Monday, February 04, 2008

தடயம் - அத்தியாயம் - 9

சந்தானமும், செல்வமும் சென்ற சந்தானத்தின் கார், அருள்மொழியின் வீட்டுத் தெருவில் நுழைந்தது.

அருள்மொழியின் வீட்டு வாசலில் சந்தானத்தை எதிர் பார்த்தது போல நின்றிருந்த அருள்மொழியின் முகத்தில் தெரிந்த கலவரத்தைப் பார்த்து செல்வமும், சந்தானமும் அதிர்ந்தனர்.

"என்ன அருள்மொழி என்ன ஆச்சு?"

"சந்தானம், என் மகளைக் கடத்திட்டாங்க"

"வாட்!! யாரு? எப்ப? எப்படி? எதுக்காக? மேல் விவரம் சொல்லுங்க" என்று பரபரத்தார் சந்தானம்.

"சந்தானம் சார், நீங்க இவ்வளவு எமோஷனலாகி நான் பார்த்ததே இல்லை, கொஞ்சம் அமைதியா இருங்க நான் விசாரிக்கறேன்" என்று அவரை சமாதானப் படுத்தினார் செல்வம்.

"அருள்மொழி சார், போலீஸுக்கு சொல்லிட்டீங்க இல்லை, கவலைப் படாதீங்க இனி நாங்க பாத்துக்கறோம்."

"அதுதான் வேண்டாம்னு நான் சந்தானத்தை கூப்பிட்டேன், நீங்களும் வருவீங்கன்னு தெரியாது. அவங்களோட முதல் கண்டிஷன், நான் போலீஸுக்கு போகக் கூடாதுங்கரது. சந்தானம் என் நண்பர் அதனால அவரை கன்சல்ட் பண்ணலாம்னு வரச்சொன்னேன். கூடவே நீங்களும் வருவீங்கன்னு தோணலை"

"அருள்மொழி சார், போலீஸ் டிப்பார்ட்மெண்ட்டோட தினம் தினம் பழகிட்டு நீங்களே இப்படி ஒரு க்ரிமினலுக்கு பயந்தா, அப்பரம் பொது மக்கள் என்ன செய்வாங்க. முதல்ல, என்ன நடந்ததுன்னு கொஞ்சம் விளக்கமா சொல்லுங்க"

"நான் அங்க தேவராஜ் வீட்டில இருந்தப்போ, என் வீட்டில இருந்து போன் வந்தது, அங்க இருந்து என் மகள் பேசினாள். வீட்டுக்கு உள்ள ஒரு 5-6 பேர் வந்திருக்கரதாகவும், அவங்க என்கிட்ட பேசனும்னு சொன்னதாகவும், ஒவ்வொருத்தரும் கத்தி, துப்பாக்கின்னு வெச்சுருக்கரதாகவும், சொன்னாள். நான் அந்த ஆளுங்க கிட்ட அப்பவே பேசினேன், அவங்க சீக்கிரம் நான் என் வீட்டுக்கு வரனும்ன்னும், இல்லைன்னா என் அடுத்த கேஸ் என் வீட்டில நடக்கப் போற அசம்பாவிதம்தான்னும் சொன்னாங்க. அதனால நான் உடனே கிளம்பி வந்தேன்."

"அப்புறம்"

"நான் நேரா என் வீட்டுக்கு வந்தேன், என் மனைவி மட்டும் தான் அழுதுகிட்டு இருந்தாள். என்ன ஆச்சுன்னு விசாரிச்சதுல வந்தவங்க அவளை மிரட்டி உட்கார வெச்சுட்டு, என் மகளைக் கடத்திகிட்டு போயிட்டாங்கன்னும், நான் வந்ததும் அவங்க கிட்ட பேசினா எல்லாம் சரியாகிடும், என் மகளுக்கு எந்த ப்ரச்சனையும் வராதுன்னும், சொல்லிட்டு போயிருக்காங்க. அவங்க போய் 2-3 நிமிஷத்தில நான் வந்துட்டேன்."

"உங்க மகள் போட்டோ ஒன்னு கொடுங்க, அதோட அவங்க பேர், வயசு விவரம் சொல்லுங்க"

"போட்டோ தரச் சொல்றேன், அவ பெயர், க்ருத்திகா, வயசு, 22."

"க்ருத்திகா, எங்கயாவது வேலைக்குப் போறாங்களா? இல்லை படிச்சுகிட்டிருக்காங்களா?"

"அவ இப்பதான் ஒரு தனியார் கம்பெனில வேலைக்குப் போக ஆரம்பிச்சிருக்கா. கை நிறைய சம்பளம். அவளுக்கு இந்த வருட கடைசில கல்யாணத்திற்கு பார்க்கலாம்னு இருந்தோம், அதுக்குள்ள இப்படி ஆகிப் போச்சு" என்றபடி கலங்கத் துவங்கினார்.

"ஆமா, நான் உங்ககிட்ட பேசினபோது நீங்க ஏன் இதைப் பத்தி எதுவும் சொல்லலை" என்று கேட்டார் சந்தானம்.

"நீங்க அப்ப பேசினபோது அவங்க யாரு என்ன விஷயம்ன்னு தெரிஞ்சுகிட்டதும் உங்ககிட்ட சொல்லாம்னு இருந்துட்டேன். "

"இப்ப அவங்க யாருன்னு கண்டு பிடிச்சிட்டீங்களா?"

"இல்லை. அதனாலதான் நான் உங்களுக்கு போன் பண்ணி பார்த்துட்டு, நீங்க போன் எடுக்கலைன்னதும், செல்வத்துக்கு போன் பண்ணி உங்களை உடனே இங்க வரச் சொன்னேன்."

"அவங்க கிட்ட பேசினீங்களே, அவங்க டிமாண்ட் என்ன"

இதைக் கேட்டவுடன், அவருடைய முகம் சட்டென்று மாறுவதை செல்வம் கவனித்தார்.

"டிமாண்ட்-னு ஒன்னும் இல்லை"

"நிஜமாவா!, ஹூம் இண்ட்ரஸ்டிங்" என்றபடி சந்தானம் யோசிக்கத் துவங்கினார்.

"இப்ப உங்க மனைவி எங்க?"

"உள்ள இருக்கா செல்வம், ஏன் கேக்கரீங்க?"

"அவங்களைப் பார்த்து, கொஞ்சம் விசாரிக்கனும்."

"செல்வம், அவ இப்ப யார்கிட்டயும் பேசர நெலமைல இல்லை. ப்ளீஸ், கொஞ்சம் புரிஞ்சுக்கங்க."

"உங்க வீட்டுப் பெண்ணை தூக்கிட்டு போனவங்க யாரு? அவங்களுக்கு என்ன வேணும்? ஏன் ஒன்னும் டிமாண்ட் பண்ணலைன்னு தெரியனும். அவங்களுக்கு உங்க வீடு தெரிஞ்சிருக்கு, அவங்களை உங்க மகளும் மனைவியும் பார்த்திருக்காங்க, அவங்க அடையாளம் சொன்னா எங்களால அந்த ஆளுங்களை ஈசியா ட்ரேஸ் பண்ண முடியும். அதனால அவங்கள கொஞ்சம் வரச்சொல்லுங்க" இப்போது சந்தானத்தின் குரலில் சற்று கண்டிப்பு தெரிந்தது. இதைக் கேட்டதும், அருள்மொழிக்கும், சற்று திகைப்பாகத்தான் இருந்தது. அதைவிட செல்வத்திற்கு, சந்தானம், நிதானத்திற்கு வந்துவிட்டார் என்பது தெரிந்தது.

அப்போது அருள்மொழி, "சந்தானம், எனக்கு உதவி பண்ணுவீங்கன்னு வரச்சொன்னா, என்னையே கேள்வி கேட்டுட்டு இருக்கீங்க?"

"அருள்மொழி, உங்களை கேள்வி கேக்கரது, உங்களுக்கு ஹெல்ப் பண்றதுக்குத்தான். கொஞ்சம் நிதானமா, எங்க கேள்விக்கு பதில் சொல்லுங்க."


அருள்மொழி சற்று சங்கடத்துடன், "சரி கேளுங்க" என்றார்.

"ஓளிக்காம சொல்லுங்க, அவங்க டிமாண்ட் என்ன?"

"சந்தானம், அதுதான் முன்னாடியே சொன்னேனே, அவங்க டிமாண்ட் னு ஒன்னும் கேக்கலை"

"ரியலி!!, என்ன அருள்மொழி உங்களுக்கு தெரியாதா? யார் பொய் சொல்றாங்க, யார் நெஜம் சொல்றாங்கன்னு எங்க சர்வீஸ்ல, பார்த்த உடனே எங்களால சொல்ல முடியுமே?" என்றார் செல்வம்.

சந்தானம் பார்வையாலேயே செல்வத்தை அடக்கி விட்டு, "அருள், போலீஸ் கிட்ட மறைக்காதீங்க, சொல்லுங்க, அவங்க டிமாண்ட் என்ன?"

"சந்தானம், அப்படி ஒன்னும் இல்லை" என்று கெஞ்ச ஆரம்பித்தது அருள்மொழியின் குரல்.

"டாமிட், சொல்லுங்க அருள். மாட்டிகிட்டு இருக்கிறது உங்க மகள் மட்டும் இல்லை, என் அக்கா மகன் தேவராஜும்தான். ரெண்டு பேரையும் கடத்தியிருக்கிறது ஒரே கும்பல்தான். நீங்க தயங்கர ஒவ்வொரு நிமிஷமும் அவங்க உயிருக்கு ஆபத்து. So, சீக்கிரம் சொல்லுங்க" என்று இறைந்தார் சந்தானம்.

"சரி, இனிமே மூடி மறைச்சு ஒன்னும் ஆகப் போகரதில்லை, நடக்கரது நடக்கட்டும். அவங்க டிமாண்ட் என்னன்னா...." என்று அருள்மொழி சொல்லத் துவங்கினார்.

(தொடரும்)

No comments: