Tuesday, December 05, 2006

தடயம் அத்தியாயம்-1

போலீஸ் கமிஷ்னர் சந்தானத்தின் கார் உமையாள் தெருவில் திரும்பும் போது அவருக்கு இன்று ஒரு சோதனையான நாள் என்று தோன்றியது.

அவர் போக வேண்டிய வீட்டின் முன் கூட்டம் கட்டுக்கடங்காமல் சேர்ந்து இருந்தது. போலீஸ் கூட்டத்தை விரட்டிக் கொண்டு இருந்தனர். யாரும் கேட்பதாக இல்லை. எல்லோர் முகத்திலும் நடப்பது என்ன என்று தெரிந்து கொள்ளும் ஆவலும், பரபரப்பும் சேர்ந்து இருந்தது.
கார் நின்றதும் ட்ரைவர் வந்து கதவைத் திறப்பதற்குள் அவரே திறந்து கொண்டு இறங்கினார். அவரைப் பார்த்ததும் அங்கிருந்த 2 கான்ஸ்டபிள்கள் கூட்டத்தை திட்டி அகற்றினர். அவர் அருகில் வந்ததும் விறைப்பாக சல்யூட் செய்தனர். அதை அவர் தலையசைத்து ஏற்றுக்கொண்டார். அப்போது S.I. செல்வம் ஒடி வந்து ஒரு சல்யூட் செய்து மரியாதையாக சற்று தள்ளி நின்று கொண்டார்.
"என்ன செல்வம் எப்படி இருக்கீங்க? பார்த்து 4-5 மாசமாச்சே!. வீட்டில நல்லா இருக்காங்களா?"
"நல்லா இருக்கேன் சார். நீங்க எப்படி இங்க....!" என்று கொஞ்சம் தயக்கமாக இழுத்தார்.
"நான் தேவராஜோட தாய் மாமன்."
செல்வம் அதிர்ந்து போய் "அப்படியா!, I am very sorry Sir" என்றார்.
"It's okay, காலைல news கிடைச்சதும் உடனே வந்தேன். இதுவரைக்கும் என்ன கண்டுபிடிச்சீங்க, யாரையெல்லாம் சந்தேகப் படரீங்க?"
"சார், நிறைய கண்டுபிடிச்சிருக்கோம், உங்க கிட்ட சொல்றதுக்கு கொஞ்சம் வருத்தமாதான் இருக்கு, இங்க யாருக்கும் தேவராஜப்பத்தி அவ்வளவா நல்ல opinion இஇல்லை, முன் கோபி, சண்டைக்கார ஆசாமி இப்படி நிறைய தெரிஞ்சுது. நேத்திக்கு கூட பக்கத்தில இருக்கர மாணிக்கம்னு ஒருத்தர் கிட்ட சண்டை போட்டு அது அடிதடியாகி, மாணிக்கத்துக்கு ஆஸ்பிட்டலில் ட்ரீட்மெண்ட் கொடுக்கரது வரை போயிருக்கு. "
"மாணிக்கம்னா சொன்னீங்க? அவர் சொந்த ஊர் எது? அவர் கூட யார் யார் இருக்காங்கன்னு விசாரிங்க?"
"விசாரிச்சுட்டேன், மாணிக்கம் தங்கவேலு அவரோட முழு பேர். அவருடைய சொந்த ஊர் திருநெல்வேலி டிஸ்ட்ரிக்ட்-ல திருக்குருக்குடி இது கலக்காடுக்கு பக்கம். இங்க அவர், அவருடைய மனைவி சாந்தம்மாள், ஒரு மகன் ஆறுமுகம், ஒரு மகள் வேலம்மாள் இருக்காங்க."
S.I சொன்னதை உன்னிப்பாகக் கேட்ட சந்தானம், "சரி உள்ளே போகலாமா?" என்றவர் சற்று நின்று, "செல்வம், ஒரு நிமிஷம், அந்த மாணிக்கம் இருக்கர இடம் தெரியுமா?"
"தெரியும் சார்"
"அவரை கூட்டிகிட்டு வரச்சொல்லுங்க"
"சார், நான் அவரையும் அவர் மகனையும் ஏற்கனவே, விசாரணைக்காக கொண்டு வந்து நம்ம வேன்-ல உட்கார வெச்சு இருக்கேன். நீங்க வந்திருக்கரத பார்த்ததும், அவங்கள விசாரிக்க இருந்தத நிறுத்தி வெச்சுட்டு உங்ககிட்ட பேச வந்தேன்."
"வெரி குட், நல்லா ரியாக்ட் பண்ணிருக்கீங்க, வாங்க உள்ள போகலாம்"
"கண்டிப்பா". அங்கிருக்கும் ஒரு கான்ஸ்டபிளை கூப்பிட்டு "301 நாங்க வெளில வர வரைக்கும் யாரையும் உள்ளே விடாதே"
"சரிங்க"
சந்தானம் இந்த வீட்டிற்கு ஒரே ஒருமுறை வந்திருக்கிறார். அது 2 வருடங்களுக்கு முன்னால். அப்போதைக்கும் இப்போதைக்கும் வீட்டில் எந்த மாற்றமும் இல்லை. அதே சுத்தம், அதே ஒழுங்கு தெரிந்தது.
அது ஒரு சிறிய வீடு, உள்ளே நுழைந்ததும் ஒரு சிறிய வெராண்டா அதைத் தொடர்ந்து ஒரு ஹால், ஹாலில் தேவராஜின் பல படங்கள் அழகாக ஃப்ரேம் செய்து மாட்டப்பட்டிருந்தது.
"இத்தனைஅழகான சிரிப்பு, இவனைப் போய்..." என்றபடி சந்தானம் பல் கடித்தார். அதை செல்வத்தின் கூரிய கண்கள் கவனித்து நோட் செய்து கொண்டது.
தேவராஜிடம் முன் கோபத்தைத் தவிர எந்த கெட்ட பழக்கமும் இல்லை. சந்தானத்தின் அக்கா மரகதமும் அவளுடைய கணவன் சுதர்சனமும் 4 வருடங்களுக்கு முன் ஒரு கார் ஆக்ஸிடெண்டில் இறந்த போது அவனுக்கு பணத்துக்கு குறையில்லாமல் சேர்த்து வைத்திருந்தார்கள். சந்தானம் எவ்வளவோ சொல்லியும் அவரோடு தங்காமல், கோட்டை மாதிரி இருந்த தன் வீட்டை விட்டுட்டு இந்த வீட்டை வாங்கி, தனியாக இருந்தான். சந்தானமும், தனிமை அவனுக்கு கொஞ்சம் நிம்மதி தரும் என்று விட்டு விட்டார். அது இப்போது இப்படி முடிந்து இருக்கிறது.
சந்தானம் ஹாலின் இடது பக்கத்தில் இருந்த கதவைத் திறந்தார். அது ஒரு சிறிய படுக்கை அறை. படுக்கையில் யாரும் படுத்த அடையாளம் இல்லை. அதன் இடப்புறம் அட்டாச்டு பாத்ரூம், தரையெல்லாம் ஈரமாக இருந்தது.
சந்தானம் திரும்பி செல்வத்தைப் பார்த்தார். "அங்க ஹீட்டர் தண்ணீ திறந்து விட்டு இருந்தது, அது பக்கெட்டிலிருந்து வழிந்து நாங்க வரும் போது பாத்ரூம் ஃபுல்லா தண்ணியாயிருந்தது. நல்ல வேளை இந்த வீட்டு தண்ணி டேங்க்-ல தண்ணி இருந்தது இல்லைனா பெரிய ஆக்ஸிடெண்டாயிருக்கும்." என்றார்.
சந்தானம் பெட்ரூமின் வலப்புறம் இருந்த சமையல் அறைக்கு போனார். சமையல் அறையிலிருந்து தீய்ந்த வாசனை வந்தது. Exhaust fan ஓடிக்கொண்டிருந்தது. ரெண்டு பாத்திரங்கள் அடிப்பிடித்து கருகிப் போயிருந்தது.
சந்தானம் பிறகு ஹாலின் பின் புறக் கதவைத் திறந்தார், அங்கு ஒரு சிறிய ஸ்டோர் ரூம் கோடியில் ஜன்னல் ஓரம் ஒரு வாஷ் பேசின் அதில் நிறைய ரத்தக் கறை. வாஷ் பேசினுக்குப் பக்கத்தில் சுவரில் யாரோ யாரையோ மோதி ரத்தம் வந்து அது ஒரு கோடாக கீழே இறங்கி தரையைத் தொட முடியாமல் நின்று போயிருந்தது. அந்த ரூமின் நடுவில் மேலே செங்குத்தாகப் பார்த்தபடி அவன் கிடந்தான். அவன் உடம்பில் கண்டிப்பாக உயிர் இல்லை. கழுத்தில் ஒரு வெட்டு, கைகளில் நிறைய ரத்தக் கறை, வயிற்றில் 2-3 கத்திக்குத்து வாங்கி, ஒரு பெரிய ரத்தக் குளத்தில் கிடந்தான். உடல் சற்று வெளிர் நிறமாகி இருந்தது. வாய் பிளந்து காற்றுக்காக ஏங்கியது போலக் கிடந்தான், கைகளில் நிறைய வெட்டு காயங்கள். நல்ல முரடனுக்குரிய தோற்றம், உடல் நல்ல கட்டு மஸ்தாக இருந்தது.
அவனைப் பார்த்ததும் சந்தானத்துக்கு ஒரு நிமிடம் இருதயத்துடிப்பு நின்றுவிடும் போல இருந்தது. செல்வம் பக்கம் திரும்பி, "செல்வம், இது தேவராஜ் இல்லை, இது வேறயாரோ, தேவராஜ் எங்க?" என்றார்.

-தொடரும்


-முரளி

1 comment:

மணிமகன் said...

En thala iuvlo late! Novel arumai...