Wednesday, December 26, 2007

தடயம் - அத்தியாயம் - 7

கந்தசாமியையும், குமரேசனையும் பார்த்து சந்தானம், "என்னய்யா! என்ன பெரிசா கண்டு பிடிச்சீங்க? சொல்லுங்க" என்றார்.

அதை கேட்ட கந்தசாமிக்கு முகம் சற்று கறுத்தது.

"என்னைய்யா என்ன கோபமா, ஒரு சின்ன வேலையை செய்துட்டு வரதுக்கு இவ்வளவு பில்டப் பண்றீங்க?"

"அப்படியெல்லாம் இல்லை சார்"

"சரி சொல்லுங்க"

கந்தசாமி பேசத்துவங்கினார்.

"சார், தேவராஜ் பத்தி அக்கம் பக்கத்தில விசாரிச்சதில அவருக்கு கோபக்காரன்னு பேயரே தவிர அவரால யாருக்கும் எந்த தொந்திரவும் அவ்வளவா இல்லை. நேத்திக்குதான் முதல் தடவையா அவருக்கும் பக்கத்தில மாணிக்கம்ன்னு ஒருத்தர் கிட்ட பெரிய வாக்கு வாதத்தில ஆரம்பிச்ச ஒரு சமாச்சாரம் அடிதடில முடிஞ்சிருக்கு. அவரைகூட நம்ம ஸ்டேஷன்ல ரிமாண்டுல வெச்சிருக்கு."

"யோவ், அது எல்லாம் எனக்குத் தெரியும், இதைத்தான் இவ்வளவு நேரம் விசாரிச்சீங்களா? விட்டா தேவராஜ் என்ன வயசு, என்ன கலர் என்ன உயரம் இதெல்லாம்கூட விசாரிச்சீங்களா?"

"செல்வம், என்னய்யா என்ன மாதிரி ஆளுங்களை வெச்சிருக்கீங்க? இதுக்கு இவங்க பண்ண பில்டப்ப பாத்துட்டு நானும் இவங்க நிறைய கண்டு பிடிச்சிருப்பாங்கன்னு நினைச்சேன்."

"சார், அவங்க சொல்ல வந்ததை சொல்லி முடிக்கலாமா?"

சந்தானம் அதற்கு, "சொல்லித் தொலைக்கட்டும்" என்றார் வெறுப்பாக.

கந்தசாமிக்கும், குமரேசனுக்கும் அடிபட்ட உணர்வு கண்ணில் ததும்பியது.

கந்தசாமி மீண்டும் சொல்லத்துவகினார்.

"மாணிக்கத்துடன் நடந்த சண்டை ஈவினிங் 8 - 8:30 க்கு நடந்திருக்கு. அப்பரம், ஒரு 10 - 10:30 மணிக்கு 1 ஆட்டோவில 3 ஆளுங்க வந்திருக்காங்க, அவங்க மாணிக்கம் ஆளுங்களா இல்லையான்னு தெரியலை. இங்க வீட்டு வாசல்ல வந்தவங்களுக்கும் தேவராஜுக்கும் வாக்குவாதம் நடந்திருக்கு. அப்போ தேவராஜ் வீட்டுக்குள்ள கோபமா போயிருக்கார், வந்தவங்களும் அவர் கூடவே உள்ள போயிருக்காங்க. அப்போ மணி ஒரு 11:30 இருக்கும்."

அப்போது சந்தானம் குறுக்கிட்டு. "இருய்யா, எப்படி பக்கத்தில இருந்து பார்த்தமாதிரி டைமெல்லாம் சொல்லிகிட்டு இருக்கே?"

கந்தசாமி சொல்வதற்குள், குமரேசன் குறுக்கிட்டு, "சார், இங்க பக்கத்தில இருக்கிற பல பேருக்கு இன்னிக்கு ஈவினிங் நடந்த சண்டை ஒரு பெரிய விஷயமா இருந்திருக்கு, அவங்க எல்லாம் அங்க அங்க கூடி நின்னு பேசிகிட்டு இருக்கரப்பதான் ஆட்டோவில ஆளுங்க வந்திருக்காங்க"

சந்தானம் சற்று ஆர்வமாகி, "அப்பரம் என்ன ஆச்சு"

கந்தசாமி கண்களால் ஜாடை காட்ட, குமரேசன் தொடர்ந்தார், "ஆட்டோவில வந்தவங்க முதல்ல தேவராஜ்கூட சாதாரணமாகத்தான் பேசிக்கிட்டு இருந்திருக்காங்க, அப்பரம் அவங்கள்ள ஒருத்தன் கொஞ்சம் கோபமா ஏதோ பேசியிருக்கான், அதுல தேவராஜுக்கு கோபம் வந்து அவனை அடிக்க கை ஓங்கியிருக்காரு, அப்போ வந்தவங்க அவரை சமாதானப் படுத்தியிருக்காங்க, அதுல அவருக்கு இன்னும் அதிகமா கோபம் வந்து அவர் அவங்களோட சண்டை போட்டிருக்கார். அக்கம் பக்கத்தில எல்லோரும் பாக்கராங்கன்றது அவருக்கு தெரிஞ்சவுடனே உள்ளே போயிருக்காரு. வந்தவங்களும் அவரோடவே உள்ள போயிருக்காங்க."

செல்வம் உடனே, "வந்தவங்களை அடையாளம் காட்டச்சொன்னா இங்க அக்கம் பக்கத்தில இருக்கரவங்களால முடியுமா?"

"அதை நாங்க கேட்டு அவங்க பேரை குறிச்சு வெச்சிருக்கோம்", என்றார் கந்தசாமி.

சந்தானம் அதற்கு, "வெரி குட், நல்லா யோசிச்சிருக்கீங்க, மேல சொல்லுங்க" என்றார்.

கந்தசாமி தொடர்ந்தார், "உள்ளே போனதும், ஒரு அரை மணி நேரம் எந்த பெரிய சத்தமும் இல்லை, அப்பரம், மொதல்ல தேவராஜோட சண்டை போட்டவன் வெளியில வந்து, டேய் தேவராஜ், இருடா இன்னும் அரை அவுருல நீ என்ன ஆவுர பாருன்னு கத்திட்டு ஆட்டோவை ஓட்டிகிட்டு போயிருக்கான்."

செல்வம், "மத்த ரெண்டு பேரும் என்ன பண்ணினாங்க" என்று கேட்டார்.

அதற்கு கந்தசாமி, "மத்த ரெண்டு பேர்ல ஒருத்தன் வெளியில வந்து, ஏய் உன்னால முடிஞ்சத நீ பாத்துகடாங்கர மாதிரி ஏதோ சொல்லிட்டு உள்ள போயிட்டதா அக்கம் பக்கத்துல இருக்கரவங்க சொல்றாங்க"

"அதுக்கு மேல என்ன நடந்தது"

"ஒரு மணி நேரத்துக்கு பிறகு 2-3 ஆட்டோல 10-12 பேர் வந்திருக்காங்க, வந்து கதவை தட்டி தேவராஜ கத்தி கூப்பிட்டிருக்காங்க, அவர் கூட இருந்த ரெண்டு பேர்ல ஒருத்தன் வந்து கதவை திறந்து, என்னய்யா என்ன பெரிசா கொரலு விடரீங்கன்னு கத்தியிருக்கான். அவனை தள்ளிகிட்டு முதல்ல ஒரு நாலு - அஞ்சு பேரு வீட்டு உள்ள போயிருக்காங்க, அப்பரம் ரொம்ப சத்தமா சண்டை போட்டிருக்காங்க, யாரோ அடி வாங்கரமாதிரி கத்தியிருக்காங்க"

அப்போது சந்தானம், "ஏன்யா, இவ்வளவு நடந்திருக்கு, இங்க அக்கம் பக்கத்தில இருந்த ஒருத்தர்கூட போலிஸை கூப்பிடலயா, என்ன கிண்டல் பண்றாங்களா?" என்றார்.

அதற்கு கந்தசாமி, "சார் அவங்க கிண்டல் பண்ணல, அவங்க போலீஸ் கம்ளைய்ண்ட் கொடுக்காததற்கு காரணம் என்னன்னா...." என்று அவர் சொன்ன காரணத்தை கேட்டு செல்வமும், சந்தானமும் திடுக்கிட்டனர்.

(தொடரும்)

No comments: