Wednesday, December 26, 2007

தடயம் - அத்தியாயம் - 7

கந்தசாமியையும், குமரேசனையும் பார்த்து சந்தானம், "என்னய்யா! என்ன பெரிசா கண்டு பிடிச்சீங்க? சொல்லுங்க" என்றார்.

அதை கேட்ட கந்தசாமிக்கு முகம் சற்று கறுத்தது.

"என்னைய்யா என்ன கோபமா, ஒரு சின்ன வேலையை செய்துட்டு வரதுக்கு இவ்வளவு பில்டப் பண்றீங்க?"

"அப்படியெல்லாம் இல்லை சார்"

"சரி சொல்லுங்க"

கந்தசாமி பேசத்துவங்கினார்.

"சார், தேவராஜ் பத்தி அக்கம் பக்கத்தில விசாரிச்சதில அவருக்கு கோபக்காரன்னு பேயரே தவிர அவரால யாருக்கும் எந்த தொந்திரவும் அவ்வளவா இல்லை. நேத்திக்குதான் முதல் தடவையா அவருக்கும் பக்கத்தில மாணிக்கம்ன்னு ஒருத்தர் கிட்ட பெரிய வாக்கு வாதத்தில ஆரம்பிச்ச ஒரு சமாச்சாரம் அடிதடில முடிஞ்சிருக்கு. அவரைகூட நம்ம ஸ்டேஷன்ல ரிமாண்டுல வெச்சிருக்கு."

"யோவ், அது எல்லாம் எனக்குத் தெரியும், இதைத்தான் இவ்வளவு நேரம் விசாரிச்சீங்களா? விட்டா தேவராஜ் என்ன வயசு, என்ன கலர் என்ன உயரம் இதெல்லாம்கூட விசாரிச்சீங்களா?"

"செல்வம், என்னய்யா என்ன மாதிரி ஆளுங்களை வெச்சிருக்கீங்க? இதுக்கு இவங்க பண்ண பில்டப்ப பாத்துட்டு நானும் இவங்க நிறைய கண்டு பிடிச்சிருப்பாங்கன்னு நினைச்சேன்."

"சார், அவங்க சொல்ல வந்ததை சொல்லி முடிக்கலாமா?"

சந்தானம் அதற்கு, "சொல்லித் தொலைக்கட்டும்" என்றார் வெறுப்பாக.

கந்தசாமிக்கும், குமரேசனுக்கும் அடிபட்ட உணர்வு கண்ணில் ததும்பியது.

கந்தசாமி மீண்டும் சொல்லத்துவகினார்.

"மாணிக்கத்துடன் நடந்த சண்டை ஈவினிங் 8 - 8:30 க்கு நடந்திருக்கு. அப்பரம், ஒரு 10 - 10:30 மணிக்கு 1 ஆட்டோவில 3 ஆளுங்க வந்திருக்காங்க, அவங்க மாணிக்கம் ஆளுங்களா இல்லையான்னு தெரியலை. இங்க வீட்டு வாசல்ல வந்தவங்களுக்கும் தேவராஜுக்கும் வாக்குவாதம் நடந்திருக்கு. அப்போ தேவராஜ் வீட்டுக்குள்ள கோபமா போயிருக்கார், வந்தவங்களும் அவர் கூடவே உள்ள போயிருக்காங்க. அப்போ மணி ஒரு 11:30 இருக்கும்."

அப்போது சந்தானம் குறுக்கிட்டு. "இருய்யா, எப்படி பக்கத்தில இருந்து பார்த்தமாதிரி டைமெல்லாம் சொல்லிகிட்டு இருக்கே?"

கந்தசாமி சொல்வதற்குள், குமரேசன் குறுக்கிட்டு, "சார், இங்க பக்கத்தில இருக்கிற பல பேருக்கு இன்னிக்கு ஈவினிங் நடந்த சண்டை ஒரு பெரிய விஷயமா இருந்திருக்கு, அவங்க எல்லாம் அங்க அங்க கூடி நின்னு பேசிகிட்டு இருக்கரப்பதான் ஆட்டோவில ஆளுங்க வந்திருக்காங்க"

சந்தானம் சற்று ஆர்வமாகி, "அப்பரம் என்ன ஆச்சு"

கந்தசாமி கண்களால் ஜாடை காட்ட, குமரேசன் தொடர்ந்தார், "ஆட்டோவில வந்தவங்க முதல்ல தேவராஜ்கூட சாதாரணமாகத்தான் பேசிக்கிட்டு இருந்திருக்காங்க, அப்பரம் அவங்கள்ள ஒருத்தன் கொஞ்சம் கோபமா ஏதோ பேசியிருக்கான், அதுல தேவராஜுக்கு கோபம் வந்து அவனை அடிக்க கை ஓங்கியிருக்காரு, அப்போ வந்தவங்க அவரை சமாதானப் படுத்தியிருக்காங்க, அதுல அவருக்கு இன்னும் அதிகமா கோபம் வந்து அவர் அவங்களோட சண்டை போட்டிருக்கார். அக்கம் பக்கத்தில எல்லோரும் பாக்கராங்கன்றது அவருக்கு தெரிஞ்சவுடனே உள்ளே போயிருக்காரு. வந்தவங்களும் அவரோடவே உள்ள போயிருக்காங்க."

செல்வம் உடனே, "வந்தவங்களை அடையாளம் காட்டச்சொன்னா இங்க அக்கம் பக்கத்தில இருக்கரவங்களால முடியுமா?"

"அதை நாங்க கேட்டு அவங்க பேரை குறிச்சு வெச்சிருக்கோம்", என்றார் கந்தசாமி.

சந்தானம் அதற்கு, "வெரி குட், நல்லா யோசிச்சிருக்கீங்க, மேல சொல்லுங்க" என்றார்.

கந்தசாமி தொடர்ந்தார், "உள்ளே போனதும், ஒரு அரை மணி நேரம் எந்த பெரிய சத்தமும் இல்லை, அப்பரம், மொதல்ல தேவராஜோட சண்டை போட்டவன் வெளியில வந்து, டேய் தேவராஜ், இருடா இன்னும் அரை அவுருல நீ என்ன ஆவுர பாருன்னு கத்திட்டு ஆட்டோவை ஓட்டிகிட்டு போயிருக்கான்."

செல்வம், "மத்த ரெண்டு பேரும் என்ன பண்ணினாங்க" என்று கேட்டார்.

அதற்கு கந்தசாமி, "மத்த ரெண்டு பேர்ல ஒருத்தன் வெளியில வந்து, ஏய் உன்னால முடிஞ்சத நீ பாத்துகடாங்கர மாதிரி ஏதோ சொல்லிட்டு உள்ள போயிட்டதா அக்கம் பக்கத்துல இருக்கரவங்க சொல்றாங்க"

"அதுக்கு மேல என்ன நடந்தது"

"ஒரு மணி நேரத்துக்கு பிறகு 2-3 ஆட்டோல 10-12 பேர் வந்திருக்காங்க, வந்து கதவை தட்டி தேவராஜ கத்தி கூப்பிட்டிருக்காங்க, அவர் கூட இருந்த ரெண்டு பேர்ல ஒருத்தன் வந்து கதவை திறந்து, என்னய்யா என்ன பெரிசா கொரலு விடரீங்கன்னு கத்தியிருக்கான். அவனை தள்ளிகிட்டு முதல்ல ஒரு நாலு - அஞ்சு பேரு வீட்டு உள்ள போயிருக்காங்க, அப்பரம் ரொம்ப சத்தமா சண்டை போட்டிருக்காங்க, யாரோ அடி வாங்கரமாதிரி கத்தியிருக்காங்க"

அப்போது சந்தானம், "ஏன்யா, இவ்வளவு நடந்திருக்கு, இங்க அக்கம் பக்கத்தில இருந்த ஒருத்தர்கூட போலிஸை கூப்பிடலயா, என்ன கிண்டல் பண்றாங்களா?" என்றார்.

அதற்கு கந்தசாமி, "சார் அவங்க கிண்டல் பண்ணல, அவங்க போலீஸ் கம்ளைய்ண்ட் கொடுக்காததற்கு காரணம் என்னன்னா...." என்று அவர் சொன்ன காரணத்தை கேட்டு செல்வமும், சந்தானமும் திடுக்கிட்டனர்.

(தொடரும்)

தடயம் - அத்தியாயம் - 6

"என்ன செல்வம், என்ன விஷயம்"

"வெளியில என்கொயரி பண்ணிகிட்டிருக்கர நம்ம ஆளுங்கள வந்து ரிப்போர்ட் கொடுக்க சொல்லிட்டு இருக்கேன், அருள் மொழி வீட்டுல ஏதோ ப்ரச்சனைன்னு போயிருக்கார், உங்கள கால் பண்ண சொல்லிட்டு போயிட்டார், துரை உங்கள உடனே கால் பண்ணச் சொன்னார். உங்களுக்கு என்ன சார் ப்ரச்சனை?"

"உங்க கிட்ட எனக்கு ப்ரச்சனைன்னு எப்ப சொன்னேன்" என்று சீறினார்.

"இல்லை அவசரமா போன் போன் பேச வெளியில போனீங்களேன்னு கேட்டேன், சாரி சார்"

"இட்ஸ் ஓகே."

"அருள் மொழிகிட்ட பேசிடறேன்"

"அப்ப துரை சார்?"

"அவரு எங்க போயிடப்போறாரு, நீங்க மெசேஜ் சொல்லிடீங்கல்ல, இனி நான் பாத்துக்கறேன்."

"ஹலோ, அருள், நான் சந்தானம் பேசறேன், என்ன மேட்டர்,.."

"..."

"இல்லை இங்க நானும் செல்வமும்தான் இருக்கோம்"

"..."

"அப்படியா!"

"..."

"நீங்க எங்க இருக்கீங்க? வீட்லயா?"

"..."

"ஹெல்ப்புக்கு யாரையாவது அனுப்பட்டுமா? செல்வத்தை அனுப்பட்டுமா?"

"..."

"டோண்ட் வொர்ரி, நான் வரட்டுமா?"

"..."

"ஓகே, வீட்டுக்கு போய் நிலவரம் தெரிஞ்சதும் எனக்கு போன் பண்ணுங்க"

"என்ன சார் என்ன ப்ரச்சனை?"

"செல்வம், உங்களுக்கு ஒரு விஷயம் தெரியனும்னா, நானே சொல்றேன், இப்போதைக்கு ப்ரச்சனை ஒன்னும் இல்லை. அருளோட அஸிஸ்டெண்ட்ஸ் என்ன கண்டுபிடிச்சாங்கன்னு விசாரிங்க, அடுத்து என்ன பண்ணலாம்னு யோசிங்க, அத விட்டுட்டு தேவையில்லாம எங்கிட்ட கேள்வி கேக்கரதெல்லாம் வேண்டாம்"

"ஹலோ, துரை, நான் சந்தானம் பேசறேன், கால் பண்ணியிருந்தீங்களாம், என்ன விஷயம்"

"நான் கால் பண்ணல, செல்வம்தான் பண்ணினார். ஆமா, என்ன கண்டு பிடிச்சீங்க, செல்வமும், அவர் ஸ்டேஷன் ஆளுங்களும், நல்லா கோ-ஆப்பரேட் பண்றாங்களா?"

"ஷூர், நல்லா கோ-ஆப்பரேட் பண்றாங்க, இங்க நடந்திருக்கரது ஒரு ப்ளாண்டு ஆப்பரேஷன், அருளை பர்சனலா வரச்சொல்லி தடயங்கள எடுக்க சொல்லியிருக்கேன். கூடிய சீக்கிரம் அவங்கள நெருங்கிடுவோம். நான் அப்பரம் கால் பண்றேன்."

"செல்வம், துரைக்கு எதுக்கு போன் பண்ணினீங்க, நான் அப்பவே சொன்னேன் நாம ரெண்டு பேரும் ஒன்னா இந்த கேஸ்ல ஒர்க் பண்ணப் போறோம்னு அப்பரம் எதுக்கு என்னை கேக்காம அவருக்கு போன் பண்ணினீங்க?"

"சார், நாம ரெண்டு பேரும் ஒன்னா ஒர்க் பண்ணலாம், ஆனா துரை என்னுடைய மேலதிகாரி, அவருக்கு நான் இங்க நடக்கரது பற்றி அடிக்கடி ரிப்போர்ட் தரனும்கரது அவருடைய ஆர்டர், அதை நான் மீற முடியாது. So இனி என்ன பண்றதுங்கரதை பத்தி யோசிப்போம்."

வாசலில் பாலன் தயங்கிய படி இருந்தார், சந்தானம் அவரை பார்த்து, "யாருயா? என்ன வேணும், சீனியர் ஆபிசர்ஸ் பேசிகிட்டு இருக்கோம், கதவைத் தட்டிட்டு உள்ள வரனும்னு தெரியாது?"

"சாரி சார், என் பேர் பாலன், செல்வம் சார் ஸ்டேஷன்ல ஏட்டா வேலை செய்யறேன். வேளியில விசாரிக்க அனுப்பின கான்ஸ்டபிள்ஸ வரச் சொன்னாரு அவங்க வந்திட்டாங்க, உள்ள வரச் சொல்லாமான்னு கேக்க வந்தேன்."

"கொஞ்சம் வெளியில இருங்க நான் வந்து பாக்கரேன்" என்ற சந்தானம், "செல்வம், என்ன நடக்குது இங்க, எதுக்கு இப்ப அவங்கள என்கொயரிய முடிச்சுட்டு வரச்சொன்னீங்க? தேவராஜ் என்ன ஆனான்னு தெரியக்கூடாதுன்னு முடிவு பண்ணிட்டீங்களா?"

"சார், துரை சார்தான் இன்னும் ரெண்டு மணி நேரத்தில ஒரு ரிப்போர்ட் கேட்டாரு அதனால இவங்க என்ன கண்டு பிடிச்சாங்கங்கரத தெரிஞ்சுகிட்டா நல்லதுன்னு அவங்கள வரச்சொன்னேன்."

சந்தானம், பாலனைப் பார்த்து, "யோவ் அவங்கள உள்ள வரச்சொல்லு"


உள்ளே வந்த கந்தசாமியையும், குமரேசனையும் பார்த்து சந்தானம், "என்னய்யா! என்ன பெரிசா கண்டு பிடிச்சீங்க? சொல்லுங்க" என்றார்.
அதை கேட்ட கந்தசாமிக்கு முகம் சற்று கறுத்தது.
(தொடரும்)

தடயம் - அத்தியாயம் - 5

.... அப்போது அருள்மொழியின் செல்போன் ஒலித்தது. அழைப்பை ஏற்று பேசத் துவங்கிய அவருடைய முகம் சற்று பேயடித்தது போல் ஆனது. இது செல்வத்தின் கண்களில் இருந்து தப்ப வில்லை.

"நிஜமாவா சொல்றே"

"ஆமாங்க"

"நீ கவலைப் படாதே, நான் எவ்வளவு சீக்கிரம் அங்க வரமுடியுமோ அவ்வளவு சீக்கிரம் அங்க வரேன். போனை அவங்க கிட்ட குடு"

"இத பாருங்க உங்களுக்கு எது வேணும்னாலும் என்னை கேளுங்க, என் வைஃப்க்கு எதுவும் தெரியாது, அவளை தொந்தரவு செய்யாதீங்க"

"...."

"நான் அங்க வர்ரதுக்கு எப்படியும் இன்னும் ஒரு ரெண்டு மணி நேரம் ஆகும்"


"..."

"ப்ளீஸ், நான் சொல்றத கொஞ்சம் தயவு பண்ணி கேளுங்க, நான் அங்க வந்த பிறகு அதைப் பத்தி முடிவு பண்ணலாம்"

"..."

"சரி நான் இன்னும் ஒரு மணி நேரத்துக்குள்ள அங்க வரேன்" என்றபடி செல்போனை கட் செய்தார்.

"என்ன அருள் மொழி சார், என்ன ப்ரச்சனை"

திடுக்கிட்டு போய், "ஒன்னும் இல்லை செல்வம், வீட்ல ஒரு சின்ன ப்ராப்ளம், வைஃப் தனியா இருக்காங்க அதனால அவங்களுக்கு என் உதவி தேவைப் படுது, நான் கொஞ்சம் வீட்டுக்கு போய்ட்டு வரேன்"

"அப்ப இதையெல்லாம் யார் பாத்துப்பாங்க?"

"அதுக்கு நான் என் அசிஸ்டெண்ட் ஒருத்தரை விட்டுட்டு போறேன், அவருக்கு ஏதாவது உதவி தேவைன்னா எனக்கு போன் பண்ணச்சொல்றேன். சந்தானம் எங்க?"

"அவர் தோட்டத்துல ஒரு பர்சனல் கால் அட்டெண்ட் பண்ணிட்டு இருக்கார், இப்ப வந்திடுவார்"

"அவர் கிட்ட நான் அவசரமா வீட்டுக்குப் போறேன்னு சொல்லிடுங்க, அவரை எனக்கு கால் பண்ண சொல்லுங்க"

"சரி"
அவர் கிளம்பியதைப் பார்த்த உடன் செல்வம் தன் கைத் தொலைபேசியை எடுத்து மேலதிகாரி துரைசாமியை அழைத்து பேசத் துவங்கினார்.

"என்ன செல்வம் அங்க எல்லாம் ஸ்மூத்தா போகுதா?"

"எஸ் சார்"

"உங்க இஷ்டத்துக்கு எதுவும் பண்ணிடாதீங்க, எங்கிட்ட கேட்டுட்டு செய்யுங்க, ஆமா, யாரைகேட்டு அருள்மொழியை direct ஆ கூப்பிட்டீங்க?"

"சந்தானம் சார், ஆர்டர் பண்றமாதிரிதான் செய்றோம் சார். அவர்தான் அருள்மொழியை வர வழைச்சார், அது என் ப்ளான் இல்லை சார்"

"சந்தானத்து கிட்ட போனை குடுங்க"

"சார் அவர் பர்சனல் கால் அட்டெண்ட் பண்ணிக்கிட்டு இருக்கார்"

"சரி அருள்கிட்ட போனை கொடுங்க"

"சார் அவர் அவசர வேலைன்னு சொல்லிட்டு இப்பதான் வீட்டுக்கு போனார், அவர் வந்ததும் உங்களுக்கு போன் பேசச் சொல்றேன்."

"யோவ் என்னய்யா நடக்குது அங்க, ஒரு கொலை நடந்திருக்குது, ஸ்பெஷல் பர்மிஷன் வாங்கிட்டு வந்த கமிஷ்னர் அரட்டை அடிச்சுகிட்டு இருக்கார், தடவியல் நிபுணர் வீட்டுக்கு போயிட்டார், ஆக ரெண்டு பேரும் ஸ்பாட்ல இல்ல, அப்படித்தானே"

"சார் நான் இருக்கேன், அருள்மொழியோட அஸிஸ்டெண்ட்ஸ் 2 பேர் இருக்காங்க, கான்ஸ்டபிள்ஸ் அக்கம் பக்கத்தில விசாரிச்சுகிட்டு இருக்காங்க"

"செல்வம், இன்னும் ஒரு ரெண்டு மணி நேரத்திலல எனக்கு full report தயார் பண்ணி என் டேபிள்ல இருக்கனும். சந்தானம் ஃப்ரீயானதும் எனக்கு கால் பண்ணச் சொல்லுங்க"

"ஓகே சார்" என்றபடி இணைப்பைத் துண்டித்தார்.

செல்வம் வாசலுக்கு வந்து கான்ஸ்டபிளிடம், "பாலன், வெளியில விசாரிச்சுட்டு இருக்கர நம்ம ஆளுங்கள இன்னும் ஒரு 20 அல்லது 30 நிமிஷம் கழிச்சு இங்க வரச்சொல்லுங்க, எனக்கு அவங்க என்ன கண்டு பிடிச்சிருக்காங்கன்னு தெரியனும்"

"சரி சார், நான் இப்பவே போய் சொல்லிடரேன், வெளியில காவலுக்கு 2 கான்ஸ்டபிள்ஸ்தான் இருக்காங்க போதுமா, இல்லை B3 ல இருந்து ஆளுங்கல வரவழைக்கவா?"

"இருங்கரவங்க போதும், தேவைப்பட்டா சொல்லிக்கலாம்"


"சார், சந்தானம் சார் வர்ராரரு"

"என்ன செல்வம், என்ன விஷயம்"

"வெளியில என்கொயரி பண்ணிகிட்டிருக்கர நம்ம ஆளுங்கள வந்து ரிப்போர்ட் கொடுக்க சொல்லிட்டு இருக்கேன், அருள் மொழி வீட்டுல ஏதோ ப்ரச்சனைன்னு போயிருக்கார், உங்கள கால் பண்ண சொல்லிட்டு போயிட்டார், துரை உங்கள உடனே கால் பண்ணச் சொன்னார். உங்களுக்கு என்ன சார் ப்ரச்சனை?"

"உங்க கிட்ட எனக்கு ப்ரச்சனைன்னு எப்ப சொன்னேன்" என்று சீறினார்.

(தொடரும்)

Saturday, September 01, 2007

ஆன்மீகச் சொற்பொழிவுகள்

ராதே க்ருஷ்ணா

கலிபோர்னியாவிலிருந்து இயங்கும் Global Organization for Divinity (GOD) (http://godivinity.org/) என்ற தொண்டு நிறுவனமும், தமிழ்நாட்டில் சென்னையிலிருந்து ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் பக்தர்களால் நடத்தப் பட்டு வரும் மதுரமுரளி-சைதன்ய மஹா ப்ரபு நாம பிக்க்ஷா கேந்ரா (http://www.madhuramurali.org/) (http://www.namadwaar.org/) என்ற தொண்டு நிறுவனமும் இணைந்து இரு ஆன்மீகப் பேச்சாளர்களைக் கொண்டு அமெரிக்காவின் பல பகுதிகளில் சொற்பொழிவுகளை நடத்த உள்ளனர். சொற்பொழிவுகள், தமிழ், ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் நடைபெற உள்ளது. இவர்கள் பற்றிய மற்ற விவரங்களை இணைக்கப்பட்டுள்ள படங்களில் இருந்து அறிந்து கொள்ளலாம்.





இவர்கள் செப்டம்பர் 12ம் தேதிமுதல் 23-ம் தேதிவரை நமது ரிச்மண்டில் தங்கியிருந்து சொற்பொழிவுகள் நிகழ்த்த உள்ளார்கள். அது பற்றிய விவரங்கள் கீழே தரப்பட்டுள்ளது. மேலும் விவரம் வேண்டுவோர் மாலதி முரளியை (804) 747-7997 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளவும் அல்லது malamurali@yahoo.com
என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும் அல்லது http://godivinity.org/ என்ற வலைதளத்திலிருந்து தெரிந்து கொள்ளவும்.


Radhe Krishna

Non profit organization Global Organization for Divinity (GOD) (http://godivinity.org/) of California, joins hands with a non profit organization madhuramurali - Chaithanya Maha Prabhu Naama Bhiksha Kendra of Chennai (http://www.madhuramurali.org/) (www.namadwaar.org) run by the followers of Sri Sri Muralidhara Swamiji in bringing two spiritual speakers in giving Discourses at various places in USA. The Discourses will be in Tamil, English and Hindi. To learn more about the speakers and the mission, please refer to the attached flyers.

The speakers will be staying in Richmond from 12th September to 23rd September giving discourses on various topics. The Schedules are detailed below. If you require further details on the satsang schedules, please contact Malathi Murali @ (804) 747-7997 or send an email to malamurali@yahoo.com or visit http://godivinity.org/.


Bhakthi Margam and Power of Nama in English by Sri Ramanujam

On Tuesday, 9/18/07 7:00 pm – 8:00 pm @ Twin Hickory Area Library, 5001 Twin Hickory Road, Glen Allen, VA 23059 [Directions]

Bhaktha Vijayam in Tamil by Kumari Poornima

On Wednesday, 9/19/07 7:00 pm – 8:30 pm @ Residence of Malathi Murali, 5517, Holman Dr, Glen Allen, VA 23059 [Directions]

Guru Bhakthi in Tamil by Kumari Poornima
Thursday, 9/20/07 - 7:00 pm - 8:00 pm @ Twin Hickory Area Library, 5001 Twin Hickory Road, Glen Allen, VA 23059 [Directions]

Bhajan & Satsang by Kumari Poornima
On Friday, 9/21/07 - 7:00 pm - 8:30 pm @ Residence of Malathi Murali, 5517, Holman Dr, Glen Allen, VA 23059 [Directions]

Beyond Meditation – Self Discovery in English by Kumari Poornima
On Saturday, 9/22/07 - 3:00 pm – 5:00pm @ Twin Hickory Area Library, 5001 Twin Hickory Road, Glen Allen, VA 23059 [Directions]

Unshackling the mind for everlasting peace in English by Kumari Poornima
On Sunday, 9/23/07 - 4:00 pm – 6.00 pm @ Hindu Center of Virginia, 6051 Springfield Road, Glen Allen, VA 23060. [Directions]

Sita Kalyanam by Kumari Poornima
On Monday, 9/24/07 - 7.00 pm – 8.30 pm @ Residence of Malathi Murali, 5517, Holman Dr, Glen Allen, VA 23059 [Directions]

ராதே க்ருஷ்ணா

Thursday, May 17, 2007

சன் டிவி தொடர்களை ரசிப்பது (அ) சகிப்பது எப்படி

முதலில் உங்கள் வீட்டில் சன் டிவி இணைப்பு இல்லையா! ஜோராக ஒரு முறை கை தட்டி விட்டு விலகி விடுங்கள்- பெரியவர்களானால் நல்ல ஒரு நாவல் படிக்கவும், இளைஞர், இளைஞிகள் எனில் வேறு நல்ல வேலை இருந்தால் பார்க்கவும், சிறுவர், சிறுமியர் எனில் அழுது அடம் பிடித்து Cartoon சானல் மாற்ற சொல்லி பார்க்கவும்.

தலையெழுத்தை நொந்து நொந்து சன் டிவி பார்ப்பவர்களுக்கும், சன் டிவி க்கு ஒரு வருடம் contract போட்டு தலையை சுவற்றில் இடித்துக் கொள்ளலாமா அல்லது நல்ல பாறாங்கல்லில் மோதலாமா என்று இருக்கும் மற்றவர்களுக்கும் முதலில் ஒரு சின்ன யோசனை - டிவியை தூக்கி பரணையில் sorry இங்கு பரண் கிடையாதே so, attic-ல் போட்டு விட்டு அக்கடா
என்று இருங்கள். அதுவும் முடியாதவர்கள் கீழ்கண்ட சில விதிகளை பின் பற்றினால் சன் டிவியின் சகிக்காத தொடர்களை ரசிப்பதோடு, வாழ்வில் அல்சர், இரத்த கொதிப்பு போன்ற வியாதி இனி வாராது அந்த சூரிய பகவான் அருள் புரிவார்.

முக்கிய விதி:
எல்லா தொடரிலும் வரும் எல்லா கதாபாத்திரங்களுக்கும், கீ கொடுத்தால் ஓடும் கை கடிகாரத்திற்கு எவ்வளவு மூளை உண்டோ, அவ்வளவு மூளைதான் அவர்களுக்கும்.
இனி உப விதிகள்:

1. எந்த தொடரும் இப்போது முடியும் என எப்போதும் சொல்ல முடியாது, எனவே, தொடர் இப்படி முடியுமா, அப்படி முடியுமா என மண்டை குழம்புவது ஒரு கால விரயம்.
2. எல்லா தொடரிலும் ஒரு வில்லன் (அ) வில்லி உண்டு, அவர்கள் கொஞ்சம் கோணல் சிரிப்பு சிரித்தபடி கடித்து கடித்து வசனம் பேசுவார்கள், சீனுக்கு சீன் உதார் விடுவார்கள்.
3. எல்லா தொடரிலும் ஒரு ஏழை அப்பா (அ) அம்மா நிச்சயம் உண்டு, அவர்கள் எப்போதும் அழுதபடியே இருப்பார்கள்.
4. எல்லா தொடரிலும் நன்கு படித்த, பணக்கார பெண்ணும், வாசக்கதவை மூடி, டெலிஃபோனை பிடுங்கி விட்டால், வெளியே போகத்தெரியாமல் பூனை மாதிரி வீட்டிலேயே இருப்பாள்.
5. எல்லா தொடரிலும், யாராவது ஒருவருக்கு ஒரு சின்ன வீடு இருக்கும்.
6. எல்லா கதாநாயகனுக்கும் ஒரு கெட்ட Flashback கட்டாயம் இருக்கும்.
7. எல்லா தொடரிலும் ஒன்று (அ) இரண்டு கதாபாத்திரங்கள் ரொம்ப நல்லவர்கள், ஆனால் எப்போதாவதுதான் வருவார்கள்.
8. ஒரு தொடரில் வரும் நடிகர், நடிகைகள் எல்லா தொடர்களிலும் வருவார்கள், so, ஒரே தொடரை தொடர்ந்து பார்க்காமல், ஒரு நாளைக்கு ஒன்று என்று பார்த்தாலும் புரியும்.
9. எல்லா மாயாஜால தொடர்களிலும், சமீபத்திய எல்லா ஆங்கிலப்பட ட்ரிக் கண்டிப்பாக இருக்கும்.
10. அம்மன், முருகன் தொடர்களை பார்ப்பதை தவிர்க்கவும், பார்த்தால், கொஞ்சம் இருக்கும் கடவுள் பக்தியும் போய், நாஸ்திகராவது சர்வ நிச்சயம்.
11. நியூஸ் - நடு நடுவே வரும் கேள்வி - பதில் மட்டும் OK, so, mute செய்து விடுவது உத்தமம்.
12. Pepsi - தொடரை ரசிக்க, பாடல்காட்சி வரும் வரை mute செய்து விடுவது ரொம்ப நல்லது, செய்தால், கேட்கப்படும் அபத்த கேள்விகளை கேட்டு எதையாவது எடுத்து டிவி மேல் வீசலாம் என்ற கோபம் வராது தவிர்க்கலாம், டிவி ரிப்பேர் செலவும் மிச்சம் பிடிக்கலாம்.
13. அரட்டை அரங்கம் - தவிர்ப்பது நல்லது, கொஞ்சம் இருக்கும், மூளையும் மழுங்கிவிடும் அபாயம் இருக்கிறது, இந்தியா பற்றி நமக்கு இருக்கும் பொது அறிவு பெரிய கேள்விக்குறியாகிவிடும். மேலும், பார்த்த பின் ஒரு வாரம் வரை - காதில் 'ஒய்ங்க்' என்று ஒரே இரைச்சலாக இருக்கும். எதற்காக எல்லோரும் கத்தி கத்தி பேசுகிறார்கள்?
14. உங்களோடு உங்கள் குழந்தைகளும் தொடர்களை பார்க்கின்றார்களா, தினமும் பார்க்கின்ற ஒவ்வொரு தொடருக்கும், $1.00 வீதம் உண்டியலில் போட்டு வந்தால், பிற்காலத்தில் அவர்கள் பிழைக்க ஒரு பொட்டிக்கடை வைக்க பணம் தயார்.

-முரளி

Monday, May 14, 2007

நிதர்சனம்

காலையில் எழுந்திருந்து மணி பார்க்கும் போது தூக்கி வாரிப் போட்டது. மணி 7.30. எப்படி அலாரம் அடித்தது தெரியாமல் தூங்கினோம்!.

இது ரொம்ப சகஜம் என்றால், உங்களுக்கு கிரி என்னும் வேதகிரியாகிய என்னைத் தெரியாது.

காலை 5.30 மணிக்கு எழுந்து 6.30 வரை தியானம், யோகா செய்து ஒரு வெதுவெதுப்பான குளியல், 7 லிருந்து - 7.30 வரை பூஜை, காலை சிற்றுண்டி முடித்து, 8 மணிக்கு ஷ¤ போட்டு 'Car Pooling' காருக்காக வாசலில் ஐந்தே ஐந்து நிமிடம் காத்திருப்பு, 6 வது நிமிடம் என் கார் காரஜிலிருந்து கிளம்பி விடும்.

இன்னும் என்னைப் பற்றி சொல்லிக் கொண்டே போனால், இந்த சிறு கதை ஒரு மெகா சீரியல் ஆகிவிடும் வாய்ப்பிருப்பதால், இதை இத்துடன் நிறுத்தி விட்டு கதைக்கு மீண்டும் வருகிறேன்.

"என்ன ஆச்சு இன்னிக்கு? எப்படி அத்தனை நாழி தூங்கினோம்?. இந்த கோமளம் வேற எழுப்பாம விட்டுட்டா!"

"வாசலில் இருந்து இன்னும் நியூஸ் பேப்பர்-கூட எடுக்கல!"

"லீவுக்கு காலேஜிலேர்ந்து வந்த பரத்தும், தீபாவும் எங்க போனாங்க! வீடே வேறிச்சோடி கிடக்கு!" -னு யோசிச்சுண்டே கிளம்ப ஆரம்பிச்சேன்.

மணி 7.30 ஆயுடுத்தேன்னு, தியானம், யோகா எல்லாம் வேண்டாம்னு முடிவு பண்ணி, குளிக்கப் போனேன். பாத் டப்-ல குழாய் எதையும் திறக்கவே முடியலை. ஒரு வழியா குளியல முடிச்சேன்.

மாடில இருந்து, கீழ இறங்கி ஹாலுக்குப் போற வழில கிச்சன் சிங்க்-ல ராத்திரி சாப்பிட்டுட்டு போட்ட தட்டும் மற்ற பாத்திரங்கள் இருந்ததை பார்க்க ஆச்சர்யமா இருந்தது. கோமளம் அந்த விஷயத்தில் ரொம்ப கறார், எவ்வளவு நேரமானாலும், ராத்திரி கிச்சனை ஒழிக்காம வந்து படுத்துக்கவே மாட்டாள். அவளுக்கு ஏதாவது உடம்பு சரியில்லையா! ஒரு வேளை ஏதாவது ஹாஸ்பிடல் போறதா சீட்டு எழுதி வெச்சுட்டு போய் இருக்காளானு பார்த்தேன், அதுவும் காணம்னதும், என்ன ஆச்சுனு கொஞ்ச நாழி குழம்பி போய் யோசிச்சிண்டு இருந்தேன்.

அப்போ, ஹால்ல நேத்து ராத்திரி, சாப்பிட்டுட்டு ரொம்ப நாள் கழிச்சு எல்லோரும் ஒன்னா சேர்ந்து ஜாலியா அரட்டை அடிச்சுண்டு இருந்தது ஞாபகம் வந்தது. பரத்-க்கு வர Semester-ஓட படிப்பு முடிஞ்சுடுது. அவனுக்கு கேம்பஸ் இன்டர்வ்யூ-ல வேலை கிடைச்சிடுச்சு, தீபா-க்கு இன்னும் ஒரு வருஷம் படிப்பு பாக்கி இருக்கு. அந்த ஆண்டவன் க்ருபைல ரெண்டு பேரும் படிப்புல மகா சுட்டி. எனக்கு ஒரு செலவும் இல்லாமல் ஸ்காலர்ஷிப்-ல படிக்கராங்க. நேத்து ராத்திரி, பரத் வேற, என்னை மாதிரி, என் அப்பா மாதிரி, ஆக்ட் பண்ணி பேசினதை பார்த்து, கண்ல ஜலம் வர மாதிரி சிரிச்சது ஞாபகத்துக்கு வந்தது.

"ஆமா அந்த அரட்டையில் எப்போ மாடிக்குப் போனோம், எப்ப தூங்கினோம்கறதே மறந்து போச்சே!".


அப்போ கடிகாரம் மணி அடிச்சதும்தான் 8 ஆச்சுன்னு ஞாபகம் வந்தது. கட கட னு கிளம்பி வாசலுக்கு வரவும், என் ஆபிஸ்ல என் பக்கத்து ஸீட் ஜெஃப் கார் கொண்டு வரவும் சரியா இருந்தது.

நான் கார் கிட்ட வரவும், ஜெஃப் கார் கதவை திறந்து கீழே இறங்கினான். நான் "Hi Jeff Good Morning" னு சொன்னதுக்கு பதிலே சொல்லாமல், கொஞ்ச நேரம் என்னையே வெறிச்சுப் பார்த்தான், அப்புறம், என் பக்கத்து வீட்டு சார்லஸ் கிட்ட போய் ஏதோ பேசிட்டு வந்தான். சரி வண்டில போகும் போது பேசிக்கலாம்னு நானும் விட்டுட்டேன்.

வண்டி எங்க தெரு கடக்கும் போது எதுத்தாப்ல பரத் என் காரை ஓட்டிண்டு வந்ததை பார்த்தேன். பின் ஸீட்-ல தீபா கோமளத்தைத் தாங்கி பிடிச்சுண்டு இருந்தாள். முன் ஸீட்-ல சார்லஸ்-ன் பையன் டோனி இருந்தான். அப்பாடா, ஒன்னும் ப்ரச்சனை இல்ல, எல்லாம் நார்மல்-னு மனசு லேசாயிடுச்சு. பீஸ் போனதும் வீட்டுக்கு போன் பண்ணி என்ன ஆச்சுனு விசாரிச்சுக்கலாம்னு நினைச்சுண்டேன்.

ஒருவழியா ஆபீஸுக்கு வந்தோம், அப்போ, தினமும் எனக்கு வணக்கம் சொல்ற ரிசப்ஸனிஸ்ட் நான் வணக்கம் சொல்லியும் எனக்கு திரும்ப வணக்கம் சொல்லவே இல்லை.

அப்போ எங்க டிவிஷன் டைரக்டர் எட்வர்ட் வந்து "எல்லோரும் கொஞ்சம் மெயின் கான்ஃப்ரன்ஸ் ஹாலுக்கு வாங்க ஒரு முக்கியமான செய்தி சொல்லனும்”-னு உரக்க சொன்னார்.

"ஓருவேளை, போன வாரம், ஒரு பெரிய ப்ராஜெக்ட்-அ ராப்பகலா நானும், என் டீம்ல இருக்கற 10 பேரும் சேர்ந்து முடிச்சு கொடுத்ததுக்கு, இப்ப பாராட்றங்களா! " இல்லைனா ஆபீஸ்ல எல்லோரும் பயந்துண்டு இருந்த மாதிரி, Layoff - னு யோசிச்சுண்டே நான் கான்ஃப்ரன்ஸ் ஹாலுக்கு வந்ததை எல்லோரும் பார்த்து இருக்கணும், ஆனா யாரும் என்னைப் பார்த்து ஒரு வணக்கம் கூட சொல்லலை. சரிதான், நம்பள Layoff பண்ணிட்டாங்க, இந்த வீட்டு லோன் என்ன ஆகும், பசங்க படிப்பு எல்லாம் எப்படி சமாளிக்கப் போறோம் -னு யோசிச்சிண்டு இருந்த போது, "அட என்ன இப்படி பைத்தியக்காரத்தனமா யோசிக்கிறோம்!"-னும் மனசுக்குள்ள தோணித்து. அப்போ கான்ஃப்ரன்ஸ் ஹாலுக்கு எங்க கம்பெனி சேர்மன் வந்தார்.

அவர் வந்து பேசின உடனே எனக்கு என் தலை மேல இடி விழுந்த மாதிரி இருந்தது. கூடவே, காலைல இருந்து இப்ப வரைக்கும் நடந்ததுக்கு அர்த்தம் புரிஞ்சுடுத்து. எனக்கு கோமளத்தையும், பரத்தையும், தீபாவையும் உடனே பார்க்கனும்னு போறேன். என்னடா இவன் பாட்டுக்கு கிளம்பிட்டானே, சேர்மன் என்ன சொன்னார்-னு உங்களுக்கு சொல்லலைனு நினைக்கிறீங்க இல்ல, அவர் ஆங்கிலத்தில சொன்னத தமிழ்ல கொடுத்து இருக்கேன், படிச்சுக்கங்க. அப்பறம் முடிஞ்சா வீட்டுக்கு வாங்க.

"உங்கள் அனைவருக்கும் இந்த காலை நேரத்தில் இந்த செய்தியை சொல்ல மிகவும் வருந்துகிறேன். நம் எல்லோருக்கும் மிகவும் பரிச்சயமான, கடும் உழைப்பாளியான நமது அருமை நண்பர் திரு.கிரி அவர்கள் நேற்று இரவு கடும் மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டு, சிகிச்சை பலனின்றி, இன்று காலை 5.30 மணிக்கு காலமானார் என்பதை மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

அவரைப் பிரிந்து வாடும் ............"

Monday, May 07, 2007

தடயம் - அத்தியாயம் - 4

"அந்தப் படங்கள்ல இருக்கரது யாரு?"

"அருள்மொழி, அது தேவராஜ், இந்த வீட்டு ஓனர், ஏன்"

"அவர் எங்க இப்ப?"

"தெரியலை அதை கண்டுபிடிக்க முயற்சிகள் நடக்குது. "

"இங்க நடந்திருக்கரத வெச்சு பார்த்தா, அவரோட உயிருக்கு ஆபத்து, சீக்கிரம் கண்டு பிடிக்கனும்" என்ற அவருடைய கணிப்பைக் கேட்ட செல்வமும், சந்தானமும் உறைந்து நின்றனர்."

"அருள்மொழி, கொ‎ஞ்சம் புரியரமாதிரி சொல்லுங்க!"

"இந்த வீட்டுல அவங்க எதையும் கலைக்கல, so அவங்க கொள்ளையடிக்க வரலை. அந்த ஆளை அவங்க கொலை செய்திருக்கரதப் பாக்ரப்போ அவங்க ப்ளான், யாருக்கோ மெசேஜ் அனுப்பரது, தேவராஜைக் கடத்திகிட்டு போரது. சீக்கிரம் அவரை கண்டுபிடியுங்க, அவ்ளவுதான் சொல்லமுடியும்."

"thanks அருள்மொழி, நீங்க உங்க ரிப்போர்ட்டை குடுங்க, நாங்க அவனைக் கண்டுபிடிக்கர முயற்சியைத் தீவிரப் படுத்தரோம்."

"செல்வம், தேவராஜ் வீட்டுப் போன், அவனுடைய செல் போன் ரெண்டில இருந்தும் கடந்த ரெண்டு மாசத்துல பண்ணப்பட்ட கால் அத்தனையும் ட்ரேஸ் பண்ணுங்க, வந்த கால் எவ்வளவு, எவ்வளவு நேரம் பேசினாங்கங்ர விவரம் எல்லாம் எடுங்க. அவனோட கம்பேனி பொது மேளாளர் - நாகராஜனை வர வைங்க, அவனோட கம்பேனிக்கு அவன் காணலைங்கரது இப்ப தெரிய வேண்டாம்".

"சரி சார்"

அப்போது சந்தானத்தின் செல் போன் அடித்தது.

"இது எனக்குத் தெரிந்த நம்பர் இல்லையே" என்றபடி சற்று யோசித்தவர், "செல்வம் எதுக்கும் இந்த காலை ட்ரேஸ் பண்ணுங்க" என்றபடி அழைப்பை ஏற்று பேசத் துவங்கினார்.

"ஹலோ, சந்தானம் பேசறேன், யார் பேசரது"

"என்ன தேவராஜைக் காணும்னு தேட ஆரம்பிச்சிட்டியா?"

"யார் நீங்க?, தேவராஜ் எங்க?" என்றபடி செல்வத்திடம் பேசுவது யார் என்பது பற்றி சைகை செய்கிறார்.

"தேவராஜ் இப்ப எங்க கிட்டதான் இருக்கான், அவன் உயிரோட வேணும்னா, நாங்க சொல்றத நீ செய்யனும்."

"என்ன செய்யனும்? அதுக்கு முன்னாடி நான் தேவராஜோட பேசனும்"

"பேசலாம், அதுக்கு முன்னாடி நாங்க சொல்ற ஒரு காரியத்தை நீ பண்ணு, அதை சரியா பண்ணினா அவன்கூட பேச ஏற்பாடு செய்றோம்."

"என்ன செய்யனும்?"

"எதைச் சொன்னாலும் கண்டிப்பா செய்வியா?"

"சொல்லு கண்டிப்பா செய்யரேன்"

"அப்படியா! வெரி குட், பக்கதுல இருக்கர ஒரு கான்ஸ்டபிள டக்குனு உன் துப்பாக்கியால சுட்டு கொன்னுடு"

"வாட்!!!!"

"ரொம்ப கத்தாதே, என்ன கேட்கப் போறோம்ன்னு தெரியாம எதுக்கு வாக்கு குடுக்கர"

"உங்களுக்கு இப்ப என்ன வேணும், எதுக்காக பைக் குமாரைக் கொன்னீங்க?"

"பைக் குமாரா யார் அது?"

"என்ன விளையாடரியா, அவன் உங்காளுன்னு எனக்குத் தெரியும்"

"அப்படியா, எப்படி இவ்வளவு புத்திசாலியா இருக்கீங்க!!"

"போதும் கிண்டல், சொல்லு எதுக்கு அவனை கொன்னீங்க?"

"இதப் பாரு, அவன் நடவடிக்கை எங்களுக்கு ஒத்து வரலை, போட்டு தள்ளிட்டோம். உனக்கு தேவை தேவராஜ், அவனப் பத்தி மட்டும் கேளு தெரியுதா?"

"சொல்லு அவன் எங்க"

"அது அப்பரம், முதல்ல அருள் மொழி சார் எங்களைப் பத்தி என்ன சொல்றாரு"

"அருள்மொழி இங்க இருக்கரது உனக்கு எப்படி தெரியும்! இங்க பாரு, உனக்கு என்ன வேணும்? தேவராஜ மேல ஒரு கீறல் கூட விழாம அவனை எனக்குத் திருப்பித் தரனும், அதுக்கு நான் என்ன செய்யனும். சொல்லு?"

"அருள்மொழி கிட்ட சொல்லு அவர் மண்டைய பிச்சுக்கரமாதிரி இனி நிறைய நடக்கப் போறது முடிஞ்சா அவருடைய அறிவை வெச்சு தடுக்கச் சொல்லு."

"என்ன பண்ணப் போறீங்க சொல்லுங்க"

"அவ்வளவு அவசரமா! தேவராஜ இப்போதைக்கு எதுவும் செய்யரதா இல்லை, நாங்க சொல்றத நீங்க செய்யலைன்னாதான் இருக்கு வேடிக்கை."

"தேவராஜ ஏன் கடத்தி வெச்சிருக்க, சொல்லு"

"சொல்றேன், ஏன்னா அவன் உன் அக்கா பையன். ஆமா, உனக்கு சிட்டில ஒரு வீடு இருக்கு இல்லை, அதுல இன்னிக்கு விஜிலென்ஸ் சோதனை பண்றதா இருக்காங்களாமே அது தெரியுமா?"

"வாட்! என்ன சொல்ற நீ? விஜிலென்ஸ் சோதனையா? எதுக்கு? உனக்கு எப்படி தெரியும்?"

"சந்தானம் மாமா எங்கிட்ட இவ்வளவு கேள்வி கேக்காதே, முடிஞ்சா உன் ப்ரச்சனையை தீத்துக்க, போனா போகுதேன்னு உனக்கு விஷயம் சொல்றேன். அடுத்து என்ன பண்ணலாம்னு நாங்க முடிவு பண்ணியதும் உனக்கு கால் பண்றோம்."

"ஹலோ, ஹலோ போனை கட் பண்ணாதீங்க"

"சே, வெச்சுட்டாங்க, செல்வம், இது கொஞ்சம் தீவிரமான விஷயமாதான் இருக்‏கு, இவங்களுக்கு என் செல் போன் நம்பர் தெரிஞ்சிருக்கு, பைக் குமார் கொலை இவங்களுக்கு சர்வ சாதாரணமா இருக்கு, கொலைக்கு அஞ்சாதவங்களா இருக்காங்க, நல்ல நகைச்சுவை உணர்வு இருக்கு, இங்க நடக்கரது எல்லாம் தெரியுது. நீங்க கால் ட்ரேஸ் பண்ணினது என்ன ஆச்சுன்னு விசாரிங்க, நான் ஒரு கால் பண்ணிட்டு வரேன்" என்றபடி வீட்டை விட்டு பதட்டத்துடன் வெளியே வந்தார். செல்வம் அவரை சந்தேகமாக பார்த்தபடி கண்ட்ரோல் ரூமுக்கு கால் பண்ணி பேசத்துவங்கினார்.


அப்போது அருள்மொழியின் செல்போன் ஒலித்தது. அழைப்பை ஏற்று பேசத் துவங்கிய அவருடைய முகம் சற்று பேயடித்தது போல் ஆனது. இது செல்வத்தின் கண்களில் இருந்து தப்ப வில்லை.

(தொடரும்)

Tuesday, December 26, 2006

தடயம் - அத்தியாயம் - 3

"செல்வம், அதப் பாருங்க!"

அதைப் பார்த்த செல்வம், அதிர்ந்து போய் நின்றார்.

ஓரு பெரிய கத்தி ரத்தத்துடன் அந்த மூலையில் கிடந்தது.

"சார் அந்த கத்தி இவ்வளவு நேரம் இங்க இல்லை! திடீர்னு இங்க எப்படி வந்தது? ஒரே மர்மமா இருக்கு!" என்றார்.

"அந்த ஜன்னல் கதவு கொஞ்சம் திறந்து இருக்கு பாருங்க"

செல்வம் அந்த ஜன்னலைத் திறக்கப் போனார்.

"அதைத் தொடாதீங்க அதுல கைரேகை இருக்க சான்ஸ் இருக்கு. மொதல்ல நான் சொன்ன விஷயங்களை கவனிங்க. ஃபோரன்ஸிக் லேப்க்கு ஃபோன் பண்ணி, அருள்மொழியை கான்டாக்ட் பண்ணி அவரால இங்க வரமுடியுமான்னு கேளுங்க. நான் வீட்டுக்குப் பின்பக்கம் போறேன், என்னை அங்க வந்து பாருங்க" என்றபடி அவர் பின் பக்க கதவை தன் கர்சீஃபால் தள்ளி திறந்து கொண்டு சென்றார்.

சந்தானம் குறிப்பிட்ட அருள்மொழி, தடவியல் துறையில் ஒரு சாதாரண உதவியாளராக 20 வருடங்களுக்கு முன்பு சேர்ந்தவர் தன் தனித் திறமையால் இன்று மிக அத்துறையின் இயக்குனராக இருக்கிறார். அவருடைய ஃபோட்டோகிராஃப்பிக் மெமரி, மற்றும் எதையும் சற்று வித்தியாசமாக பார்க்கத் தெரிந்த கலை அவரை சந்தானத்துக்கு மிக நெருங்கியவராக்கியது. அருள்மொழியின் திறமையால் முடிவுக்கு வரமுடியாத பல கேஸ்களை காவல்துறை சுலபமாக தீர்த்து வைத்திருக்கிறது. அருள்மொழி யாருக்காகவும் தன் குறிப்புகளை மாற்றி எழுத மாட்டார். அவருக்கு சட்டத்தின் முன்பு அனைவரும் சமம் என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை. இது செலவத்துக்கும் தெரியும். செல்வத்துக்கு இப்போது சந்தானத்தின் மீது முழு நம்பிக்கை வந்தது.

செல்வம் தன் செல்ஃபோனை எடுத்து ஃபோரன்ஸிக் லேபுக்கு பேசினார், அருள்மொழி இல்லை என்றதும் அவரை செல்ஃபோனில் பிடித்து நடந்ததைச் சொல்லி அவரை வரமுடியுமா என சந்தானம் கேட்டதைச் சொன்னார். அதற்கு அவர், "சந்தானம், என்னை தனிப்பட்டு வரச் சொல்றார்னா இது முக்கியமான கேஸாதான் இருக்கும். நான் ஒரு 15 நிமிஷத்தில அங்க வந்திடறேன். எதையும் கலைக்காம பார்த்துக்கங்க. மறுபடி அந்த அட்ரஸை சொல்லுங்க" என்று கேட்டுக் கொண்டார்.

பிறகு செல்வம் ஃபோட்டோகிராபருக்கு ஃபோன் செய்து தேவராஜின் வீட்டிற்கு வரச்சொன்னார். ஒரு கான்ஸ்டபிள கூப்பிட்டு, "பாலன், வேன்ல இருக்கர ரெண்டு பேரையும், நம்ம ஸ்டேஷனுக்கு கொண்டு போங்க ரைட்டர் வரதன் வந்திருப்பார் அவர்கிட்ட இவங்கள இந்த கேஸ்ல சஸ்பெக்ட்டா ட்ரீட் பண்ணி லாக்கப்ல வெக்க சொல்லிட்டு நீங்க சீக்கிரமா வாங்க".

"சரி சார்"

"வெளில இருக்கர கான்ஸ்டபிள்ஸ்ல 2 பேரை அக்கம் பக்கத்துல சந்தேகப் படற மாதிரி யார் இருந்தாலும் விசாரிக்கச் சொல்லுங்க, ரெண்டு பேரை வாசல்ல காவலுக்கு வெச்சுட்டு, நீங்க ட்ரைவர் சாமிகண்ணுவ கூட்டிகிட்டு போங்க"

"சரிங்க சார்"
செல்வமும், சந்தானத்தை போலவே பின் பக்க கதவை தன் கர்சீஃபால் தள்ளி திறந்து கொண்டு சென்றார். அங்கு சந்தானம் திறந்து இருந்த ஜன்னலின் அருகில் குனிந்து எதையோ பார்த்துக் கொண்டு இருந்தார்.
"ஐயா, தடவியல் நிபுணருக்கும், புகைப்படம் எடுப்பவருக்கும் சொல்லியிருக்கிறேன். உங்களுக்கு ஏதும் தடயம் கிடைத்ததா?"
"செல்வம் என்ன ஆச்சு? ஏன் திடீர்னு சுத்தத் தமிழ்ல பேசரீங்க?"
"ஒன்னும் இல்லை, இந்த கதைல ரொம்ப ஆங்கிலம் கலந்து இருக்குன்னு புகார் வந்திருக்காம், சுத்தத் தமிழ்ல பேசச் சொல்லி கதாசிரியர் சொன்னார், சரின்னு முயற்சி பண்ணினேன், ஆனா எனக்கே என்ன சொல்றேன்னு புரியல"
"இந்த கொலை கேசுல கொஞ்சம் கூட நாம இன்னும் கண்டு பிடிக்கல நீங்க என்னடான்னா விளையாட்டா பேசிட்டிருக்கீங்க, கொஞ்சம் தீவிரமா யோசிப்போமா?"
"சாரி சார், ஃபோரன்ஸிக் லேபுக்கும், ஃபோட்டோ கிராஃப்பருக்கும் சொல்லிட்டேன். நீங்க என்ன கண்டுபிடிச்சீங்க?"
"இங்க இருந்துதான் அந்த கத்தியை உள்ள போட்டிருக்காங்க, ஜன்னலுக்கு பக்கமா ஒருத்தர் நின்ன ஷூ மார்க் இருக்கு, ஜன்னல்ல பிரிண்ட்ஸ் இருக்கலாம், கைக்கு க்ளவுஸ் போட்டிருந்தா ப்ரிண்ட்ஸ் இருக்காது, இப்படி கொலை பண்ற கும்பல் க்ளவுஸ் போட்டுட்டு வர சான்ஸ் ரொம்ப கம்மி. கத்தில இருக்கர ப்ளட் செத்து கிடக்கர பைக் குமார்தான்னு சரி பார்க்கனும்".
"இப்ப வந்திடுவாங்க வந்ததும் சொல்லிடறேன்".
"அக்கம் பக்கத்தில விசாரிச்சீங்களா?"
"இல்லை"
"பரவாயில்லை, நானே விசாரிக்கறேன், நீங்க கூட வாங்க".
அப்போது ஒரு கான்ஸ்டபிள் வந்து "சார், ஃபோரன்ஸிக் லேப்ல இருந்து வந்திருக்காங்க, ஒரு போட்டோகிராப்பரும் வந்திருக்கார்"
"உடனே உள்ளே அனுப்புங்க" கான்ஸ்டபிள் வேகமாக வாசல்புறம் நோக்கி ஓடுகிறார்.
செல்வமும், சந்தானமும் பின்புற வழியாக வீட்டினுள் வருகின்றனர்.
அருள்மொழியைப் பார்த்தவுடன் சந்தானம், "வாங்க அருள்மொழி, எப்படி இருக்கீங்க".
"நல்லா இருக்கேன். பார்த்து ஒரு 2 மாசம் ஆச்சுல்ல! Let me take a look around and we will talk later".
ஒரு 15 நிமிடங்களுக்குப் பிறகு அவர் சந்தானத்தின் பக்கம் வந்து, "இது கேன்ங் ஸ்டைல் கொலை மாதிரி இருக்கு. அதே சமயம் இதைச் செய்தவங்க ரொம்ப புத்திசாலிங்க, ஒரு ஆளா செய்த மாதிரி தெரியலை, கண்டிப்பா ஒரு 4-5 பேர் இதை சேர்ந்து செய்திருப்பாங்கன்னு நினைக்கிறேன். என் அசிஸ்டெண்ட்ஸ் ப்ரிண்ட்ஸ் எடுத்திட்டிருக்காங்க, நிறைய ப்ரிண்ட்ஸ் இருக்கு, எல்லாத்தையும் லிஃப்ட் பண்ண சொல்லியிருக்கேன். நீங்க ஏதாவது தடயம் எடுத்தீங்களா?"
"அந்த பின்பக்க ஜன்னல் வழியா ஒரு கத்தியை யாரோ போட்டிருக்காங்க, ஜன்னல்ல ப்ரிண்ட்ஸ் இருக்கலாம், ஜன்னல் பின் பக்கம் ஒரு ஷு மார்க் இருக்கு அதையும் கொஞ்சம் பாருங்க. "
"அதையும் லிஃப்ட் பண்ணிடச் சொல்றேன். நான் நிறைய கண்டு பிடிச்சுருக்கேன், அதுக்கு முன்னாடி அந்தப் படங்கள்ல இருக்கரது யாரு?"
"அது தேவராஜ், இந்த வீட்டு ஓனர், ஏன்"
"அவர் எங்க இப்ப?"
"தெரியலை அதை கண்டுபிடிக்க முயற்சிகள் நடக்குது. "
"இங்க நடந்திருக்கரத வெச்சு பார்த்தா, அவரோட உயிருக்கு ஆபத்து, சீக்கிரம் கண்டு பிடிக்கனும்" என்ற அவருடைய கணிப்பைக் கேட்ட செல்வமும், சந்தானமும் உறைந்து நின்றனர்.
(தொடரும்)

Saturday, December 16, 2006

தடயம் - அத்தியாயம் - 2

சந்தானம் செல்வம் பக்கம் திரும்பி, "செல்வம், இது தேவராஜ் இல்லை, இது வேறயாரோ, தேவராஜ் எங்க?" என்றார்.
"சார், இது தேவராஜ் இல்லைங்கரது எனக்குத் தெரியும், உங்களுக்கு யார், என்ன தகவல் கொடுத்து நீங்க இங்க வந்தீங்க?"
சந்தானம் சற்று தயங்கி விட்டு, "அப்பரம் சொல்றேன், முதல்ல உங்களோட அடுத்த மூவ் என்ன?"
"சாரி சார், நீங்க என் ஜூரிஸ்டிக்ஷ்ன் இல்லை, இப்ப யுனிஃபார்ம்லயும் இல்லை இத வெச்சு பார்க்கும் போது நீங்க அஃபிஷியலா இங்க வரலைன்னு நான் முடிவு பண்ணிக்கலாமா?"
சந்தானத்துக்கு கோபம் தலைக்கேறியது, "நான்சென்ஸ், நான் யுனிஃபார்ம்-ல இல்லாத வெச்சு எங்கிட்ட எதையும் மறைக்காதீங்க, நான் உங்க ஜூரிஸ்டிக்ஷ்ன் இல்லைதான், ஆனா as a Commissioner of Police, I have every right to ask an SI about the progress of a murder case he is investigating, do you understand that", என்ற அவருடைய பேச்சிலும், தோரணையிலும் மிடுக்கும், செல்வம், இரண்டு வருடம் முன்பு அவரிடம் பணியாற்றிய போது இருந்த முனைப்பும் தெளிவாகத் தெரிந்தது.
உடனே செல்வம், "சாரி சார், நீங்க இங்க திடீர்னு வந்து நீங்க தேவராஜோட தாய்மாமன்னு சொன்னதும் நீங்க தேவராஜுக்கு உதவி செய்யதான் வந்திருக்கீங்கன்னு நினைச்சேன், உங்களுக்கு இந்த வீட்டில கொலை செய்யப்பட்டு கிடக்கரது அவர் இல்லைங்கர விஷயமே தெரியலைன்னதும், எதுக்கும் உங்களோட இன்டென்ஷன் என்னன்னு தெரிஞ்சுக்கலாம்னு ட்ரை பண்ணினேன். But, as a SI, I know my limits and I have every right to suspect anyone on a murder case even if that person is my senior officer."
சந்தானம் சற்று நிதானமாகி, "I appreciate your sincerity and dedication to your duty. உங்களுடைய நெக்ஸ்ட் மூவ் என்ன சொல்லுங்க?"
"சொல்றேன் சார் அதுக்கு முன்னால நீங்க எதை வெச்சு இங்க வந்தீங்க, உங்களுக்கு யார் தகவல் கொடுத்தாங்க?"
"எனக்கு ஒரு 4 மணி நேரம் முன்னாடி ஒரு ஃபோன் வந்தது, பேசினவங்க தேவராஜ யாரோ கொலை பண்ணிட்டாங்க இங்க ஒரே களேபரமா இருக்குன்னு சொன்னாங்க, நான் அதனால உடனே கிளம்பி வந்தேன்."
"ஃபோன் பண்ணினது ஆணா? பெண்ணா?"
"ஆண்தான்"
"உங்க செல்லுக்கு ஃபோன் பண்ணினாங்களா இல்லை வீட்டுக்கு பண்ணினாங்களா?"
"வீட்டுக்குத்தான்"
"அவங்க எத்தனை மணிக்கு ஃபோன் பண்ணினாங்க"
"ராத்திரி ஒரு 1 - 1:30 மணி இருக்கும்"
"ஆச்சர்யமா இருக்கு சார், எங்களுக்கு ஃபோன் வந்ததே ஒரு 1 மணி நேரம் முன்னாடிதான், அதுவும் இந்த வீட்டுல ஏதோ ப்ராப்ளம், களேபரமா இருக்குன்னு எதிர் வீட்லருந்து பஞ்சாபகேசன்கரவர் ஃபோன் பண்ணினார். உங்களுக்கு 7 மணி நேரம் முன்னாடியே ஃபோன் வந்துடுச்சுன்னா இதுல ஏதோ மர்மம் இருக்கு, பட் நோ ப்ராப்ளம், உங்க வீட்டுக்கு வந்த call-ஐ trace பண்ணிடலாம்"
"அதுக்கு அவசியம் இல்லை, என் வீட்டுல Caller Id facility இருக்கு, அதனால அந்த நம்பரை வாங்கித் தரேன், நீங்க நேரா அட்ரஸையே ட்ரேஸ் பண்ணிடலாம்."
சந்தானம் தன் செல் ஃபோனை எடுத்து வீட்டிற்கு கால் செய்து பேசினார், பேசும் போது ஒரு சிறிய பேப்பரை எடுத்து எதையோ எழுதினார், பிறகு, "செல்வம் இது தான் அந்த நம்பர் ட்ரேஸ் பண்ணிடுங்க. இப்ப சொல்லுங்க உங்க நெக்ஸ்ட் மூவ் என்ன?"
"சார், தேவராஜ தேடிகிட்டு இருக்கோம், மாணிக்கத்த விசாரிச்சா ஏதாவது க்ளூ கிடைக்கும்னு நினைக்கிறேன். இங்க நடந்திருக்கரத பாக்கரப்ப, தேவராஜ் இந்த ஆள கொலை பண்ணிட்டு ஓடிப் போயிருக்கலாம். சூழ்நிலை அப்படித்தான் இருக்கு".
"செல்வம், தேவராஜ் என்னோட ரிலேடிவ்தான், ஆனா உங்களுக்கு நல்லாத் தெரியும் எனக்கும் டியூடிதான் முக்கியம், அவன் இந்த கொலையை செய்து இருந்தா அவனை சட்டத்து முன் கொண்டு வந்து கண்டிப்பா நான் தண்டனை வாங்கித்தருவேன். ஆனா, அதே சமயம் இந்த நிமிஷம் இங்க செத்து கிடக்கரது தேவராஜ் இல்லைங்கரதும் ரொம்ப சந்தோஷமா இருக்கு. நீங்க முதல்ல இவன் யாரு, என்னன்னு விசாரிங்க".
"சார் இவன் ராயபுரம் ரௌடி பாஸ்கரோட வலது கை, பேரு பைக் குமார்".
"இவனா பைக் குமார்!, இவன் மேல 4 கொலைக் கேசு இருக்கே! இவன் எப்படி இங்க வந்தான், இவனுக்கும் தேவராஜுக்கும் என்ன கனெக்ஷன்?"
"அத விசாரிச்சுகிட்டு இருக்கோம்"
"செல்வம், நான் இந்த கேஸ்ல நேரடியா இறங்கலாம்னு நினைக்கறேன். உங்களுக்கு அதனால ஒன்னும் கோபம் வராதே?".
"ஏன், என் இன்வெஸ்டிகேஷன் மேல நம்பிக்கை இல்லையா?"
"அப்படி இல்லை, நான் நேரடியா இறங்கினா, தேவராஜ ஒருவேளை இந்த கொலையைப் பண்ணிட்டு தலை மறைவா இருந்தா, அவன் எப்படி யோசிப்பான்னு, எங்க போவான்னு என்னால கணிக்க முடியும்."
செல்வம், ஒரு புன் சிரிப்புடன், "நீங்க எதுக்கும் என் அதிகாரி துணைக் கமிஷ்னர் துரைராஜன் கிட்ட பேசிடுங்க"
"துரை எதுக்கு, நான் ஐ.ஜி. தேவசகாயத்துக்கிட்டயே பேசிடறேன்" என்ற சந்தானம் தன் செல் ஃபோனில் யாருக்கோ கால் செய்து பேசத் துவங்கினார், பேசிவிட்டு, "செல்வம், I.G. கிட்ட பேசிட்டேன், இந்த கேஸுக்கு என்னை ஸ்பெஷலா அப்பாயிண்ட் பண்ணி ஆர்டரை, உங்க கமிஷ்னர் துரைராஜனுக்கு அனுப்ப ஏற்பாடு பண்ணிட்டார், இனி இந்த கேஸ்ல நாம ரெண்டு பேரும் சேர்ந்து ஒர்க் பண்ணப் போறோம்."
அப்போது செல்வத்துக்கு அவருடைய செல்ஃபோனில் ஒரு கால் வந்தது, அதைப் பார்த்து விட்டு, "கமிஷ்னர் துரைராஜன் வீட்ல இருந்து கால்" என்று சொல்லிவிட்டு கொஞ்சம் தள்ளிப் போய் பேசினார்.
"சார், கமிஷ்னர், நீங்க சொன்னதைத்தான் சொன்னார், அவருக்கு நம்ப மூவ்மெண்ட்ஸ் பத்திய தகவல்களைஅடிக்கடி தெரியப் படுத்தச் சொன்னார். இப்ப நீங்க சொல்லுங்க அடுத்து என்ன பண்ணலாம்னு"
"மாணிக்கத்தையும், அவரோட பையனையும் சந்தேகக் கேஸ்ல புக் பண்ணி ஸ்டேஷன்ல வைங்க, அப்ரம் அவங்கள விசாரிக்கலாம், உள்ள இருக்கர பாடிய ஃபோட்டோ எடுக்கரதுக்கு ஏற்பாடு பண்ணுங்க, ஃபாரன்ஸிக் ஆளுங்கள வரச் சொல்லுங்க, பாடிய போஸ்ட்மார்டம் பண்ண ஏற்பாடு பண்ணுங்க, அக்கம் பக்கத்துல சந்தேகப் படற மாதிரி யார் இருந்தாலும் புடிச்சு உள்ள போடுங்க, எதிர் வீடு, பக்கத்து வீடுன்னு வீடு வீடா போய் விசாரணை பண்ண ஏற்பாடு பண்ணுங்க ", என சர சரவென உத்தரவு போட்டுவிட்டு திரும்பியவர் கண்ணில் அது பட்டது.
"செல்வம், அதப் பாருங்க!"
அதைப் பார்த்த செல்வம், அதிர்ந்து போய் நின்றார்.

(தொடரும்)

Tuesday, December 05, 2006

தடயம் அத்தியாயம்-1

போலீஸ் கமிஷ்னர் சந்தானத்தின் கார் உமையாள் தெருவில் திரும்பும் போது அவருக்கு இன்று ஒரு சோதனையான நாள் என்று தோன்றியது.

அவர் போக வேண்டிய வீட்டின் முன் கூட்டம் கட்டுக்கடங்காமல் சேர்ந்து இருந்தது. போலீஸ் கூட்டத்தை விரட்டிக் கொண்டு இருந்தனர். யாரும் கேட்பதாக இல்லை. எல்லோர் முகத்திலும் நடப்பது என்ன என்று தெரிந்து கொள்ளும் ஆவலும், பரபரப்பும் சேர்ந்து இருந்தது.
கார் நின்றதும் ட்ரைவர் வந்து கதவைத் திறப்பதற்குள் அவரே திறந்து கொண்டு இறங்கினார். அவரைப் பார்த்ததும் அங்கிருந்த 2 கான்ஸ்டபிள்கள் கூட்டத்தை திட்டி அகற்றினர். அவர் அருகில் வந்ததும் விறைப்பாக சல்யூட் செய்தனர். அதை அவர் தலையசைத்து ஏற்றுக்கொண்டார். அப்போது S.I. செல்வம் ஒடி வந்து ஒரு சல்யூட் செய்து மரியாதையாக சற்று தள்ளி நின்று கொண்டார்.
"என்ன செல்வம் எப்படி இருக்கீங்க? பார்த்து 4-5 மாசமாச்சே!. வீட்டில நல்லா இருக்காங்களா?"
"நல்லா இருக்கேன் சார். நீங்க எப்படி இங்க....!" என்று கொஞ்சம் தயக்கமாக இழுத்தார்.
"நான் தேவராஜோட தாய் மாமன்."
செல்வம் அதிர்ந்து போய் "அப்படியா!, I am very sorry Sir" என்றார்.
"It's okay, காலைல news கிடைச்சதும் உடனே வந்தேன். இதுவரைக்கும் என்ன கண்டுபிடிச்சீங்க, யாரையெல்லாம் சந்தேகப் படரீங்க?"
"சார், நிறைய கண்டுபிடிச்சிருக்கோம், உங்க கிட்ட சொல்றதுக்கு கொஞ்சம் வருத்தமாதான் இருக்கு, இங்க யாருக்கும் தேவராஜப்பத்தி அவ்வளவா நல்ல opinion இஇல்லை, முன் கோபி, சண்டைக்கார ஆசாமி இப்படி நிறைய தெரிஞ்சுது. நேத்திக்கு கூட பக்கத்தில இருக்கர மாணிக்கம்னு ஒருத்தர் கிட்ட சண்டை போட்டு அது அடிதடியாகி, மாணிக்கத்துக்கு ஆஸ்பிட்டலில் ட்ரீட்மெண்ட் கொடுக்கரது வரை போயிருக்கு. "
"மாணிக்கம்னா சொன்னீங்க? அவர் சொந்த ஊர் எது? அவர் கூட யார் யார் இருக்காங்கன்னு விசாரிங்க?"
"விசாரிச்சுட்டேன், மாணிக்கம் தங்கவேலு அவரோட முழு பேர். அவருடைய சொந்த ஊர் திருநெல்வேலி டிஸ்ட்ரிக்ட்-ல திருக்குருக்குடி இது கலக்காடுக்கு பக்கம். இங்க அவர், அவருடைய மனைவி சாந்தம்மாள், ஒரு மகன் ஆறுமுகம், ஒரு மகள் வேலம்மாள் இருக்காங்க."
S.I சொன்னதை உன்னிப்பாகக் கேட்ட சந்தானம், "சரி உள்ளே போகலாமா?" என்றவர் சற்று நின்று, "செல்வம், ஒரு நிமிஷம், அந்த மாணிக்கம் இருக்கர இடம் தெரியுமா?"
"தெரியும் சார்"
"அவரை கூட்டிகிட்டு வரச்சொல்லுங்க"
"சார், நான் அவரையும் அவர் மகனையும் ஏற்கனவே, விசாரணைக்காக கொண்டு வந்து நம்ம வேன்-ல உட்கார வெச்சு இருக்கேன். நீங்க வந்திருக்கரத பார்த்ததும், அவங்கள விசாரிக்க இருந்தத நிறுத்தி வெச்சுட்டு உங்ககிட்ட பேச வந்தேன்."
"வெரி குட், நல்லா ரியாக்ட் பண்ணிருக்கீங்க, வாங்க உள்ள போகலாம்"
"கண்டிப்பா". அங்கிருக்கும் ஒரு கான்ஸ்டபிளை கூப்பிட்டு "301 நாங்க வெளில வர வரைக்கும் யாரையும் உள்ளே விடாதே"
"சரிங்க"
சந்தானம் இந்த வீட்டிற்கு ஒரே ஒருமுறை வந்திருக்கிறார். அது 2 வருடங்களுக்கு முன்னால். அப்போதைக்கும் இப்போதைக்கும் வீட்டில் எந்த மாற்றமும் இல்லை. அதே சுத்தம், அதே ஒழுங்கு தெரிந்தது.
அது ஒரு சிறிய வீடு, உள்ளே நுழைந்ததும் ஒரு சிறிய வெராண்டா அதைத் தொடர்ந்து ஒரு ஹால், ஹாலில் தேவராஜின் பல படங்கள் அழகாக ஃப்ரேம் செய்து மாட்டப்பட்டிருந்தது.
"இத்தனைஅழகான சிரிப்பு, இவனைப் போய்..." என்றபடி சந்தானம் பல் கடித்தார். அதை செல்வத்தின் கூரிய கண்கள் கவனித்து நோட் செய்து கொண்டது.
தேவராஜிடம் முன் கோபத்தைத் தவிர எந்த கெட்ட பழக்கமும் இல்லை. சந்தானத்தின் அக்கா மரகதமும் அவளுடைய கணவன் சுதர்சனமும் 4 வருடங்களுக்கு முன் ஒரு கார் ஆக்ஸிடெண்டில் இறந்த போது அவனுக்கு பணத்துக்கு குறையில்லாமல் சேர்த்து வைத்திருந்தார்கள். சந்தானம் எவ்வளவோ சொல்லியும் அவரோடு தங்காமல், கோட்டை மாதிரி இருந்த தன் வீட்டை விட்டுட்டு இந்த வீட்டை வாங்கி, தனியாக இருந்தான். சந்தானமும், தனிமை அவனுக்கு கொஞ்சம் நிம்மதி தரும் என்று விட்டு விட்டார். அது இப்போது இப்படி முடிந்து இருக்கிறது.
சந்தானம் ஹாலின் இடது பக்கத்தில் இருந்த கதவைத் திறந்தார். அது ஒரு சிறிய படுக்கை அறை. படுக்கையில் யாரும் படுத்த அடையாளம் இல்லை. அதன் இடப்புறம் அட்டாச்டு பாத்ரூம், தரையெல்லாம் ஈரமாக இருந்தது.
சந்தானம் திரும்பி செல்வத்தைப் பார்த்தார். "அங்க ஹீட்டர் தண்ணீ திறந்து விட்டு இருந்தது, அது பக்கெட்டிலிருந்து வழிந்து நாங்க வரும் போது பாத்ரூம் ஃபுல்லா தண்ணியாயிருந்தது. நல்ல வேளை இந்த வீட்டு தண்ணி டேங்க்-ல தண்ணி இருந்தது இல்லைனா பெரிய ஆக்ஸிடெண்டாயிருக்கும்." என்றார்.
சந்தானம் பெட்ரூமின் வலப்புறம் இருந்த சமையல் அறைக்கு போனார். சமையல் அறையிலிருந்து தீய்ந்த வாசனை வந்தது. Exhaust fan ஓடிக்கொண்டிருந்தது. ரெண்டு பாத்திரங்கள் அடிப்பிடித்து கருகிப் போயிருந்தது.
சந்தானம் பிறகு ஹாலின் பின் புறக் கதவைத் திறந்தார், அங்கு ஒரு சிறிய ஸ்டோர் ரூம் கோடியில் ஜன்னல் ஓரம் ஒரு வாஷ் பேசின் அதில் நிறைய ரத்தக் கறை. வாஷ் பேசினுக்குப் பக்கத்தில் சுவரில் யாரோ யாரையோ மோதி ரத்தம் வந்து அது ஒரு கோடாக கீழே இறங்கி தரையைத் தொட முடியாமல் நின்று போயிருந்தது. அந்த ரூமின் நடுவில் மேலே செங்குத்தாகப் பார்த்தபடி அவன் கிடந்தான். அவன் உடம்பில் கண்டிப்பாக உயிர் இல்லை. கழுத்தில் ஒரு வெட்டு, கைகளில் நிறைய ரத்தக் கறை, வயிற்றில் 2-3 கத்திக்குத்து வாங்கி, ஒரு பெரிய ரத்தக் குளத்தில் கிடந்தான். உடல் சற்று வெளிர் நிறமாகி இருந்தது. வாய் பிளந்து காற்றுக்காக ஏங்கியது போலக் கிடந்தான், கைகளில் நிறைய வெட்டு காயங்கள். நல்ல முரடனுக்குரிய தோற்றம், உடல் நல்ல கட்டு மஸ்தாக இருந்தது.
அவனைப் பார்த்ததும் சந்தானத்துக்கு ஒரு நிமிடம் இருதயத்துடிப்பு நின்றுவிடும் போல இருந்தது. செல்வம் பக்கம் திரும்பி, "செல்வம், இது தேவராஜ் இல்லை, இது வேறயாரோ, தேவராஜ் எங்க?" என்றார்.

-தொடரும்


-முரளி

Sunday, October 29, 2006

கம்பன் கவி இன்பம்

ரிச்மண்ட் தமிழ் சங்க ப்ளாக்கில் நண்பர் (நடராஜமூர்த்தி) உயிருள்ள சொற்றொடர்கள் எழுதி இறை மாட்சியை விளக்குகிறார், மற்றொருவர் (பித்தன் - யாருப்பா இவரு?) கிறுக்கல்கள் மூலம் சமுதாயக் குறைபாடுகளைச் சாடுகிறார், அடுத்து (பரதேசி - என்னைப் போன்ற பலரும் அமெரிக்காவிற்குப் பரதேசிகள்தான்) வாழ்கையைச் சற்று கனவுகளோடு பார்கிறார். என் பங்கிற்கு, நடராஜமூர்த்தி எழுதுவதற்குள் கம்பனின் கவித்திறமை பற்றி எழுதிவிட்டால், நான்தான் இந்த முயற்சியில் முதல் என்று கொஞ்சம் 'படம்' காட்டலாம் என்கின்ற முயற்சியே இது. எனவே குறையிருப்பின் பொருத்தருள்க.

கம்பர் மிகச் சிறந்த படைப்பாளி என்பது உலகம் அறிந்த உண்மை. கம்பர் எழுதிய ராமாயணத்தை கம்ப சித்திரம் என்றும், கம்ப சூத்திரம் என்றும், கம்ப நாடகம் என்றும் பலவாறு போற்றுவர் தமிழ் இலக்கியதை நன்கு கற்றவர்.

கம்ப சித்திரம் - ஒரு காட்சி எப்படி இருக்கிறது, அதில் கதாபாத்திரங்கள் எப்படி இருகின்றார்கள் என்பதை சொல்லால் புனைந்து நம் கண் முன் காட்சியாக வடித்து தருவதால் அது கம்ப சித்திரம்.

கம்ப சூத்திரம் - ஒரு உணர்வை அல்லது செயலை அல்லது குணத்தை ஆயிரம் பாடல்களில் விளக்கலாம், அதை ஒரே ஒரு வரியில் விளக்கலாம் என்று காட்டியவர் கம்பர். உதாரணத்திற்கு அரக்கர் என்பவர் யார் என்னும் கேள்விக்கு, அவர்கள் பற்கள் பெரிதாக இருக்கும், கைகள் முறங்கள் போல இருக்கும், நகங்கள் கூராகவும் அழுக்காகவும் இருக்கும், உடல் கரியதாகவும் பெரியதாகவும் இருக்கும், கண்கள் சிவப்பாக இருக்கும், நடந்தால் பூமி அதிரும், அனைவரும் அஞ்சும் தோற்றமும், செயலும் இருக்கும், என்றும் நாம் கூற முற்படுவோம். கம்பன் ஒரே வரியில் எவருக்கு இரக்கம் இல்லையோ அவர் அரக்கர் என்கிறார்.

அரக்கர் பாவமும் அல்லவர் இயற்றிய அறமும்
துரக்க நல்லருள் துறந்தனள் தூமொழி மடமான்
இரக்கம் இன்மைன் றோஇன்றுஇவ் வுலகங்கள் இராமன்
பரக்கும் தொல்பொருள் அமுதினைப் பருகுதின் றதுவே.
பொருள்
அரக்கர்கள் செய்த தீவினையும், தேவர்களும் முனிவர்களும் செய்த நல்வினையும், ஏவுதலால், இயற்கையாகத் தன்னிடம் இருக்கும் அருள் தன்மையை விட்டவளும் தூய்மையான நல்ல சொற்களைப் பேசும் மான்போன்ற கைகேயியின் இடத்து இரக்க உணர்வு நீங்கிய காரணத்தினால்தான் இன்றும் இந்த உலகத்தவர் இராமபிரானது பரவிய புகழாகிய அமிழ்தத்தினைப் பருக முடிகின்றது என உணர்த்துவதால் அது கம்ப சூத்திரம்.

கம்ப நாடகம் - ஒரு நாடகத்தை காணும் போது அதில் நடிப்பவர்கள், அவர்கள் பேச வேண்டிய வசனங்கள், அவர்கள் நிற்க/நடக்க வேண்டிய இடங்கள், அவர்களது நடை, உடை, பாவனைகளை எப்படி அந்த நாடகத்தின் சூத்திரதாரியான ஒரு இயக்குனர் வெளிப்படுத்துவாரோ அதை கம்பர் வெளிப்படுத்துவது தனிஅழகு.
கன்னி மாடத்தில் சீதா பிராட்டியாரை, விசுவாமித்ர முனிவர், இராமன் மற்றும் இளைய பெருமாள் மிதிலையில் முதன்முதல் காணும் காட்சியை கம்பர் இப் பாடல் மூலம் வருணிக்கிறார்.

பொன்னின் சோதி போதினில் நாற்றம் பொலிவேபோல்
தென்உண் தேனின் தீஞ்சுவை செஞ்சொற் கவியின்பம்
கன்னிம் மாடத்து உம்பரின் மாடே களிபேடோடு
அன்னம் மாடு முன்றுறை கண்டாங்கு அயல் நின்றார்
பொருள்
கன்னி மாடத்தின் மேல் பகுதியில் பொன்னின் ஒளியும், பூவின் நறுமணமும் ஒன்று சேர்ந்து பொலிவதைப் போன்றும், வண்டு விரும்பி உண்ணும் தேனின் சுவை போன்றும், செம்மை விளங்கும் சொற்களாலாகிய கவிதையின் இனிமை போன்றும், களிப்பு மிகுந்த பெண் அன்னம் போன்ற தோழியர்களோடு அரச அன்னம் வீற்றிருக்கும் எழிலைப் போன்று சீதாப் பிராட்டியார் அம் முற்றத்தில் (இதை இக்காலத்தில் பால்கனி என அழைப்பர்) வீற்றிருக்க இம்மூவரும் கண்டார்கள்.

இதைப் படிக்கின்றபோது நம் மனதில் ஒரு கேள்வி எழும். ஒரு கதையின் நாயகன், தன் நாயகியை முதன் முதல் காணும் போது, அவள் ஒர் உயர்ந்த இடத்தில் இருந்தும், தான் ஒரு தாழ்வான பகுதியில் இருந்தும் காண விரும்பமாட்டான், அதை கம்பரும் மாற்றிப் பாடியிருக்க முடியும், இப்படி அவர் பாடியதன் கருத்தை வள்ளுவர் 'வாழ்க்கைத் துணைநலம்' என்ற அதிகாரத்தில் இவ்வாறு விளக்குகிறார்.
புகழ் புரிந்த இல்லிலோர்க்கு இல்லை இகழ்வார்முன்
ஏறுபோல் பீடு நடை.

எவன் ஒருவன் தன்னை இகழ்பவர்கள் முன் ஒரு எருதின் தன்மையதாய், தலை நிமிர்ந்து நடக்கும் தகுதியில்லாதவனோ அவனுக்கு வாய்த மனைவியின் குணம் சரியில்லை என்று இடித்து கூறுகிறார். இராமன் சீதையை மிதிலையில் காணும் பொழுது திருமணம் ஆகாத ஒரு இளைஞன் ஆகவே அவன் தலை குனிந்து நடக்க வேண்டியிராதவன். சீதை, கற்பின் மொத்த உருவம், அவள் தலை நிமிர்ந்து பிற ஆடவரை நோக்கும் தன்மையில்லாதவள், அவள் தலை கவிழ்ந்து இருந்தவாரே, கீழே தலை நிமிர்ந்து நடக்கும் இராமனைக் காண முடிந்தது, இராமனால் காணப்படவும் முடிந்தது. இதனால் கம்பராமாயணம் கம்ப நாடகம் எனவும் போற்றப்படுகிறது.

இவ்வாறு, தன் புலமையை கொண்டு கவிச்சக்ரவர்த்தி எனப் பெரும் பெயர் பெற்ற கம்பர், ஒரிடத்தில் சீதையின் அழகை வருணிக்க தன்னிடத்தில் வார்த்தைகள் இல்லை என இராமாயணத்திலேயே வாக்குமூலம் தருகிறார். இது நமக்கெல்லாம் வியப்பான ஒரு செய்தி. ஒரு கட்டுரையை வடிக்கும் ஆசிரியர், கட்டுரையின் முகப்பில், இந்த கட்டுரையை வடிக்கும் திறமை தன்னிடத்தில் இல்லை என்றால், அதை எவர் படிக்கக் கூடும். ஒரு சொற்பொழிவாளர், கொடுக்கப் பட்டத் தலைப்பில் பேச தனக்குத் திறமை இல்லை என்று கூறினால், அவருடைய சொற்பொழிவை யார் கேட்பர், ஆனால், ஒரு காவியத்தைப் பாடும் கம்பர், காவியத்தலைவின் அழகை வருணிக்க தன்னிடத்தில் வார்த்தைகள் இல்லை என்பதை அந்த காவியத்திலேயே சொன்ன பிறகும் நாம் அதைப் படித்து இன்புறுகிறோம் என்றால், அந்த கருத்தைச் சொன்ன கம்பனின் கவி அழகுதான்.
அந்தப் பாடல்:
செப்பும் காலைச் செங்கமலத்தோன் முதல்யாரும்
ஒப்பெண் பாலும் கொண்டு உவமிப்போரும் உவமிக்கும்
அப்பெண் தானே ஆயின போதுஇங்கு
அயல் வேறோர்
ஒப்பு எங்கே கொண் டெவ்வகை நாடி உரை செய்வோம்
?


பொருள்:
சிறந்த தாமரை மலரில் வாழும் பிரமதேவன் முதல், சாதாரண மனிதர் வரையில் எவரும், ஒப்பாக எண்ணத் தகுந்த பகுதிகளையெல்லம் ஆராய்ந்து உவமிப்பவர்கள் உவமையாகச் சொல்லும் திருமகள் தானே இங்கு வந்திருப்பதால், அத்திருமகளை விட வேறு ஒரு உவமைப் பொருளை நான் எவ்விடம் தேடி உரைக்க முடியும்? எனக் கேட்கின்றார்.

இதை சற்று ஆராய்ந்து பார்த்தால் நம் இன்றைய நடைமுறை வாழ்க்கை முறையிலிருந்தே அறிந்து கொள்ளலாம். தன் மகனுக்கு ஏற்ற மணப்பெண்ணைத் தேடும் எல்லா தாயும், தன் மகனுக்கு மஹாலட்சுமி போல ஒரு பெண் தேடுவதாகச் சொல்லுவாள், ஆனால் அவளுக்கு மஹாலட்சுமியே மருமகளாக வந்தால் அவள் என்ன சொல்ல முடியும், அது போல, வேறு ஒரு பெண்ணாக இருந்தாள், நான் இந்த சீதை அழகில் மஹாலட்சுமி போல எனக் கூறலாம், இவள்தான் உலகத்தோர் அனைவரும் ஒப்பு நோக்கும் மஹாலட்சுமி என்கிற போது, நான் எவ்விதம் இவளுக்கு ஒப்புமை கூற முடியும் என்ற கம்பரின் கவி மிக இனிது.

கடைசியாக இந்த பகுதியை நிறைவு செய்ய ஒரு மங்களகரமான பாடல்.
எண்ணரு நலத்தினாள் இனையள் நின்றுழிக்
கண்ணொடு கண்ணிணை கவ்வி ஒன்றையொன்று
உண்ணவும் நிலைபெறாது உணர்வும் ஒன்றிட
அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள்.
பொருள்
பிறரால் எண்ணுவதற்கும் அரிய நலன்களைச் செய்பவளாகிய சீதாப் பிராட்டி கன்னிமாடத்தில் நின்று கொண்டு இருக்கையில் இருவர் கண்களும் ஒன்றையொன்று உணர்வினால் கவ்வி ஒருவரையொருவர் ஈர்க்க ஒருங்கிணைந்து விளங்க, அண்ணலாகிய இராமனும் நோக்கினான். சீதாப் பிராட்டியும் நோக்கினாள்.
இந்தப்பாடலை பல பேர் பல இடங்களில் விளக்கியுள்ளார்கள். 'பார்த்தல் வேறு, நோக்குதல் வேறு' என்பது பற்றியும், 'அண்ணலும்' என்று எழுதிப் பிறகு 'அவளும்' என்று எழுதியிருகிறார், அதன் காரணத்தை விளக்கியுள்ள பல கட்டுரைகளை நாம் படித்து இருப்போம். ஆயின், நான் வியந்து பார்க்கும் ஒரு பகுதி 'உணர்வும் ஒன்றிட'. தலைவன் தலைவி இருவரும் ஒருவரை ஒருவர் முதன் முதல் பார்கின்றபோது இருக்கும் எல்லா எண்ணங்களையும் விவரித்த கம்பர், உணர்வும் ஒன்றிட என்ற சொற்றொடர்மூலம் வாழ்வில் எது முக்கியம் என்பதை தெள்ளத்தெளிவாக விளக்குகிறார். இன்றைக்குத் திருமணமாகி 10, 15, 20 வருடங்கள் இல்வாழ்கை வாழ்ந்த பிறகும், அத்திருமணங்கள் முறிவதற்குக் காரணம் எது என ஆராய்ந்தால், நாம் கண்டு கொள்ளும் ஒர் உண்மை நம் மனங்கள் ஒன்றாததுதான். இராமனும், சீதாபிராட்டியும் ஒருவரை ஒருவர் பார்க்கின்ற அந்த கணத்திலேயே அவர்கள் இருவருடைய 'உணர்வும்' ஒன்றிவிட்டதாகச் சொன்ன் கம்பனின் கவி மிக மிக இனிது.
-முரளி

மனிதாபிமானம்

"அடுத்தது",

கணீரென ஒலித்தக் குரல் கூடியிருந்த அனைவரின் சப்தத்தையும் நிறுத்தியது.
அப்போது, இருவர் அவனை கொண்டு வந்து நிறுத்தினர். குழுமியிருந்த அனைவர் பார்வையும் அவன் மேல்தான்.
அவன் கண்களில் ஒளியில்லை, முகத்தில் அடர்ந்த தாடி, தலை எண்ணெயைக் கண்டு குறைந்தது 2 வருடமாவது இருக்கும், உலகில் உள்ள அழுக்கெல்லாம் அவன் மீதுதான் என்று சொல்லும் அளவிற்கு அழுக்காக இருந்தான், உடம்பில் உள்ள எலும்புகளை எக்ஸ்-ரே இல்லாமலேயே எண்ணிவிடலாம் என்ற அளவிற்கு ஒல்லியாக இருந்தான். கையில் ஒரு நசுங்கின, அழுக்கான ஒர் அலுமினிய தட்டு வைத்து இருந்தான், அதில் கொஞ்சம் காசு இருந்தது. தோளில் ஒர் பழைய துணி மூட்டை இருந்தது, அவனுடைய துணிகளும் மிகவும் அழுக்காக இருந்தது, ஒரு பழைய கிழிந்த சட்டையும், கறையேறிய வேட்டியும் அணிந்து இருந்தான்.
அவனைப்பார்த்த கூட்டம் ஸ்தம்பித்து போனது. யாருக்கும் பேசக்கூட தோன்றவில்லை. அவர்கள் பார்த்துக் கொண்டு இருப்பது ஒரு 6 அடி உயர வண்ண ஓவியம் என்பது கூட அவர்களுக்கு மறந்து போனது. அந்த ஓவியத்தில் லயித்து அவனுடைய தட்டில் போட, சிலர் தன்னிச்சையாக தங்கள் சட்டைப் பைக்குள் கைவிட்டு பணத்தை எடுத்தனர். அப்போது அந்த ஓவியக் கல்லூரியின் தலைவரும், நிருவனருமான கலாதர் மைக் அருகில் வந்து தெளிவான ஆங்கிலத்தில் பேசத்துவங்கினார்.
"இனிய கலா ரசிகர்களே, நீங்கள் ஏலம் கேட்க இருக்கும் இந்த பிச்சைக்காரனின் படத்தையும் இது போன்ற மேலும், 3 ஓவியத்தையும் நான் வெறும் விற்பனைக்காக வரையவில்லை. நீங்கள் இந்த ஓவியப் பள்ளிக்கு பக்கத்து சந்தில் இவனைப்பார்த்து இருப்பீர்கள். இவனைப்போல பலர் அங்கு இருக்கின்றார்கள். இந்த ஓவியக் கல்லூரிக்கு வரும் பலர், இவனையும், இவன் கூட இருக்கும் மற்ற பிச்சைக்காரர்களையும் இங்கிருந்து அப்புறப் படுத்த வேண்டினர். இவர்களை அடித்து விரட்டுவது ஒரு காட்டுமிறாண்டித்தனம் என்பது என்னுடைய தாழ்மையான் கருத்து. அதை விடுத்து இவனுக்கும், இவனைப்போன்ற பலருக்கும் ஒரு புது வாழ்க்கைக்கு வழி செய்யுமாறு ஒரு தொண்டு நிறுவனத்திடம் பேசினேன், அவர்களும் இதை ஒப்புக் கொண்டனர். அவர்களுக்கு இதனால் ஏற்படும் செலவை ஈடு கட்டவே இந்த ஓவியங்களை வரைந்து ஏலத்தில் விற்கிறேன். எனவே, இது ஒரு நல்ல காரியத்திற்கு என்பதை கருத்தில் கொண்டு தாராளமாக ஏலம் கேளுங்கள். அந்தத் தொண்டு நிறுவனத்தின் தலைமைப் பொருப்பாளர் திரு. மோகன் இங்கு வந்துள்ளார், இன்று ஏலம் முடிந்ததும், அந்தப் பணம் அவாரிடம் தரப்படும்.”
“முதல் படம் துவக்க மதிப்பு ரூ.5000/-“
அப்போது, கூட்டத்தில் ஒருவர், எழுந்து, “ரூ. 10,000” என்றார், மற்றொருவர் “ரூ.20,000” என்றார். 5 நிமிடத்தில் அது 2 லட்சமாகிவிட்டது.
கலாதர் முகத்தில் சந்தோஷம் கொப்பளித்தது. கூடியிருந்தவர்களின் அன்பின் மிகுதியால் அவருக்கு அதிகம் பேசவும் தோன்றவில்லை. அனைவரையும் பார்த்து "2 லட்சம் ஒரு தரம், இரண்டு தரம், மூன்று தரம்" என்று கூறி முதல் படத்தின் ஏலத்தை முடித்தார்.
இதை அடுத்து மேலும் 3 படங்களை கலாதாரின் உதவியாளர்கள் கொண்டுவந்து மேடையில் வைத்தனர். எல்லாம், முதல் படத்தைப் போலவே மிக அற்புதமாக இருந்தது. எல்லாப் படங்களும் முதல் படத்தைப் போலவே நிமிடத்தில் விற்று தீர்ந்தது.
பிறகு கலாதர், தழுதழுத்த குரலில் " உங்கள் அனைவருக்கும் எப்படி நன்றி சொல்வது என்று தொ¢யவில்லை. ஒரு நல்ல காரியத்திற்கு என்றவுடன் இப்படி தாராளமாக ஏலம் கேட்டு இந்த நாட்டில் மனிதாபிமானம் இன்னும் சாகவில்லை என்பதை உணர்த்தியுள்ளீர்கள், உங்கள் அனைவருக்கும், நீண்ட ஆயுளையும், நல்ல வசதியையும், எப்போதும் இது போன்ற நல்ல எண்ணத்தையும் ஆண்டவன் தரட்டும்" என்று பொங்கி வந்த கண்ணீரைத் துடைத்த படி கூறினார்.
பிறகு பள்ளியின் மற்ற ஓவியர்களின் ஓவியங்கள் விற்பனைக்கு வந்தது. ஓர் உதவியாளர் ஒவ்வொரு ஓவியமாக கொண்டு வந்து மேடையில் வைக்க, மற்றோர் உதவியாளர் அதன் விலையை கூறினார். அவற்றில் பல நல்ல விலைக்கு விற்கப்பட்டது, சில சாதாரண விலைக்கு விற்கப்பட்டது.
ஏலம் முடிவுக்கு வந்ததும், அவரவர்கள் ஏலம் எடுத்த படத்தை பணத்தைச் செலுத்தி வாங்கிக் கொண்டனர்.
பிறகு கலாதர் மேடைக்கு வந்து “4 படங்களின் ஏலத்தின் மூலம் கிடைத்த 7 லட்சத்திற்கான காசோலையையும், இந்த கல்லூரியின் சார்பில் ரூ.25,000/-க்கான காசோலையையும் திரு.மோகனிடம் உங்கள் சார்பாக அளிக்கிறேன்” என்றார்.
திரு.மோகன் மேடைக்கு வந்து காசோலையை பெற்றுக்கொண்டு அனைவருக்கும் நன்றி கூறினபிறகு எல்லோரும் கலைந்து சென்றனர்.
அனைவரின் கார்களும் சென்றபின் கடைசியாக திரு. மோகன், கலாதாரிடம் கை குலுக்கி விட்டு, “நீங்கள், மிக நல்லவர், மிக நல்ல ஒரு செயலை இன்று செய்து இருக்கின்றீர்கள், மிக்க நன்றி” என்றார்.
“மோகன், இது நாம் இருக்கும் சமுதாயத்திற்கு, நாம் எல்லோரும் செய்ய வேண்டிய கடமை, அதனால் இதை பெரிதாக்காதீர்கள். அந்த பிச்சைக்காரகளுக்கு ஒரு நல்ல வாழ்க்கை கிடைத்தால் அதுவே போதும். நீங்கள் எப்படி போகப்போகிறீர்கள், நான் உங்களை என் காரில் ட்ராப் செய்யட்டுமா?”
“வேண்டாம், நான் வழக்கம் போல் பஸ்சில் போயிடுவேன்”.
மோகன் கல்லுரியை விட்டு வெளியில் வந்து சிறிது தூரம் நடந்து அங்கிருந்த ஒரு காரில் பின் கதவைத்திறந்து ஏறிக்கொண்டார். அதன் ட்ரைவர் திரும்பிகூடப் பார்க்காமல், “ஐயா, போன காரியம் என்னங்க ஆச்சு?” என்றான்.
“எல்லாம் நல்ல படியா முடிஞ்சது, நம்ம எஸ்.ஐ. செல்லதுரைக்கு ஃபோன் போட்டு அந்த பிச்சைக்காரங்களை நாளைக்கு ஒரு லாரியில கூட்டி கிட்டு போய், ஊருக்கு 20 கி.மீ. தள்ளி இறக்கி விட்டுட சொல்லு.” என்றார்.
அப்போது அவருடைய செல் ·போன் ஒலித்தது. அதை எடுத்து அவர்,
“சொல்லு!” “ம், ம், அப்படியா!, வெரிகுட்”, என்றார்.
பிறகு ட்ரைவரைப் பார்த்து, “எஸ்.ஐ. க்கு ·போன் செய்து விட்டாயா?”
“இன்னும் இல்லை, இப்பவே பண்ணட்டுமா, இல்ல ஆபிஸ் போய் பண்ணட்டுமா?”
“இப்பவே பண்ணிடு, செல் ஃபோன்ல இருந்து பண்ணாதே, அந்த பி.சி.ஓ. -ல இருந்து செய், அந்த பிச்சைக்காரங்களை ஊருக்கு வெளியில கொண்டு போய் விடச்சொல்லாதே, அவங்களை போன மாசம் திறந்தாங்களே அந்த 5-ஸ்டார் ஓட்டல் பக்கத்தில விடச்சொல்லு, அப்படியே அவருடைய கவர் ரெடி, இன்னிக்கு ஈவினிங் அவர் வீட்டுக்கு வந்துடும்- னு சொல்லிடு”
ட்ரைவர் ஃபோன் செய்யப் போனபோது மனதில் குத்து மதிப்பாக ஒரு 20 லட்சம் அந்த 5-ஸ்டார் ஓட்டலில் இருந்து கறந்து விட வேண்டும் என்று நினைத்துக் கொண்டார். அதை நினைக்கும் போதே அவர் முகத்தில் சந்தோஷம் தாண்டவமாடியது.
-முரளி

55 வார்த்தையில் 2வது சிறுகதை

வரன்
"என்னது!, நம்ம ராஜி, அந்த ரகுவைக் காதலிக்கறாளா!"

"கத்தாதீங்க, யோசிச்சு நல்ல முடிவா எடுக்கலாம்."

"என்னடி நல்ல முடிவு, தூ... அவனா எனக்கு மாப்பிள்ளை?".

அப்பா முன் தினம் பெண் பார்க்க வந்தவர்கள் வீட்டிற்கு ·போன் போட்டு ,"நமஸ்காரம், எங்க வீட்டில் எல்லோருக்கும் ரொம்ப சந்தோஷம். ஒரு நல்ல நாள்ல நிச்சயதார்த்தம் வெச்சுக்கலாம்" என்றார்.

"அம்மா என்னைப் பத்தி ஏன் தப்பா சொன்னே?"

"சும்மாயிரு ராஜி, இல்லைனா, இது அப்பா சாக்கு சொல்லி நிறுத்தற 10-வது வரனாயிடும்".

- முரளி

55 வார்த்தையில் முதல் சிறுகதை

'விபத்து'
நல்ல பிஸியான அந்த சாலையில் ஒரு தண்ணீர் லாரி வேகமாக வந்த போது ஒரு குழந்தை திடீரென சாலையை கடந்தது.
பார்த்துக் கொண்டிருந்த அனைவரும் "ஐயோ!" என்று அலறினர்.
அதை ஸ்ரீராம் மட்டும் சலனமில்லாமல் பார்த்துக் கொண்டிருந்தான்.
சரியான சமயத்தில் ஒருவன் குழந்தையை காப்பாற்றி விட, அருகில் இருந்த எல்லோரும் உரக்க கை தட்டி பாராட்டும் போது ஸ்ரீராம் தன் மனைவியிடம் சொன்னான்,
"இதே மசாலா ஸீன் இன்னும் எத்தனை தமிழ் படத்தில் வருமோ தெரியலை?"
- முரளி