Sunday, September 18, 2011

தடயம் - அத்தியாயம் - 12


இதுவரை வந்த நாவலை படிக்க:

தடயம் அத்தியாயம்-1

தடயம் - அத்தியாயம் - 2

தடயம் - அத்தியாயம் - 3

தடயம் - அத்தியாயம் - 4

தடயம் - அத்தியாயம் - 5

தடயம் - அத்தியாயம் - 6

தடயம் - அத்தியாயம் - 7

தடயம் - அத்தியாயம் - 8

தடயம் - அத்தியாயம் - 9

தடயம் அத்தியாயம் - 10

தடயம் - அத்தியாயம் - 11

 இனி:

"சந்தானம் சார், மைக் ரெண்டும் சரியா வேலை செய்கிறது. நீங்களும் அருளும் கிளம்பலாம், நாங்க எல்லாரும் முதல்ல கிளம்பி போயிடுவோம், ரெண்டு கான்ஸ்டபிள்ஸ்ஸ மஃப்டில இங்க தெரு முனையில நிக்க வெச்சுட்டு வந்திருக்கோம், அவங்க உங்க காரை யாருக்கும் தெரியாம தொடர்ந்து வருவாங்க, நடுவுல யாராவது உங்கள தாக்கவோ அல்லது வழி மறிக்கவோ ப்ளான் பண்ணினா அவங்க ரெண்டு பேரும் உங்களை காப்பத்துவாங்க"

"
ரெண்டு பேர் எப்படி எங்களை காப்பாத்த முடியும்"

"
அவங்க ரெண்டு பேரும் என்னோட டாப் ஸ்டூடண்ட்ஸ், அவங்க ரெண்டு பேர் சேர்ந்தா ஒரு 20-30 பேருக்கு சமம். அதோட அவங்க எது நடந்தாலும் எனக்கு தகவல் சொல்லிடுவாங்க, நான் ஒரு 3-4 நிமிஷத்தில அங்க வந்திடுவேன். இப்ப நாங்க கிளம்பரோம்" என்றபடி வெளியில் செல்ல ஆரம்பித்தார். அவர் செல்வதைப் பார்த்து விட்டு ஜார்ஜும் கிளம்பி சென்றார்.

செல்வம், சந்தானத்துக்கு விரைப்பாக ஒரு சல்யூட் அடித்து விட்டு, "சார் நாங்க அடுத்து உங்களை அவங்க இடத்திலதான் பார்ப்போம். நடுவில பார்த்தாலும் உங்களை கண்டுக்காமல் இருப்போம். நாங்க போலீஸ் ட்ரெஸில் வராமல் மஃப்டியில் வருவோம்" என்ற சொல்லிவிட்டு அவருடைய பதிலுக்கு காத்திராமல் ஜார்ஜ் மற்றும் பாரியுடன் சேர்ந்து கொண்டு வெளியில் சென்றார்.

சந்தானம், அறையின் குறுக்கும் நெடுக்கும் நடந்து கொண்டே ஒரு சின்ன பேடில் சில குறிப்புகளை எழுதிக்கொண்டார்.  ஜன்னல் வழியே எதையோ பார்த்தவர், சற்று ஜன்னலின் கிட்டே நெருங்கி உன்னிப்பாக பார்த்துவிட்டு அதையும் தனது பேடில் குறித்துக் கொண்டார்.  கையில் இருந்த பேனாவின் பின்பகுதியால் முன் நெற்றியில் சற்று தட்டிக் கொண்டவர் கண்கள் சற்று ப்ரகாசமானது அப்போது,

"சந்தானம் சார் நாம கிளம்பலாமா"

"கொஞ்சம் இருங்க அருள், எனக்கு சில விஷயங்கள் புரியலை அதை அலசிகிட்டு இருக்கேன், ஒரு பத்து நிமிஷம் குடுங்க"

"பத்து என்ன இருவது நிமிஷம், ஏன் ஒரு மணி நேரம்கூட எடுத்துக்கங்க, எங்களுக்கு எங்க பொண்ணு வேணும்"  அதைச் சொல்லும்போதே அவருக்கு கண்களில் குளமாக நீர் கொட்டத் தயாராக இருந்தது.

சந்தானம் அதைப் பார்த்தாலும், பார்க்காதது போல முகத்தைச் சற்றுத் திருப்பிக் கொண்டு நடந்த அனைத்தையும் மனதில் அசை போட்டு பார்த்தார்.  அவருடைய அந்த சிந்தனையை கலைக்கும் விதமாக, அருளுடைய வீட்டுத் தொலைபேசி ஒலித்தது.

"அருள் எடுத்து யாருன்னு பாருங்க"

அருள் தனக்கு தைரியத்தை வரவழைத்துக் கொண்டு "ஹலோ யார் வேணும்"

"உங்க தாத்தா, யோவ் அருள், என்னா நக்கலா, உனக்கு உன் பொண்ணு உயிரோட வேண்டாமா, ஒரு இடத்துக்கு வரச்சொன்னா வரணும், அத விட்டுட்டு இப்படி மசமசன்னு பேசிகிட்டு இருக்கக்கூடாது"

"நாங்க இதோ கிளம்பிட்டோம்.  இன்னும் 30 நிமிஷத்தில அடையார் பார்க் ஷெரட்டான் ஹோட்டலுக்கு வரோம்."

"இரு இரு ஒரு சின்ன ப்ளான் சேஞ்ச், வரச்சொன்ன டைம் ஓகே, இடம்தான் சேஞ்ச் பண்ணிட்டோம்.  அடையார் பார்க் ஷெரட்டான் ஹோட்டலுக்கு வராதே, உன் வீட்டு வாசல்ல நீயும் சந்தானமும் ஒரு 5 நிமிஷம் நில்லுங்க, உங்களை ஒரு ஆட்டோக்காரன் சவாரிக்குக்கு கூப்பிடுவான் அவன் ஆட்டோவில ஏறி வாங்க."

"எங்க வரணும்"

"அது அந்த ஆட்டோகாரனுக்குத் தெரியும்"

"நாங்க தப்பான ஆட்டோவில ஏறிட்டா?"

"சந்தானதுக்கிட்ட ரொம்ப பேசாதே, பேசினா இப்படிதான் கேள்வியா கேட்டுகிட்டே இருப்பே, சொன்ன மாதிரி செய்ங்க, இன்னும் 15 நிமிஷத்துல வீட்டுக்கு வெளியில வாங்க, ஆட்டோ நீங்க வந்ததுக்குப் பிறகு வரும், ஆட்டோக்காரன் சவாரிக்கு வரீங்கலாம்பான், அவங்கிட்ட ஒன்னும் பேசாம, ஆட்டோவில உக்காருங்க, அவன் உங்களை பத்திரமா எங்க கிட்ட சேத்துடுவான்"

அருள் பதறிப்போய், "ஏன் இப்படி ப்ளானை மாத்திகிட்டே இருக்கீங்க"

"ஏன், ப்ளானை மாத்தினா, கிளம்பிப் போன செல்வத்துக்கும், ஜார்ஜுக்கும் பாரிக்கும் சொல்ல முடியாதுன்னா.  ஒன்னு, நீயும் சந்தானமும், அடி முட்டாளா இருக்கனும், இல்லை நாங்க முட்டாள்கள்ன்னு நினைச்சிட்டு இருக்கனும்.  நாங்க பெரிய ரிஸ்க் எடுத்து இதுல எறங்கியிருக்கோம், அதனால அங்க நடக்கரதும் எங்களுக்கு தெரியும்.  சும்மா பேசிகிட்டு டைம் வேஸ்ட் பண்ணாதே, சீக்கிரம் கிளம்புங்க" படக்கென்று கால் கட்டானது.

அருள் பதற்றத்துடன் "ஹலோ, ஹலோ" என்று உரக்கக் கத்திவிட்டு, கால் கட்டானது  உறைத்ததும், கோபத்துடன் போனை சோபாவில் விட்டெறிந்தார்.

"என்ன ஆச்சு, அருள், யார் போன்ல, அந்த கும்பலா?"

"ஏன் என்ன பண்ணப் போறீங்க தெரிஞ்சுகிட்டு, செல்வம் கிளம்பினதும் நாமும் கிளம்பியிருந்தா இந்தப் ப்ரச்சனை வந்திருக்காது"

"அருள், கொஞ்சம் பொறுமையா பதில் சொல்லுங்க, ஃபோன்ல யாரு, அவங்களா?"
வெறுப்பாக, "ஆமாம், அவங்களுக்கு இங்க நடக்கரத்தும் தெரிஞ்சிருக்கு, ப்ளானை மாத்திட்டாங்க"

சந்தானம் அதிர்ந்து போய் "என்னது ப்ளானை மாத்திட்டாங்களா!, என்ன புது ப்ளான், சொல்லுங்க என்று பரபரத்தார்.

அருள் புது ப்ளானை விவரித்ததும், சந்தானம், "இந்த புது ப்ளானை உடனே செல்வத்துக்கு சொல்லனும், ஃபோன் போடுங்க"

"ஒரு மண்ணும் வேணாம், உங்களுக்கு உங்க பந்தம், பாசம் குடும்பம் ஒரு எழவும் கிடையாது, உத்தியோகம், ப்ரமோஷன், பவர் இவ்வளவுதான், ஆனா எனக்கு அப்படி இல்லை, எனக்கு எம் பொண்ணு முக்கியம். அவளுக்கு ஒண்ணும் ஆகாம நான் அவளை வீட்டுக்கு கூட்டிகிட்டு வரணும். அதனால உடனே கிளம்புங்க"

"சும்மா பைத்தியம் மாதிரி பேசாதீங்க, அவங்க ப்ளானை மாத்தின மாதிரி, மீட் பண்ற இடத்தையும் மாத்தியிருப்பாங்க, அப்படி பண்ணிட்டா, நமக்கு பாதுகாப்பில்லாம போனா யாருமே உயிரோட திரும்ப முடியாது, நான் செல்வத்துக்கு ஃபோன் பண்ணிடறேன்"

அப்போது அருளின் மனைவி அழுது சிவந்த கண்களோடு, நடக்கக் கூட த்ராணியில்லாமல் மெதுவாக வந்து, "சந்தானம், தயவு செய்து உங்க வசதிக்காக எங்க வாழ்கையில விளையாடிடாதீங்க, எப்படியாவது க்ருதிக்காவை கூட்டிகிட்டு வந்திடுங்க, அவ இல்லைன்னா எங்க வாழ்க்கையே இருண்டிடும்”.

“அம்மா நீங்க கவலைப் படாதீங்க, அவங்ககிட்ட என் அக்கா பையனும் மாட்டிகிட்டு இருக்கான் அதனால நான் ரொம்ப நிதானமா இவங்களை ஹாண்டில் பண்ணி அவங்க ரெண்டுபேரையும் கொண்டு வந்துடுவேன்”.

பேசிக் கொண்டே சந்தானம் தன் செல் ஃபோனில் செல்வத்தை தொடர்பு கொண்டு புதுப் ப்ளானை விவரித்தார்.

“அருள், வாங்க நாம கிளம்பலாம்.”

“செல்வம் என்ன சொன்னார், எப்படி அவங்க நம்ப ரெண்டுபேரையும் காப்பாத்துவாங்க?”

“நமக்கு ஒன்னும் ப்ரச்சனை இல்லை அருள், பயப்படாதீங்க, வாங்க, செல்வம் நம்மை காப்பாத்த வரலைன்னாலும் நான் உங்க கூட இருக்கேன் எதுவும் நடக்காது.  தைரியமா இருங்க”

“நான் போயிட்டு வரேன்ம்மா, நம்ம குலதெய்வத்தை நல்லா வேண்டிக்கோ, நான் வரலைன்னாலும், க்ருத்திகா பத்திரமா வீட்டுக்கு வந்திடனும்னு.”

“நான்,  நீங்க அவளோட திரும்பி வர வரைக்கும் பல்லுல பச்சைத் தண்ணி படாம, நம்ம சாமியை வேண்டிகிட்டு இருக்கேன், போயிட்டு வாங்க”

சந்தானம் கொஞ்சம் மிடுக்காக இருப்பது போல காட்டிக் கொண்டு நடந்தாலும், அவருடைய தளர்ந்த நடை அவர் மனதுக்குள் நடக்கும் ஒரு யுத்தத்தை உணர்த்தியது.  அருள் அவருடைய தளர்வை மறைக்கும் எண்ணம் எதுவும் இல்லாமல் தள்ளாடித் தள்ளாடி சந்தானத்துடன் நடக்க, சந்தானம் வருவதைப் பார்த்த அவரது கார் ட்ரைவர் காரின் கதவை திறக்க, கண்ணால் அதை வேண்டாம் என்று மறுத்து விட்டு காரைத் தாண்டி அருளோடு வீட்டை விட்டுத் தெருவிற்கு வந்தார். 

அவர்கள் வந்த சில நிமிடங்களில், ஒரு ஆட்டோ அவர்கள் சமீபம் வந்து, “ன்னா சார், சவாரி போவனுமா?”

“ம்ம் “

“சரி வா சும்மா யோசிக்காதே”

அவர்கள் ஏறிய ஆட்டோ சட்டென்று வேகம் பிடித்து, சென்னையின் போக்குவரத்தில் புகுந்து புகுந்து சென்றது.  அவன் போன வேகத்திலும், அடிக்கடி திரும்பி அருளையும், சந்தானத்தையும், ஒரு பார்வை பார்த்தபடியே சென்றான்.

“ஏம்பா, கொஞ்சம் மெதுவா போயேன்”

“த்தோடா, நீ வாயை மூடிகினு சும்மா வா, என்னாண்ட பேசினேன்னு அவங்க கைல சொன்னேன்னு வெய், நீ அவ்ளவுதான், தெர்தா”

ஆட்டோ, 15-20 நிமிட ஓட்டத்திற்குப் பிறகு ஜி.என். செட்டி தெருவில் இருக்கும் ராடிசன் ஹோட்டலுக்கு பின்புறம் வந்தது.  அங்கு முதலில் சொன்ன ஆட்டோ TN-09-7919 இருந்தது.

“வா சார் இனி அந்த ஆட்டோல போவுணும்”

“எங்கன்னு சொல்லாதவரைக்கும் நாங்க வரப்போரதில்லை”

“இன்னா சொம்மா படம் காட்ரியா, ஒயுங்கு மர்வாதையா வந்து குந்தினேன்னு வெச்சுக, உங்கல இஸ்துகினு போய் எங்க உட்னுமோ வுட்டுட்டு எம் பாட்டுக்கு போயிகினே இருப்பேன், அல்லாங்காட்டி, நால் தட் தட்டி இஸ்துகினு போவேன், எப்டி வரியா, இன்னா சொல்ற” என்ற படி அவர்கள் அருகில் அவன் வரவும். அருள் உடனே அவன் சொன்ன ஆட்டோவில் ஓடிப் போய் ஏறிக்கொண்டார். 
அதைப் பார்த்தவுடன் சந்தானத்துக்கும், எதுவும் சொல்லத் தோண்றாமல், மெதுவாக ஆட்டோவில் போய் உட்கார்ந்தார்.  உட்காரும் போது சற்றுத் திரும்பிப் பார்த்து யாராவது அவர்களைப் பார்க்கிறார்களா, பாரி சொன்னது போல் கான்ஸடபில்ஸ் யாராவது இருக்கிறார்களா என்று கண்களால் நோட்டம் விட்டார்.  அதைப் பார்த்த ஆட்டோக்காரன், “இன்னா, சொம்மா அங்க இங்க லுக் வுட்ணுகீர, இந்த இருட்ல நம்ல ஆரும் சேஸ் செய்ய முடியாது, கம்னு வந்து குந்து” என்றபடி ஆட்டோவை ஸ்டார்ட் செய்தான்.

ஆட்டோ கிளம்பிய அடுத்த நிமிடம், ஒரு மோட்டார் சைக்கிள் கிளம்பி ஆட்டோவைத் தொடர்ந்து செல்ல ஆரம்பித்தது.  அந்த மோட்டார் சைக்கிளைத் தொடர்ந்து ஒரு 20-30 அடி தூரத்தில் ஒரு மோட்டார் சைக்கிளும், ஒரு பழைய டெம்போ ட்ராவலர் வேனும் பின் தொடர்ந்தது.  மெதுவாக செல்ல ஆரம்பித்த ஆட்டோ, சட்டென்று வேகம் எடுத்து, மாம்பலம் பக்கம் நுழைந்து, ஜன சந்தடியில் மறைந்தது.  ஆட்டோவின் வேகத்தை பார்த்து சந்தானத்தின் மனதிலும் பயம் சற்று எட்டிப் பார்க்க ஆரம்பித்தது.

(தொடரும்)

No comments: