்களுக்கு இப்ப என்ன வேணும், எதுக்காக பைக் குமாரைக் கொன்னீங்க?"

"பைக் குமாரா யார் அது?"

"என்ன விளையாடரியா, அவன் உங்காளுன்னு எனக்குத் தெரியும்"

"அப்படியா, எப்படி இவ்வளவு புத்திசாலியா இருக்கீங்க!!"

"போதும் கிண்டல், சொல்லு எதுக்கு அவனை கொன்னீங்க?"

"இதப் பாரு, அவன் நடவடிக்கை எங்களுக்கு ஒத்து வரலை, போட்டு தள்ளிட்டோம். உனக்கு தேவை தேவராஜ், அவனப் பத்தி மட்டும் கேளு தெரியுதா?"

"சொல்லு அவன் எங்க"

"அது அப்பரம், முதல்ல அருள் மொழி சார் எங்களைப் பத்தி என்ன சொல்றாரு"

"அருள்மொழி இங்க இருக்கரது உனக்கு எப்படி தெரியும்! இங்க பாரு, உனக்கு என்ன வேணும்? தேவராஜ மேல ஒரு கீறல் கூட விழாம அவனை எனக்குத் திருப்பித் தரனும், அதுக்கு நான் என்ன செய்யனும். சொல்லு?"

"அருள்மொழி கிட்ட சொல்லு அவர் மண்டைய பிச்சுக்கரமாதிரி இனி நிறைய நடக்கப் போறது முடிஞ்சா அவருடைய அறிவை வெச்சு தடுக்கச் சொல்லு."

"என்ன பண்ணப் போறீங்க சொல்லுங்க"

"அவ்வளவு அவசரமா! தேவராஜ இப்போதைக்கு எதுவும் செய்யரதா இல்லை, நாங்க சொல்றத நீங்க செய்யலைன்னாதான் இருக்கு வேடிக்கை."

"தேவராஜ ஏன் கடத்தி வெச்சிருக்க, சொல்லு"

"சொல்றேன், ஏன்னா அவன் உன் அக்கா பையன். ஆமா, உனக்கு சிட்டில ஒரு வீடு இருக்கு இல்லை, அதுல இன்னிக்கு விஜிலென்ஸ் சோதனை பண்றதா இருக்காங்களாமே அது தெரியுமா?"

"வாட்! என்ன சொல்ற நீ? விஜிலென்ஸ் சோதனையா? எதுக்கு? உனக்கு எப்படி தெரியும்?"

"சந்தானம் மாமா எங்கிட்ட இவ்வளவு கேள்வி கேக்காதே, முடிஞ்சா உன் ப்ரச்சனையை தீத்துக்க, போனா போகுதேன்னு உனக்கு விஷயம் சொல்றேன். அடுத்து என்ன பண்ணலாம்னு நாங்க முடிவு பண்ணியதும் உனக்கு கால் பண்றோம்."

"ஹலோ, ஹலோ போனை கட் பண்ணாதீங்க"

"சே, வெச்சுட்டாங்க, செல்வம், இது கொஞ்சம் தீவிரமான விஷயமாதான் இருக்‏கு, இவங்களுக்கு என் செல் போன் நம்பர் தெரிஞ்சிருக்கு, பைக் குமார் கொலை இவங்களுக்கு சர்வ சாதாரணமா இருக்கு, கொலைக்கு அஞ்சாதவங்களா இருக்காங்க, நல்ல நகைச்சுவை உணர்வு இருக்கு, இங்க நடக்கரது எல்லாம் தெரியுது. நீங்க கால் ட்ரேஸ் பண்ணினது என்ன ஆச்சுன்னு விசாரிங்க, நான் ஒரு கால் பண்ணிட்டு வரேன்" என்றபடி வீட்டை விட்டு பதட்டத்துடன் வெளியே வந்தார். செல்வம் அவரை சந்தேகமாக பார்த்தபடி கண்ட்ரோல் ரூமுக்கு கால் பண்ணி பேசத்துவங்கினார்.


அப்போது அருள்மொழியின் செல்போன் ஒலித்தது. அழைப்பை ஏற்று பேசத் துவங்கிய அவருடைய முகம் சற்று பேயடித்தது போல் ஆனது. இது செல்வத்தின் கண்களில் இருந்து தப்ப வில்லை.

(தொடரும்)