Monday, December 04, 2006

அரங்கேற்றம்

அவங்க ஐந்து பேரும் அந்த கட்டிடத்தை வந்து அடைந்த போது அவங்களுக்கு முன்பே பலர் வந்து சேர்ந்திருப்பது அங்கு நிறுத்தி வைக்கப் பட்ட கார்களைப் பார்த்து தெரிந்தது.

அவர்களுள் முதலில் நடந்து சென்றவர் நடுத்தர வயது, நல்ல வாட்ட சாட்டமாக, ஆஜானுபாகுவாக இருந்தார். நிமிர்ந்த நடை, நேர் கொண்ட பார்வை, நல்ல பொன்னை ஒத்த நிறம், கரிய விழிகள், அடர்ந்த கேசம். அவரை தொடர்ந்தது அவருடைய மனைவி. யாராவது முதல் தடவையா பார்த்தால் பார்த்த மாத்திரத்திலேயே அம்மான்னு அவங்க கால்ல விழக்கூடிய ஒரு கருணை அவங்க முகத்தில கொட்டி கிடந்தது. சற்று குண்டா ஒரு இளைஞன், அவனுடைய கண்களே அவன் மிக மிக அறிவாளி என்று சொல்லும்படி களையாக இருந்தான். அவனோடு அவனுடைய தம்பி போல ஒரு சிறுவன், துருதுரு என அலை பாயும் கண்களோடு என்ன விஷமம் செய்யலாம் என அலைபவன் போல கொள்ளை அழகோடு வந்தான். இவங்க நாலு பேரையும் தொடர்ந்து சற்று தள்ளி அவங்க உதவியாளர் போல ஒருத்தர் வந்தார். அவருக்கும் நடுத்தர வயது, அவருடைய திரட்சியான மார்பும், வலுவான கைகளும், கால்களும் அவர் அவர்களின் பாதுகாப்பாளர் என்பதை சொல்லாமலே தெரிந்தது.
அந்த கட்டிடத்தின் வாயிலில் சற்றுத் தயங்கி அவர்கள் நின்றார்கள். அப்போது சிறுவன் "அப்பா, இந்த இடம்தானா" என்றான்.
"இந்த இடம்தான், அதோ அங்க அவங்க தயாராயிட்டு இருக்காங்க, இப்போ நிகழ்ச்சி ஆரம்பிச்சுடும், வாங்க உள்ளே போகலாம்"
அப்போது பாதுகாப்பாளர், "ஐயா, நானும் உள்ளே வரலாமா?"
"ஏன் என்ன தயக்கம், கண்டிப்பாக வரலாம்"
"இல்லை அழைப்பு உங்களுக்கு மட்டும்தான் அதனால் கேட்டேன்."
"நல்ல வேடிக்கை, நீ இல்லாமல் நான் என் குடும்பத்துடன் எங்கயாவது போனதுண்டா, எப்போ இப்படி பேச கத்துக்கிட்ட?"
"மன்னிச்சிடுங்க, நீங்கள் இந்த நிகழ்ச்சியைப் பார்க்கனும்னு உற்சாகமாக வந்தீங்க, அதை நான் கேள்வி கேட்டு கெடுத்துட்டேன்."
அப்போது இளைஞன், "அப்பா, உள்ள போய் நிகழ்ச்சியைப் பார்க்கலாமா அல்லது, இங்கேயே பேசிண்டு இருக்கலாமா என்பதை சீக்கிரம் முடிவு பண்ணுங்க" என்றான்.

அப்போது, பெரியவர் பாதுகாப்பாளர் பக்கம் திரும்பி ஒரு சிறிய புன்முறுவல் செய்தார், அதன் அர்த்தம் தெரிந்த பாதுகாப்பாளர் ஓடிச் சென்று இரட்டைக் கண்ணாடிக் கதவுகளைத் திறந்து அவர்களை அழைத்துச் சென்றார்.

அவர்கள் உள்ளே நுழைந்ததும் அவர்கள் கண்ணில் பட்டது கம்பீரமான நடராஜர் சிலை. அதைப் பார்த்ததும், பெரியவரும் அவர் மனைவியும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.
அப்போது அவருடைய சிறிய மகன் "அப்பா, நாம கொஞ்சம் உட்காரலாமா" என்றான்.

அதற்கு அவனுடைய அம்மா, "இருப்பா, அப்பா சொல்லுவார் அப்பரம் உட்காரலாம்" என்றார்.

"கொஞ்சம் இருப்பா, அவங்க இப்போ என்கிட்ட ஆசீர்வாதம் வாங்க வருவாங்க அதுக்கு அப்பரம் நாம உட்காரலாம்" என்றார் அப்பா.

அவர் சொல்லி முடித்த போது, ரெண்டு சிறுமிகள் மேடையில் தோன்றினார்கள்.

"போனவருடம் இவங்க அரங்கேற்றம் பாக்கத்தானே நாம இங்க வந்தோம்!" என்றார் அந்த அம்மா.

அதற்கு அந்தப் பெரியவர் ஆம் என தலையசைத்தார்.

அந்த ரெண்டு சிறுமிகளும் மைக் முன்னாடி வந்து பேசத் துவங்கினார்கள்.

அப்போது பாதுகாப்பாளர், "ஐயா இவங்களா! நீங்க சொன்ன அந்த ரெண்டு பேர்"

"மலர்கள் பேசும் போது இடைஞ்சல் செய்யாதே" என்றார் அம்மா.
இல்லை என தலையசைத்தார் அந்தப் பெரியவர்.

தெளிவாக அவர்கள் பேசத் துவங்கினார்கள்.

"திருமதி. உமா செட்டி அவர்களுடைய மாணவிகளாக்கிய மீனா வீரப்பன் மற்றும் ப்ரீதி பாடில் இருவருக்கும் நடக்கும் இந்த நடன அரங்கேற்றத்திற்கு வருகை தந்திருக்கும் அனைவருக்கும் வணக்கம்......."


"தத்தோம் தகதோம், தத்தீத் ......" கணீரென ஜதியின் சப்தம் அந்த அரங்கத்தை நிரப்பியது. அந்த ஐந்து பேரும் கண்மூடி மௌனமாக நின்றனர்.

சுழன்று சுழன்று ஆடியபடி மீனாவும், ப்ரீதியும், மேடையின் நடுவில் வந்து பிறகு, நடராஜர் சிலையை நோக்கி ஆடத்துவங்கினர். இருவரும் ஒருவித மயக்கத்தில் இருப்பது போல இருந்தது, அது ஒரு தவ நிலை என்பது அந்த ஐந்து பேருக்கும் புரிந்தது. கலையுடன் அவர்கள் உணர்வு ஒன்றாமல் இந்த நிலை வராது என்பது தெளிவாகத் தெரிந்தது.

மீனாவும், ப்ரீதியும் நடராஜர் சிலைக்கு மாலை அணிவித்து அவருடைய ஆசீர்வாதத்தை வேண்டி நின்ற போது, பெரியவர் புன்சிரிப்புடன் தன் மனைவியைப் பார்த்தார்.

"என்ன அவங்களுக்கு ஆசீர்வாதம் செய்யலையா"

"தேவி, இவருடைய ஆசீர்வாதம் இல்லாமல் இவர்களால் இன்று இந்த நிகழ்ச்சிக்கு தயாராகியிருக்க முடியுமா?" என்றார் பாதுகாப்பாளர்.

"நந்தியம்பதி, நம் குழந்தைகளை நாம் ஆசீர்வதிக்காமல் வேறு யார் ஆசீர்வதிப்பது"

"சரியாகச் சொன்னாய் தேவி, நாம் அனைவருமே அவர்களை ஆசீர்வதிப்போம்" என்ற பரமன் கண்மூடி ஓம் என ஜெபித்து தன் வலக்கையை தூக்கி ஆசீர்வதித்தார். தேவியும், இளைஞன் விநாயகனும், சிறுவன் கந்தனும், பாதுகாப்பாளர் நந்தி தேவரும் ஆசீர்வதித்தனர்.

மீனாவுக்கும், ப்ரீதிக்கும் ஒரு கண நேரம் சில்லென்ற ஒரு உணர்வு உடல் முழுதும் பரவி பளிச்சென்று விலகியது. உடலில் இருந்து அத்தனை சொர்வும், வலியும், களைப்பும், மனதில் இருந்த தயக்கம் எல்லாம் பட்டென்று விலகியது போல இருந்தது. பளிச்சென்று இருவரும் சிரித்த படி நடனமாடத் துவங்கினர்.

முருகனின் லீலைகளைச் சொல்லி நடனமாடியபோது, பரமன் முருகனைப் பார்த்து, "என்னப்பா, வள்ளியுடன் வந்திருக்கலாம் எனத் தோன்றுகிறதா" என்றார்.

"நான் இன்று உங்களுடன் இங்கு வரப்போவது தெரிந்தவுடன் அவளும், தெய்வயானையும் நமக்கு முன்பே வந்து நடனத்தை ரசித்துக் கொண்டிருக்கின்றனர்" என்றார் கந்தன். "

"அதுதானே பார்த்தேன் வா என்று சொன்னதும் நீ ஒன்றும் சொல்லாமல் என்னுடன் வந்ததின் காரணம் என்னவாக இருக்கும் என்று"

"தந்தையே, என்ன இது விளையாட்டு, உங்களுக்குத் தெரியாமல் இந்த உலகில் ஏதும் நடக்குமா?"

"அப்பாவும் மகனும் பரஸ்பரம் பாராட்டிக் கொள்வது இருக்கட்டும் நாட்டியத்தை கவனியுங்கள்" என்றார் தேவி.

சிறிது நேரம் கழித்து பலர் மேடைக்கு வந்து மீனாவையும், ப்ரீதியையும் பாராட்டி பேசினார்கள், பரமன் புன்சிரிப்புடன் அதைக் கேட்டுக் கொண்டிருந்தார்.

விநாயகன் பரமனைப் பார்த்து, "தந்தையே, எல்லா அரங்கேற்றத்திற்கும் சென்று அனைத்து கலைஞர்களையும் ஆசீர்வதிக்கின்றீர்கள், உங்கள் எண்ணம் என்ன?"

"விநாயகா, இந்த உலகில் தருமம் தழைக்க, பகை, துவேஷம் அழிய, போர் முற்றிலும் நிற்க ஒரே வழி கலை வளர்வதுதான். கலையில் தன்னை அர்ப்பணித்த எவருக்கும், உலகில் எதையும் வெறுக்கவும் தெரியாது, அழிக்கவும் முடியாது. கலை ஒருவரை பண்படுத்தும், பலப்படுத்தும், அன்பைப் பெருக்கும்"

"தெரியும் தந்தையே, இதை நீங்கள் கூறக் கேட்பதில் எனக்கு ஒரு ஆனந்தம், அவ்வளவுதான்."

அப்போது நந்தியம்பதி, "பெரும, மேடையில் பலர் அந்த இரு பெண்மணிகளையும் பாராட்டிப் பேசியபோது நீங்கள் எதற்காகச் சிரித்தீர்கள்"

"அது வேறொன்றும் இல்லை, அவர்களைப் பாராட்டிப் பேசியவர்கள் இந்த அரங்கேற்றத்துடன் இவர்களது கடின உழைப்பு முடிந்து விட்டது போல பேசினார்களே அதை நினைத்து சிரித்தேன். இந்த அரங்கேற்றம் ஒரு துவக்கம்தான், இவர்கள் இத்தனை வருடங்கள் பெற்ற பயிற்சியின் பலன் இந்த அரங்கேற்றம் இல்லை, இந்தப் பயிற்சியின் பலன் இவர்களைப் போன்ற ஆயிரக்கணக்கான பேருக்கு இவர்கள் இந்தக் கலையை கற்பித்து இந்தக் கலையை வளர்ப்பதுதான். "

"அவர்களுக்கு துவக்கத்தில் என்ன ஆசீர்வாதம் செய்தீர்கள்"

"நந்தி உன் கேள்விகளுக்கு முடிவே இல்லையா? நான் அவர்களுக்கு ஆசீர்வாதமாக, இந்தக் கலையை பலருக்கு கற்பித்து, வளர்க்க அவர்கள் மனதில் ஒரு விதையை தூவி விட்டிருக்கிறேன்"

மங்களம் பாடி முடித்து மீனாவும், ப்ரீதியும் அனைவரையும் வணங்கி நிற்க, பரமன் மீண்டும் ஒருமுறை தன் வலக்கையை தூக்கி ஆசீர்வதித்து விட்டு ஒரு புன்முறுவலுடன் அனைவருடன் மறைந்தார்.

- முரளி.

No comments: