Sunday, May 17, 2009

பாலகுமாரன்

பாலகுமாரன் – 80 களின் துவக்கத்தில் இவருடைய எழுத்தின் பாதிப்பின்றி வளர்வது மிகக் கடினமாக இருந்தது. ஒரே நேரத்தில் பல பத்திரிகைகளில் இவரது எழுத்து மிகப் ப்ரபலமாக வெளிவந்து பலதரப்பட்ட மக்களை புரட்டிப் போட்டது. இவரது பலம், கதை என்பது ஒரு காட்சியாக படிப்பவரின் மனதில் வியாபித்திருக்க வேண்டும் என்று உறுதியாக நம்பி இன்றளவும் அதைப் பின்பற்றிவருவது. சில சமயம் இதுவே இவரது எழுத்தின் பலவீனம் என்றும் நான் கருதுவேன். இவைகளையும் மிஞ்சி இவரது எழுத்து பலரையும் பாதித்து, வெளிஉலகை, வாழ்க்கையை சற்று வித்தியாசமாக பார்க்க வைத்தது.

80 களில் வெளிவந்த மெர்க்குரிப் பூக்களையும், இரும்பு குதிரைகளையும் என்னால் இன்றும் நினைவுகூற முடிகிறது என்றால் அது இவரது எழுத்தின் ஆழம் என்பேன். இவரது எழுத்துக்களைப் போலவே இவரது கதைகளின் தலைப்புகளும் மிக வித்தியாசமான ஒன்று. இவரது எழுத்து மட்டும் இல்லாமல் இவரது கதைகளின் தலைப்பும் இவரை சக எழுத்தாளர்களில் இருந்து எனக்கு இவரை தனித்து அடையாளம் காட்டியது.

தனக்கு எழுத கற்றுத்தந்தது எழுத்தாளர் சுஜாதா என்று இவர் பல இடங்களில் ஒப்புக் கொண்டாலும், “நான் பலருக்கும் சொல்லித் தந்திருக்கிறேன், ஒரே ஒரு பாலகுமாரன்தான் கற்றுக் கொண்டார்” என்று சுஜாதா பாராட்டியது ஒரு சிறப்பு. அதிலும் சுஜாதா என்ற ப்ரமாண்டமான எழுத்தாளரின் எழுத்து ஆதிக்கத்திலிருந்த பத்திரிகைகளில் அவரை மிஞ்சி எழுதவும் அவருடைய எழுத்தின் பாதிப்பு இல்லாமல் எழுதுவதும் இன்றும் சாத்தியம் இல்லாத போது, தான் எழுதத் துவங்கியது முதல் இன்றளவும் தனக்கென ஒரு பாணியை வகுத்துக் கொண்டு எழுதிவருவது இவரது இன்னொரு சிறப்பு.

ஆரம்ப கால கட்டத்தில் இவரது கதைகள் மிகுந்த சமூகத்தை ஒட்டியே இருந்தது அதிலும் சில இன்றைய டெலி சீரியல் போலவே இருந்ததும் உண்டு. அவருடைய கதைகளில் பலதும் நிஜங்களை ஒட்டியே இருப்பது போல இருக்கும். இதற்கு காரணம் அதில் வரும் பல கதாபாத்திரங்கள் நிஜமாகவே அவருக்கு பரிச்சையமானவர்கள் என்பது என் கருத்து.

இவரது தாயுமானவன் கதையில் வரும் கதாநாயகன் குடும்பத்தோடு ஒரு பணக்கார மனிதரின் காரை ஸ்டார்ட் செய்ய தள்ளும் காட்சியை என்னால் இன்றும் நினைவு கூற முடிவதற்கு அந்த வரிகளில் இருந்த எதார்த்தம் காரணம் என்பேன். அக்கதை பின்னாளில் தொலைக்காட்சியில் சீரியலாக நடிகர் சந்திரசேகர் நடித்து வெளி வந்து பெரும் வரவேற்பைப் பெற்றது.

எப்படி ஆதி சங்கரர் தனது சரீரத்தை விட்டு விட்டு ஒரு ராஜாவின் உடலில் புகுந்து கொண்டு இல்லற வாழ்வை பற்றி தெரிந்து கொள்ளச் சென்றாரோ அதை பலரும் பல விதங்களில் சொல்லியிருந்தால்ம் திரு. பாலகுமாரன் அவர்கள் தனது கூடு என்கிற கதையில் பல விதங்களில் தனது கற்பனா சக்தியால் மெருகூட்டியிருப்பார்.
இவருடைய படைப்புகளில் சிறந்த படைப்பாக ‘உடையார்’ 6 பகுதி நாவலைச் சொல்வேன். உடையார், ஸ்ரீராஜராஜச் சோழனின் தஞ்சைப் பெரிய கோவில் பணியையும் அந்தக் கால கட்டத்தையும் ஒட்டிய நிகழ்வுகளை படம் பிடித்து காட்டும் ஒரு முயற்சியே ‘உடையார்’ நாவல். இதில் பாலகுமாரன் அவர்களின் பாணி பல இடங்களில் தென்பட்டாலும் அவைகளையும் விஞ்சி நமக்கு கருவூர்த்தேவரையும், நிதம்ப சூதனி கோவிலையும், காந்தளூர்சாலை கடிகையைய் பற்றியும், செம்பியன் மாதேவி, மதுராந்தகச் சோழன் போன்றோரின் மறைவு பற்றியும் நமக்கு விளக்குகிறது. ராஜராஜச் சோழனின் மனைவி பஞ்சவன் மாதேவியைப் பற்றி விரிவாக விளக்குகிறது. பொன்னியின் செல்வன் படித்து தமிழ் மீது காதலுற்றதாகச் சொல்லும் பாலகுமாரன் நமக்கு தெரியாத ஸ்ரீராஜராஜத் தேவர் பற்றிய பல விஷயங்களை உடையார் மூலம் விவரிக்கிறார். 6 பகுதிகளை ஒரு வெறியோடு படித்தாலும் படித்த பிறகு 6 பகுதிகள்தானா, இன்னும் ஒரு 10 பகுதிகள் எழுதியிருக்கலாமே என்ற ஏமாற்றத்தைத் தடை செய்ய முடியவில்லை.

90 களின் துவக்கத்தில் இவரை ஒரு முறை சென்னை புத்தகக் கண்காட்சியில் சந்திக்கும் வாய்ப்பு கிட்டியது. அப்போது அவரிடம் சில கேள்விகள் கேட்கும் சந்தர்ப்பம் வாய்த்த போது அவரிடம் சற்று காரசாரமாக விவாதம் செய்தேன். அதை இப்போது அசை போடும் போது நான் எவ்வளவு பலமில்லா வாதம் செய்திருக்கிறேன் என்பது தெளிவாகிறது, அவர் எவ்வளவு துல்லியமாக என்னை வெட்டிவிட்டு அடுத்த கேள்வி அடுத்த கேள்வி என்று தாவி விட்டார் என்பதும் புரிகிறது.

இவரைப் பற்றி இன்று நான் எழுத தோன்றியதற்கு காரணம் சமீபத்தில் எனக்கு அறிமுகமான பாஸ்கரனின் நட்பு. இவர் எங்கள் அலுவலகத்தில் தாற்காலிக பணி நிமித்தமாக இந்தியாவிலிருந்து வந்திருந்தார். இவரது அறிமுகம் கிட்டி சில நாட்கள் கடந்த பிறகுதான் இவர் தமிழ்காரர் என்பது தெரிந்தது. இவர் ஒரு காண்ட்ராக்டர் என்றதும் சரி இவரும் ஆந்திராவிலிருந்து வந்திருப்பவர் என்று தவறாக நினைத்துக் கொண்டிருந்தேன். இவரை எனக்கு அறிமுகம் செய்த நண்பர் ராஜேஷ், இவர் எழுத்தாளர் பாலகுமாரனின் சீடர் என்று எனக்கு அறிமுகம் செய்து வைத்தார்.

பிறகு இவரோடு சில நாட்கள் அவரை அறு அறு என்று பேசியே அறுத்த பிறகு எனது தொல்லையைத் தாங்க முடியாமல் “ஆமாம் பாலகுமாரன் ஐயாதான் எனக்கு குரு” என்று சொல்ல அதன் பிறகு என்னோட அறுவை வேகம் பிடித்தது.

இந்த சில நாட்களில் அவரோடு பல விஷயங்களை பற்றி விவாதித்து, பாலகுமாரன் அவர்களின் பல கதைகளை அலசி, மற்ற பல எழுத்தாளர்களின் கதைகளை விவாதித்தும், முடிவில் இந்த அலசல்களினால் சமுதாயத்திற்கும் எனது குடும்பத்திற்கும் என்ன நன்மையோ தெரியவில்லை ஆனால் என்னுள் விவரிக்க முடியாத அளவு மாற்றங்கள் விளைந்திருப்பது நிஜம்.

நண்பர் பாஸ்கரன், பாலகுமாரன் அவர்களின் திருப்பூந்துருத்தி என்ற நாவலை தந்து, படித்து விட்டு என் கருத்தைச் சொல்லும் படி கேட்டார். படிக்க ஆரம்பித்த போது எழுத்தாளரின் பல நாவல்களை போன்றே சாதாரணமாகத் துவங்கிய கதை, சடாரென ஒரு ராக்கெட் வேகத்தில் எங்கோ செல்ல அந்த கதையின் கரு, அதன் கட்டமைப்பு எல்லாம் அவருடைய மற்ற எல்லா கதைகளை ஒட்டியும் ஒட்டாமலும் இருப்பது ஒரு சிறப்பு. இந்தக் கதையில் ஒரு சராசரி மனிதனின் ஆன்ம விசாரத்தை அவருடைய பாணியில் சொல்லியிருக்கிறார். இது சாத்தியமா என்று கேட்ட எனது மாமியார் முதல் இக் கதையை ஒட்டி நான் விவாதித்த பலரும் கேட்ட பல கேள்விகளுக்கு என்னிடம் பதிலில்லை. அக்கேள்விகளுக்கு பதில தரும் திறமையும், தகுதியும் எனக்கில்லை என்பதோடு, எனது பதில்களினால் யாருக்கும் எந்த பலனுமில்லை என்பது என் கருத்து.

இந்தக் கதையை கடவுளைப் பற்றிய தேடல் இருக்கும் அனைவரும் கண்டிப்பாக படிக்க வேண்டிய ஒன்று என்பேன். இக்கதையில் பல கருத்துக்கள் அள்ளித் தெளிக்கப் பட்டிருக்கின்றது, அதில் எது நமக்கு தேவை, எவை நமக்கு பயன் தரும், எதை கொண்டு எதை அளப்பது என்பதை நாமே தேர்வு செய்ய வேண்டிய கட்டாயம் நமக்கு ஏற்படுகிறது.

கடைசியாக ஒன்று தெளிவாகிறது, தமிழோடும் தமிழ் கதைகளிலும் ஈடுபாடு இருப்பவர்களுக்கு பாலகுமாரன் அவர்களைத் தெரியாமல் இருக்க முடியாது. இவரது கதைகள் சுஜாதாவைப் போல பல்சுவையாக, விஞ்ஞானம், தொழில் நுட்பம், மர்மநாவல் என விதம் விதமாக இல்லையே என்று அங்கலாய்க்கும் பலருக்கு எனது பதில், இவரையும் இவரது கதைகளையும் ஏற்பதும் நிராகரிப்பதும் அவரவர் உரிமை ஆனால் ஒரு எழுத்தாளர் இப்படி எழுதுகிறாரே அவர் போல ஏன் இவர் எழுதவில்லை என்று கேட்பது ரொம்ப அபத்தமாகத் தெரிகிறது. சுஜாதா போல பாலகுமாரன் எழுதியிருந்தால் 80 களின் துவக்கத்திலேயே காணாமல் போயிருப்பார். கமலை காப்பியடித்த ராஜ்குமார் என்ற நடிகரும் மோகன் என்ற நடிகரும் ரஜனியை காப்பியடித்த நளினிகாந்த் என்ற நடிகரும் காணாமல் போனது போல. அதே போல அவரது சொந்த வாழ்க்கை நமக்கு ஒரு செய்தி அவ்வளவுதான் அதைத் தாண்டி விமர்சனம் செய்யவோ, விவாதிப்பதோ காலத்தைக் பயனின்றி கடத்த உதவுமே தவிர வாழ்க்கையில் முன்னேற உதவாது.

- முரளி இராமச்சந்திரன்.

1 comment:

நட்புடன் ஜமால் said...

\\கடைசியாக ஒன்று தெளிவாகிறது, தமிழோடும் தமிழ் கதைகளிலும் ஈடுபாடு இருப்பவர்களுக்கு பாலகுமாரன் அவர்களைத் தெரியாமல் இருக்க முடியாது\\


சர்வ நிச்சியமான உண்மை ...