Monday, May 14, 2007

நிதர்சனம்

காலையில் எழுந்திருந்து மணி பார்க்கும் போது தூக்கி வாரிப் போட்டது. மணி 7.30. எப்படி அலாரம் அடித்தது தெரியாமல் தூங்கினோம்!.

இது ரொம்ப சகஜம் என்றால், உங்களுக்கு கிரி என்னும் வேதகிரியாகிய என்னைத் தெரியாது.

காலை 5.30 மணிக்கு எழுந்து 6.30 வரை தியானம், யோகா செய்து ஒரு வெதுவெதுப்பான குளியல், 7 லிருந்து - 7.30 வரை பூஜை, காலை சிற்றுண்டி முடித்து, 8 மணிக்கு ஷ¤ போட்டு 'Car Pooling' காருக்காக வாசலில் ஐந்தே ஐந்து நிமிடம் காத்திருப்பு, 6 வது நிமிடம் என் கார் காரஜிலிருந்து கிளம்பி விடும்.

இன்னும் என்னைப் பற்றி சொல்லிக் கொண்டே போனால், இந்த சிறு கதை ஒரு மெகா சீரியல் ஆகிவிடும் வாய்ப்பிருப்பதால், இதை இத்துடன் நிறுத்தி விட்டு கதைக்கு மீண்டும் வருகிறேன்.

"என்ன ஆச்சு இன்னிக்கு? எப்படி அத்தனை நாழி தூங்கினோம்?. இந்த கோமளம் வேற எழுப்பாம விட்டுட்டா!"

"வாசலில் இருந்து இன்னும் நியூஸ் பேப்பர்-கூட எடுக்கல!"

"லீவுக்கு காலேஜிலேர்ந்து வந்த பரத்தும், தீபாவும் எங்க போனாங்க! வீடே வேறிச்சோடி கிடக்கு!" -னு யோசிச்சுண்டே கிளம்ப ஆரம்பிச்சேன்.

மணி 7.30 ஆயுடுத்தேன்னு, தியானம், யோகா எல்லாம் வேண்டாம்னு முடிவு பண்ணி, குளிக்கப் போனேன். பாத் டப்-ல குழாய் எதையும் திறக்கவே முடியலை. ஒரு வழியா குளியல முடிச்சேன்.

மாடில இருந்து, கீழ இறங்கி ஹாலுக்குப் போற வழில கிச்சன் சிங்க்-ல ராத்திரி சாப்பிட்டுட்டு போட்ட தட்டும் மற்ற பாத்திரங்கள் இருந்ததை பார்க்க ஆச்சர்யமா இருந்தது. கோமளம் அந்த விஷயத்தில் ரொம்ப கறார், எவ்வளவு நேரமானாலும், ராத்திரி கிச்சனை ஒழிக்காம வந்து படுத்துக்கவே மாட்டாள். அவளுக்கு ஏதாவது உடம்பு சரியில்லையா! ஒரு வேளை ஏதாவது ஹாஸ்பிடல் போறதா சீட்டு எழுதி வெச்சுட்டு போய் இருக்காளானு பார்த்தேன், அதுவும் காணம்னதும், என்ன ஆச்சுனு கொஞ்ச நாழி குழம்பி போய் யோசிச்சிண்டு இருந்தேன்.

அப்போ, ஹால்ல நேத்து ராத்திரி, சாப்பிட்டுட்டு ரொம்ப நாள் கழிச்சு எல்லோரும் ஒன்னா சேர்ந்து ஜாலியா அரட்டை அடிச்சுண்டு இருந்தது ஞாபகம் வந்தது. பரத்-க்கு வர Semester-ஓட படிப்பு முடிஞ்சுடுது. அவனுக்கு கேம்பஸ் இன்டர்வ்யூ-ல வேலை கிடைச்சிடுச்சு, தீபா-க்கு இன்னும் ஒரு வருஷம் படிப்பு பாக்கி இருக்கு. அந்த ஆண்டவன் க்ருபைல ரெண்டு பேரும் படிப்புல மகா சுட்டி. எனக்கு ஒரு செலவும் இல்லாமல் ஸ்காலர்ஷிப்-ல படிக்கராங்க. நேத்து ராத்திரி, பரத் வேற, என்னை மாதிரி, என் அப்பா மாதிரி, ஆக்ட் பண்ணி பேசினதை பார்த்து, கண்ல ஜலம் வர மாதிரி சிரிச்சது ஞாபகத்துக்கு வந்தது.

"ஆமா அந்த அரட்டையில் எப்போ மாடிக்குப் போனோம், எப்ப தூங்கினோம்கறதே மறந்து போச்சே!".


அப்போ கடிகாரம் மணி அடிச்சதும்தான் 8 ஆச்சுன்னு ஞாபகம் வந்தது. கட கட னு கிளம்பி வாசலுக்கு வரவும், என் ஆபிஸ்ல என் பக்கத்து ஸீட் ஜெஃப் கார் கொண்டு வரவும் சரியா இருந்தது.

நான் கார் கிட்ட வரவும், ஜெஃப் கார் கதவை திறந்து கீழே இறங்கினான். நான் "Hi Jeff Good Morning" னு சொன்னதுக்கு பதிலே சொல்லாமல், கொஞ்ச நேரம் என்னையே வெறிச்சுப் பார்த்தான், அப்புறம், என் பக்கத்து வீட்டு சார்லஸ் கிட்ட போய் ஏதோ பேசிட்டு வந்தான். சரி வண்டில போகும் போது பேசிக்கலாம்னு நானும் விட்டுட்டேன்.

வண்டி எங்க தெரு கடக்கும் போது எதுத்தாப்ல பரத் என் காரை ஓட்டிண்டு வந்ததை பார்த்தேன். பின் ஸீட்-ல தீபா கோமளத்தைத் தாங்கி பிடிச்சுண்டு இருந்தாள். முன் ஸீட்-ல சார்லஸ்-ன் பையன் டோனி இருந்தான். அப்பாடா, ஒன்னும் ப்ரச்சனை இல்ல, எல்லாம் நார்மல்-னு மனசு லேசாயிடுச்சு. பீஸ் போனதும் வீட்டுக்கு போன் பண்ணி என்ன ஆச்சுனு விசாரிச்சுக்கலாம்னு நினைச்சுண்டேன்.

ஒருவழியா ஆபீஸுக்கு வந்தோம், அப்போ, தினமும் எனக்கு வணக்கம் சொல்ற ரிசப்ஸனிஸ்ட் நான் வணக்கம் சொல்லியும் எனக்கு திரும்ப வணக்கம் சொல்லவே இல்லை.

அப்போ எங்க டிவிஷன் டைரக்டர் எட்வர்ட் வந்து "எல்லோரும் கொஞ்சம் மெயின் கான்ஃப்ரன்ஸ் ஹாலுக்கு வாங்க ஒரு முக்கியமான செய்தி சொல்லனும்”-னு உரக்க சொன்னார்.

"ஓருவேளை, போன வாரம், ஒரு பெரிய ப்ராஜெக்ட்-அ ராப்பகலா நானும், என் டீம்ல இருக்கற 10 பேரும் சேர்ந்து முடிச்சு கொடுத்ததுக்கு, இப்ப பாராட்றங்களா! " இல்லைனா ஆபீஸ்ல எல்லோரும் பயந்துண்டு இருந்த மாதிரி, Layoff - னு யோசிச்சுண்டே நான் கான்ஃப்ரன்ஸ் ஹாலுக்கு வந்ததை எல்லோரும் பார்த்து இருக்கணும், ஆனா யாரும் என்னைப் பார்த்து ஒரு வணக்கம் கூட சொல்லலை. சரிதான், நம்பள Layoff பண்ணிட்டாங்க, இந்த வீட்டு லோன் என்ன ஆகும், பசங்க படிப்பு எல்லாம் எப்படி சமாளிக்கப் போறோம் -னு யோசிச்சிண்டு இருந்த போது, "அட என்ன இப்படி பைத்தியக்காரத்தனமா யோசிக்கிறோம்!"-னும் மனசுக்குள்ள தோணித்து. அப்போ கான்ஃப்ரன்ஸ் ஹாலுக்கு எங்க கம்பெனி சேர்மன் வந்தார்.

அவர் வந்து பேசின உடனே எனக்கு என் தலை மேல இடி விழுந்த மாதிரி இருந்தது. கூடவே, காலைல இருந்து இப்ப வரைக்கும் நடந்ததுக்கு அர்த்தம் புரிஞ்சுடுத்து. எனக்கு கோமளத்தையும், பரத்தையும், தீபாவையும் உடனே பார்க்கனும்னு போறேன். என்னடா இவன் பாட்டுக்கு கிளம்பிட்டானே, சேர்மன் என்ன சொன்னார்-னு உங்களுக்கு சொல்லலைனு நினைக்கிறீங்க இல்ல, அவர் ஆங்கிலத்தில சொன்னத தமிழ்ல கொடுத்து இருக்கேன், படிச்சுக்கங்க. அப்பறம் முடிஞ்சா வீட்டுக்கு வாங்க.

"உங்கள் அனைவருக்கும் இந்த காலை நேரத்தில் இந்த செய்தியை சொல்ல மிகவும் வருந்துகிறேன். நம் எல்லோருக்கும் மிகவும் பரிச்சயமான, கடும் உழைப்பாளியான நமது அருமை நண்பர் திரு.கிரி அவர்கள் நேற்று இரவு கடும் மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டு, சிகிச்சை பலனின்றி, இன்று காலை 5.30 மணிக்கு காலமானார் என்பதை மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

அவரைப் பிரிந்து வாடும் ............"

No comments: