தடயம் அத்தியாயம் - 15
இதுவரை வந்த நாவலை படிக்க:
தடயம் அத்தியாயம்-1
தடயம் - அத்தியாயம்
- 2
தடயம் - அத்தியாயம்
- 3
தடயம் - அத்தியாயம்
- 4
தடயம் - அத்தியாயம்
- 5
தடயம் - அத்தியாயம்
- 6
தடயம் - அத்தியாயம்
- 7
தடயம் - அத்தியாயம்
- 8
தடயம் - அத்தியாயம்
- 9
தடயம் அத்தியாயம் -
10
தடயம் - அத்தியாயம்
- 11
தடயம் - அத்தியாயம் - 12
அப்போது “டேய், யார்டா அது, எம் பையனை கடத்தி வெச்சிட்டு என் கிட்ட பேரம் பேசரது, உங்க அத்தனை பேரையும், உங்க ஊர் சனத்தோட எரிச்சுடுவேன்” என்ற படி ஒருவர் வெள்ளை வேட்டி சட்டையில வந்தார், அவரை கொண்டு வந்த தேவராஜின் ஆட்கள் ஒரு நாலு அடி தள்ளி கைகளைக் கட்டிய படி நின்றனர். அவரைப் பார்த்த சந்தானத்தின் காலடியில் பூமி வெடித்து சிதறியது மாதிரி உணர்ந்தார், கால்கள் பலமிழந்து பட்டென்று தரையில் உட்கார்ந்தார். அருளுக்கும், சந்தானத்துக்கும், முகத்தில் ரத்த ஓட்டம் சுத்தமாக நின்று வெளிறிப்போயிருந்தது.
ஆனால், தேவராஜ் சிரித்த படியே, “யோவ், சும்மா கத்தி உன் பையன் உசிரை நீயே வாங்கிடாதே”
என்றான்.
“டேய், நான் இந்த தமிழ்நாட்டோட உள்துறை அமைச்சர் அறிவுமதி, என்னையும், என் மகன் இளமதியையும், என் குடும்பத்தையும் பகைச்சு
கிட்டு நீயும் இந்தக் கூட்டமும் வாழ்ந்திட முடியுமாடா?”
“நீ தமிழ்நாட்டு உள்துறை அமைச்சர்ன்னா என்ன பெரிய கொம்பா? தெரு நாய இழுத்துட்டு
வர்ர மாதிரி கொண்டு வந்திருக்கேனே அதுல தெரிஞ்சிருக்கணும், உன் பதவி, அந்தஸ்து எல்லாம்
எனக்கு கால் தூசி மாதிரின்னு”
வந்தவர் தன் கெத்திலிருந்து கொஞ்சமும் மாறாமல், “இதுக்கு உனக்கு என்ன தண்டனை தெரியுமா?
நான் கை சொடுக்கினா போதும், உங்க அத்தனை பேர் குடும்பமும், க்ளோஸ். மரியாதையா, இந்த
நிமிஷம், எம் பையனை விட்டுட்டு, என் கால்ல விழுந்து மன்னிப்பு கேட்டுட்டு ஓடிப் போயிடு,
உசிரோட விட்டுடரேன், இல்லை, கொன்னு குழி தோண்டி போதைச்சுடுவேன்” என்று கர்ஜித்தார்.
அப்போது, தேவராஜ், மெதுவாக நாற்காலியில் இருந்து எழுந்து, கட்டிப் போட்டிருந்த
பையனின் முகத்தை நிமிர்த்தி புறங்கையால் ஓங்கி அடித்தான். தேவராஜின் நடையிலும், செய்த செய்கையிலும், கொஞ்சமும்
பயமும் இல்லை, வருத்தமும், இல்லை.
இதில் வெறியாகி வந்தவர், “ஏய் உன்னை கொல்லாம விடமாட்டேண்டா” என்றபடி தேவராஜ் மீது
பாயந்தார், தேவராஜ் லாவகமாக நகர்ந்து கொண்டு அவரது பிடரியில் ஓங்கி ஒரு அறை அறைந்தான்,
தொடேல் என்ற பெரிய சத்ததுடன், அவர் விழ அதைப் பார்த்து நாற்காலியில் இருந்த இளைஞன்
“அப்பா” என்று வீரிட்டு அலறினான். தேவராஜின்
ஆட்கள் சற்றும் சலனமில்லாமல் தூரத்திலிருந்து இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்தனர். அதே சமயம், அனைவரும், எந்த சண்டைக்கும் தயாராக இருந்தனர்.
தேவராஜ், சிரித்தபடி நாற்காலியில் ஒரு காலை வைத்துக் கொண்டு, “என்ன, அப்பா, பிள்ளை
பாசமா? நான் சொல்றபடி கேக்கலை, ரெண்டு பேரையும், செதில் செதிலா சீவி சாக்கடைல கரைச்சுட்டு
போயிட்டே இருப்பேன்”
“சொல்லுங்க, எதுக்காக எங்க அப்பாவையும் அம்மாவையும், லாரி ஏத்தி கொன்னீங்க?”
“யாருடா உங்க அப்பா?”
“யாரு எங்க அப்பாவா? தொழிலதிபர் சுதர்சனம், அவரோட மனைவி, எங்க அம்மா, மரகதம். ஞாபகம் இருக்கா?”
சுதர்சனம் என்ற பெயரைக் கேட்டதும், அந்த ஆளின் முகத்தில் ஒரு சின்ன சலனம் ஏற்பட்டது,
அதை உடனே மறைத்துக் கொண்டு, “யார்யா அது சுதர்சனம்? எனக்கு சமமா அந்த ஆள்? அவனை தெரிஞ்சுகிட்டு
எனக்கு என்ன லாபம்?”
“மொதல்ல அவன்னு சொல்லாதே, அவர்னு சொல்லு.
உனக்கு லாபமிருந்தாதான் ஒருத்தரைப்
பத்தி தெரிஞ்சுக்குவியா, அவரத் தெரியாதுன்னா, உனக்கு லாபமில்லாம எதுக்கு அவர் மேல லாரி
ஏத்தி சாவடிச்சே?”
அதற்கு அந்த பையன், “டேய், உனக்கு உங்க
அப்பாவும், அம்மாவும், செத்துப் போன அந்த நாள் ரொம்ப முக்கியமான நாளா இருக்கலாம், ஆனா,
எனக்கும் எங்க அப்பாவுக்கும் அது இன்னொரு செவ்வாய் கிழமை, ஒரு அவசியக் கொலை, ஒரு இலவச
இணைப்புக் கொலை அவ்வளவுதான்”
இதைக் கேட்டவுடன், தேவராஜின், முகம் ரத்தச் சிவப்பானது, முஷ்டியை இறுக்கி, நாற்காலியில்
இருந்த அந்த இளைஞனின் முகத்தில் குத்தினான், அவன் நாற்காலியோடு பின்பக்கம் சாய்ந்து
விழுந்தான், ரத்தத்தில் தோய்ந்திருந்த அவன் முகம் புது ரத்தத்தோடு விகாரமாக தெரிந்தது,
அவன் வலியில் அலறினான். கீழே விழுந்த அந்த இளைஞனின் கை கட்டப் பட்டிருந்த
நாற்காலியின் கை பகுதி விழுந்த வேகத்தில் உடைந்ததை யாரும் கவனிக்கவில்லை.
அந்த இளைஞனின் அப்பா இப்போது புது வெறியோடு தேவராஜின் காலை நோக்கி பாய்ந்தார்,
தேவராஜ், பட்டென்று எகிறி குதித்து அந்த ஆளின் முதுகில் கால் வைத்து அவரை அழுத்திக்
கொள்ள அவர் நகர முடியாமல் வலியில் கத்தினார். அப்போது அந்த இளைஞன் எழுந்து உடைந்த நாற்காலியின்
கூரான கைப்பிடியை க்ருத்திகாவின் கழுத்தில் வைத்து, “ஏய், எல்லோரும் மரியாதையா நகருங்க,
இல்லை ஒரே சொறுகு இவ கழுத்துல” என்றான்.
அதைப் பார்த்த அருள், “வேணாம், இளமதி, வேண்டாம், அவ என் ஒரே பொண்ணு அவளை ஒன்னும்
பண்ணிடாதே, இவளுக்காத்தானே, நீ சொன்னேன்னு, தேவராஜோட அப்பா அம்மாவோட கொலையைக்கூட ஆக்ஸிடெண்டுன்னு
ரிப்போர்ட் கொடுத்தேன்” என்று அலறினார்.
இதைக் கேட்டதும், சந்தானம், “பளீரென்று அருளின் கண்ணத்தில் அடித்து,
“அடப்பாவி,
உன்னை நம்பி கெட்டேனே, நீ, சரியா கண்டுபிடிப்பேன்னு உன்னை விசாரிக்கச் சொன்னா நீ ரிப்போர்ட்டை
மாத்தி எழுதிட்டு, இவனுங்களை தப்பிக்க விட்டிருக்கே! சீ, நீயெல்லாம் ஒரு ஃப்ரெண்டு,
உனக்கேல்லாம் மனசாட்சியே கிடையாதா” என்று சீறினார்.
அருள் உடைந்து போய், “ அடிடா, நல்லா அடி, நம்மள மாதிரி குடும்பம், பந்தம் பாசம்
எல்லாம் வெச்சுகிட்டு இந்த கழிசடை அரசியல்வாதிகளை பகைச்சுக்க தைர்யம் இல்லாம வாழரதுக்கு
செத்துப் போயிடலாமான்னு எத்தனை தடவை யோசிச்சிருப்பேன் தெரியுமா? என் க்ருத்திகாவையும், மனைவியையும் நினைச்சு அவங்களுக்காக
ஒரு ஜடம்மாதிரி வேலை பார்த்திட்டு இருக்கேன்” என்று அழ ஆரம்பிக்க.
அதுவரை பேசாது இருந்த க்ருத்திகா, மெதுவாக பேச ஆரம்பித்தாள்.
“அப்பா, எனக்குத் தெரியும்பா நீங்க எங்க மேல எவ்வளவு பாசம் வெச்சிருக்கீங்கன்னு,
தேவராஜ், இப்பவும் ஒன்னும் கெட்டுப் போகலை, இவங்க ரெண்டு பேரையும் விட்டுங்க, எனக்கும்
எங்க அப்பாவுக்கும் என்ன தண்டணை வேணும்னாலும் கொடுங்க” என்றாள்.
அதற்கு தேவராஜ், “என்ன தியாகமா” என்றவன், அந்த இளமதியின் பக்கம் திரும்பி,
“இன்னும்
என்ன வெய்ட் பண்ணிகிட்டிருக்கே, அந்தப் பெண்ணை போட்டுத் தள்ளிடு, அதனால எனக்கு ஒரு
மண்ணும் இல்லை, என்ன, உன்னையும் உங்கப்பனையும், போட்டுத் தள்றதுக்கு ஒரு 5-10 நிமிஷம்
லேட் ஆகும், அவ்வளவுதான். சரி சரி வாய் பாக்காம
அவளைப் போட்டுடு” என்றான்.
அப்போது, அந்த இடத்தின் நாலா புறத்திலிருந்தும்
தப தப வென ஒரு பெரிய கூட்டம் நீட்டிய துப்பாக்கிகளோடு இறங்கியது. அவர்களுக்குத் தலைமை தாங்கிய படி பாரியும், அவரது
இடப் பக்கம் ஜார்ஜும், வலப் பக்கம் செல்வமும் வந்தனர்.
பாரி, தேவராஜைப் பார்த்து, “தேவராஜ், நீயும் உன் ஆட்களும், மரியாதையா சரணடைஞ்சுடுங்க,
இல்லை உங்க எல்லோரையும், என்கவுண்டர் பண்ணவும் தயங்க மாட்டேன்”
“பண்ணுங்க, பண்ணிட்டு அதை அரசாங்கத்துக்கு எப்படி சொல்லுவீங்க, மக்களுக்கு எப்படி
சொல்லுவீங்க, எனக்கு இழக்கரதுக்கு எதுவும் இல்லை, நீங்க என்ன வேணா செஞ்சுக்கலாம்” என்றான்.
அதைப் பார்த்த அமைச்சர், “பாரி, ஹும் இவனை இங்கயே போடுங்க, இல்லை என் கைல ஒரு துப்பாக்கி
கொடுங்க இவனையும், இந்தக் கும்பலையும், இங்கேயே போட்டுட்டு எதாவது கதை சொல்லிட்டு போயிட்டே
இருக்கலாம்” என்றார்.
ஜார்ஜ் உடனே, “சார், அப்புறம் ஏதாவது ப்ரச்சனை வந்திடும். மொதல்ல சந்தானம் சாரும், அருள் சாரும், க்ருத்திகாவும்
இங்க இருந்து கிளம்பட்டும், அதுக்கு பின்னாடி நாம இவங்களை அரெஸ்ட் பண்ணி கொண்டு போயிடுவோம்.”
என்றார்.
“யோவ் என்னய்யா வெண்ணை மாதிரி பேசிகிட்டு, நான் சொன்னது, சந்தானம், அருள், தோ அந்தப்
பொண்ணு எல்லாத்தையும்தான், வள வளன்னு பேசாம, போட்டு தள்ளு, நான் பார்துக்கரேன்”
அப்போது, செல்வம், “சார், சந்தானம் சார்
எங்களுக்கெல்லாம் குரு மாதிரி, அவரை போய் இப்படி என்கவுண்டர் பண்றது நல்லது இல்ல சார்,
பின்னாடி மாட்டிகிட்டா, அவ்வளவுதான், எங்க லைஃப் மொத்தமா ஸ்பாயில் ஆயிடும், வேற ஒரு
வழி பார்க்கலாம் சார்” என்றார்.
“நீ யாருய்யா?”
“சார் நான் செல்வம் எஸ். ஐ. தேவராஜ் வீட்டுல
நடந்த கொலையை விசாரிக்கர போலீஸ் ஆபீசர்”
“அப்புறம் என்ன, விசாரணைல இவங்க எல்லோரும் சேர்ந்து அந்தக் கொலையை பண்ணினது தெரிஞ்சு
விசாரிக்க வந்த இடத்தில் உங்களை தாக்க முயற்சி பண்ணினாங்க. நீங்களும், உங்கக்கூட வந்த
கான்ஸ்டபிள்ஸும் தங்களை காப்பாத்திக்க சுட்டீங்க அதுல இவங்க செத்துட்டாங்க, கதை க்ளோஸ்,
எப்படி இந்தப் ப்ளான்” என்றார்.
பாரி அப்போது, “சார், உங்களையும், உங்க பையனையும், கடத்தினதுக்காக இப்படி ஒரு தண்டனை
தேவையா” என்றார்.
“பாரி புரியாம பேசாதையா, நான் இவனோட அப்பா அம்மா ரெண்டு பேரையும், லாரி ஏத்தி கொன்னு
போட்டிருக்கேன், இவன், சும்மா இருக்காம எப்படியாவது ஜெயில்ல இருந்து வெளில வந்து திரும்பியும்
இப்படி ஒரு அட்டாக் டிரை பண்ணுவான், நான் ஓவ்வொரு தடவை வெளில போகும் போதும், வரும்
போதும், எப்ப எது நடக்கும்னு பயந்து கிட்டு இருக்க முடியாது”
“எதுக்கு சார் இவனோட அப்பா, அம்மாவை போட்டு தள்ளினீங்க?”
“ஒரு பெரிய இடம் வாங்கரதுல எனக்கும் இவனோட அப்பாவுக்கும் முட்டிகிச்சு, அந்தாளோட
கம்பெனிக்கு அந்த இடம் வேணும், அவங்க அங்க ஒரு பெரிய விவசாயப் பண்ணை வெக்க ப்ளான் போட்டாங்க,
அதே சமயம், அந்த இடத்தை என் பையன் இளமதி வாங்கி
ஒரு ஐ.டி. பார்க் கட்ட ப்ளான் போட்டான். கவர்மெண்ட்
எப்படியும், பசுமை புரட்சின்னு சொல்லி இவங்க அப்பாவுக்கு அதை கொடுத்திடுவாங்கன்னு தெரியும், அதனால அந்த ஆள போட்டியில இருந்து விலகிக்கச் சொன்னேன்,
மாட்டேன்னு அடம் பிடிச்சான், இளமதியும், அதே இடம்தான் வேணும்னு அடம் பிடிச்சான், சரின்னு
போட்டு தள்ளிட்டேன். இப்ப அங்க அந்த ஐ.டி.
பார்க் கட்டிட வேலை ஜாம் ஜாம்னு ஆரம்பிச்சு முடியர ஸ்டேஜுக்கு வந்தாச்சு. இதுக்காக எனக்கு வேலை செஞ்ச ராயபுரம் பாஸ்கர், பைக்
குமார் எல்லாருக்கும், ஒரு பெரிய ஃப்ளாட் அண்ணா நகர்ல வாங்கி கொடுத்திருக்கேன், பைக்
குமார் பேர்ல வேற ஒருத்தனை ஜெயிலுக்கு அனுப்பிட்டு அவனை வெளில எனக்கு அடியாளா வெச்சிட்டிருக்கேன். போதுமா, சீக்கிரமா வேலையை முடிச்சிடு. உனக்கு, ஜார்ஜுக்கு, இதோ இந்த செல்வம் எல்லோருக்கும்
ப்ரமோஷனோட 1 சி வீடு தேடி வரும். சரியா” என்றார்.
“சாரி சார், எங்களால இதைச் செய்ய முடியாது, நீங்களே செய்திடுங்க” என்ற படி தன்
கையில் இருந்த ஒரு துப்பாக்கியை அமைச்சரிடம் நீட்டினார் பாரி.
இதற்குப் பிறகு நடந்தவை எல்லாம், ஒரு 30 விநாடிக்குள் முடிந்தது.
பாரியிடமிருந்து துப்பாக்கியை சந்தோஷமாக
வாங்கிய அமைச்சர், முதலில் தேவராஜை நோக்கி சுட, அதை தெரிந்து கொண்ட சந்தானம் குறுக்கே
பாய்ந்து அந்த குண்டை தன் இடது தோள் பட்டையில் வாங்கி சரிய, பாரியும், ஜார்ஜும் தங்கள்
துப்பாக்கியால் அமைச்சரை சரமாரியாக சுட, அதிர்ந்து போய், இளமதி க்ருத்திகாவின் மார்பை
நோக்கி கையிலிருந்த கூரான கட்டையை செலுத்த முயல, அருகில் இருந்த செல்வம் அவனது கையை
திருகி அந்தக் கட்டையை எடுக்க முயல, தேவராஜ் கொஞ்சமும், தயக்கமின்றி இளமதியை, ஜார்ஜும்
பாரியும், அமைச்சரைச் சுடும் திசையில் தள்ள, ஒரு துப்பாக்கி தோட்டா அவனது தலையைத் துளைத்து
வெளியே செல்வதை ஆர்வத்துடன் பார்த்துக் கொண்டிருந்தான்.
அமைச்சர் அறிவுமதியும், அவரது மகன் இளமதியும், கீழே சாய, பாரி தேவராஜைப் பார்த்து
சிரித்த படி, “என்ன தேவராஜ், எல்லாம் முடிஞ்சிடுச்சா, இப்ப திருப்தியா” என்றார்.
அவருக்கு ஒரு சின்ன புன்னகையை பதிலாகத் தந்து விட்டு க்ருத்திகாவை கை தூக்கி விட்டு
“என்ன க்ருத்தி, ரொம்ப பயந்துட்டியா” என்றபடி அவளை அணைத்துக் கொண்டான்.
“போடா இடியட், கொஞ்சம் விட்டிருந்தா அந்தக் கிறுக்கன் என்னை குத்தி போட்டிருப்பான்”
“ஐ என் உயிரே நீ தான் அப்புறம் எப்படி அவன் உன்னை குத்த விட்டிருப்பேன்”
“அட அட என்னமா டைலாக் விடரே, அவன் என்னை குத்திடுவேன்னு சொல்லும் போது, குத்திக்கோன்னு
சொன்னே?”
“அடிச் செல்லமே அப்படி சொல்லாட்டா அவன் கண்டிப்பா உன்னை குத்தியிருப்பான்,”
இவர்கள் இருவரின் அந்யோன்யத்தைப் பார்த்து, கோபம், கண்டிப்பு, வியப்பு என்று பலப்
பல உணர்ச்சிகளோடு அருள், “க்ருத்திம்மா, தேவராஜ உனக்கு முன்னாடியே தெரியுமா?, சொல்லவேயில்லை,
இன்னிக்கு நடந்தது எல்லாம் உனக்கு தெரிஞ்சுதான் நடந்ததா? பைக் குமார் கொலைக்கும், உங்களுக்கும் என்ன தொடர்பு? எல்லாத்தையும் சொல்லுங்க?” என்றார்.
தேவராஜ் அதற்கு, “அருள் சார், எல்லாத்தையும், சொல்றேன். க்ருதிம்மா, மொதல்ல அம்மாவுக்கு ஃபோன் பண்ணி நீ
பத்திரமா இருக்கேன்னு சொல்லிடு, ஆண்டி பயந்திருப்பாங்க” என்றான்.
தேவராஜ் சொன்னதைக் கேட்ட அருள் சற்று வெக்கத்துடன், “சே இது எனக்குத் தோணலையே!,
இதோ இப்ப சொல்லிடரேன்.” என்றார்.
“அருள் சார், க்ருதிம்மா சொல்லட்டும் அப்பதான், ஆண்டிக்கு தைர்யமா இருக்கும். இப்ப உங்க கேள்விகளைக் கேளுங்க, நான் பதில் சொல்றேன்”
என்றான்.
அப்போது, செல்வமும், பாரியும், ஜார்ஜும், தேவராஜின் ஆட்களையும் அவர்களோடு வந்த
ஆட்களையும் அழைத்து, மட மடவென ஆர்டர் போட ஆரம்பித்தனர். அது அனைத்தும் ஒரு ஒழுங்கான பல முறை ஒத்திகை பார்க்கப்
பட்ட நாடகம் மாதிரி இருந்தது.
இதுவரை நடந்த சம்பவங்களின் தாக்கத்திலிருந்தும், தேவராஜ், க்ருத்திகாவின் அந்யோன்யத்திலிருந்தும்,
செல்வம், பாரி, ஜார்ஜ் மூவரும் தேவராஜை அரெஸ்ட் செய்யாமல், ஏன், சற்று மரியாதையாகவே
நடத்தியதையும் பார்த்த சந்தானம் ஒன்றும் புரியாமல் சற்று களைப்பாக அங்கிருந்த ஒரு நாற்காலியில்
அமர்ந்தார்.
அதைப் பார்த்த தேவராஜ், அவர் அருகில் சென்று, “மாமா, ரொம்ப சாரி, நான் உங்களை கொஞ்சம்
அவமரியாதையா நடத்திட்டேன், என்னை மன்னிச்சுடுங்க, மாமிகிட்ட நானே கால்ல விழுந்து மன்னிப்பு
கேட்டுக்கரேன்” என்றான். அப்படிச் சொல்லும்
போதே அவன் குரல் தழுதழுத்தது.
சந்தானம் உடனே, “போடா லூஸ், நீ நல்லா இருக்கரதுதானடா நான் என் அக்காவுக்கும், மாமாவுக்கும்
செய்யர மரியாதை. ஒரு விதத்துல நீ சொன்னது எதுவுமே
தப்பில்லை, கூடப் பிறந்த தம்பியா இருந்தும், பவர்ல இருந்தும், அவங்க இறந்தது ஆக்ஸிடெண்ட்ல
இல்லை கொலைதாங்கரதை கண்டு பிடிக்ககூட மூளையில்லாம இருந்திருக்கேனேன்னு நினைச்சா ரொம்ப
அசிங்கமா இருக்கு. இப்ப நடந்தது எல்லாத்தையும் ஒன்னு விடாம சொல்லு” என்றார்.
அப்போது பாரி குறுக்கிட்டு, “சார் அது கொஞ்சம் வெய்ட் பண்ணலாம், இப்போ நீங்க எல்லோரும்,
கொஞ்சம் களைப்பா வர்ர மாதிரி வெளியில வாங்க, அங்க ஒரு வீடியோ குழு உங்களை வீடியோ எடுப்பாங்க,
அப்புறம், தேவராஜ் ஒரு ஸ்டேட்மெண்ட் கொடுத்ததும், நீங்க அவர் சொல்றத ஆமோதிச்சு பேசுங்க,
பிறகு எல்லோரும் கிளம்பி அருள் சார் வீட்டுக்கு போயிடுங்க, இங்க நான், ஜார்ஜ், செல்வம்
மூனு பேரும், மத்த வேலைகளை முடிச்சுட்டு, எஃப்.ஐ.ஆர் பதிவு பண்ணிட்டு, முதல் அமைச்சர்
வீட்டில அவரையும், சீஃப் செகரெட்டரியையும் சந்திச்சு நடந்ததை விளக்கிட்டு அருள் வீட்டுக்கு
வரோம். 5 நிமிஷம் முன்னாடி நானே முதல் அமைச்சருக்கும், சீஃப்
செகரெட்டரிக்கும் ஃபோன் பண்ணி விஷயத்தை சொல்லிட்டேன். இப்ப உடனே இங்கிருந்து கிளம்புங்க” என்றார்.
அவங்க வெளியில வரவும், தமிழகத்தின் பல சானல் காமிராக்கள் மின்ன, பலர் மைக்கோடு
இருந்தார்கள். தேவராஜ் எல்லோருக்கும் முன்னாடி
சற்று தள்ளாடியபடி நடக்க அவன் தோளோடு தோளாக கொடி போல ஒட்டிக் கொண்டு க்ருத்திகாவும்
நடக்க, அவளை ஒரு கைத்தாங்களாக அழைத்து வருவது போல இருந்தது அவர்களுடைய நடை. சொல்லாமலேயே அருளும், சந்தானமும், தளர்ந்து போய்தான்
நடந்தார்கள்.
தேவராஜ் சுருக்கமாக, “அமைச்சர் அறிவுமதியும் அவரது மகன் அருள்மதியும் சேர்ந்து
என் அம்மா அப்பாவை 4 வருடங்களுக்கு முன்னாடி கொன்னுட்டாங்க, அது விவரம் எனக்கு போனவாரம்
தெரிய வந்தது, அதை அவங்க கிட்ட கேட்ட போது, அவங்க என்னையும் க்ருத்திகாவையும் இங்க
கூட்டிட்டு வந்துட்டாங்க, எங்க மாமா கமிஷ்னர் சந்தானம், க்ருத்திகாவோட அப்பா அருள்நிதி,
எஸ்.ஐ செல்வம், கமாண்டோஸ் லீடர்ஸ் பாரி மற்றும் ஜார்ஜ் எல்லோரும் ஒரு டீமா ஒர்க் பண்ணி
எங்களை காப்பாத்திட்டாங்க. அமைச்சர் சுட்டதில
கமிஷ்னர் சந்தானத்தின் இடது கைல ஒரு தோட்டா இன்னும் இருக்கு, அப்போ கமாண்டோஸ் சுட்டதில
அமைச்சரும் அவருடைய மகனும் இறந்துட்டாங்க.
இப்ப கமிஷ்னரை ஹாஸ்பிடலுக்கு கூட்டிட்டு போயிட்டிருக்கோம். மத்த கேள்விகளை, பாரி சார் கிட்டயும் ஜார்ஜ் சார்
கிட்டயும், கேளுங்க விளக்கமா பதில் சொல்வாங்க.” என்ற படி கூட்டத்தை விலக்கி அங்கு நிறுத்தப்
பட்டிருந்த ஒரு காரை நோக்கி நடக்க ஆரம்பித்தான்.
அவர்கள் ஏறிச்சென்ற காரை சற்று தூரம் துரத்தி வந்த பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி
கும்பல் பின்தங்கிவிட, சிறியதாக புன்னகைக்க ஆரம்பித்த தேவராஜ் கொஞ்சம் கொஞ்சமாக ஆழ்ந்து
சிரிக்க ஆரம்பித்து, கண்களில் தண்ணீர் வரும் படி சிரித்தான்.
அப்போது க்ருத்திகா, “ஏய் லூசு, எதுக்கு இப்படி சிரிக்கர”
அதுக்கு, “அமைச்சர் போட்ட நம்மள தீர்த்து கட்ற ப்ளான் ரொம்ப நல்லாதான் இருந்துச்சு
ஆனா பாவம் எக்ஸிக்யூஷன்தான் சொதப்பிடுச்சு, அத நெனச்சேன் சிரிச்சேன்” என்றான்.
ஹாஸ்பிடல் போய், சந்தானம் கையில் பெரிய கட்டுடன் அருள் வீட்டிற்கு இவர்கள் வரவும்,
வாசலில் அருளின் மனைவி, மஞ்சுளா ஒரு ஆரத்தி தட்டுடன் வந்தார். வந்தவர்,
“க்ருத்திமா,
நீயும், தேவராஜும், சேர்ந்து நில்லுங்க, என்னங்க, நீங்களும் சந்தானம் அண்ணாவும், பக்கத்துல
நில்லுங்க, எல்லோருக்கும் இருக்கர த்ருஷ்டி கழியட்டும்” என்றார்.
அருள், சந்தானத்தை பார்த்து, “பாத்தியாப்பா எப்படி மரியாதை கிடைக்குதுன்னு, க்ருத்திமா,
உங்க அம்மாகிட்ட தேவராஜ பத்தி எப்ப சொன்னே?”
அதற்கு பதில் சொல்லாமல் க்ருத்திகா வெட்கத்துடன் புன்னகைத்தாள்.
அப்போது அங்கு பாரி, செல்வம் மற்றும் ஜார்ஜும் வர எல்லோரும் சேர்ந்து உள்ளே சென்றனர்.
சந்தானம் பாரியைப் பார்த்து “பாரி, முதலமைச்சரும், சீஃப் செகரெட்டரியும், என்ன
சொன்னாங்க சொல்லுங்க”
“அவங்களுக்கு நடந்த அத்தனையும் சொன்னேன், அந்த இடத்துல எடுத்த வீடியோவையும் போட்டு
காமிச்சேன், முதலமைச்சர், அந்த ஆளை நல்லவேளை நீங்க சுட்டுத் தள்ளிட்டீங்க இல்லை கட்சியை
ரெண்டா பிரிச்சிருப்பான்னார், தலைமை செயளாலர், நம்ம எல்லோரையும், நாளைக்கு செகரட்டேரியேட்
வந்து ஒரு ரிப்போர்ட் அவருக்கு நேரடியா தரச்சொன்னார். உடனடியா அந்த ஐ.டி. பார்க் கட்ற விஷயத்தை தடை பண்ண
ஒரு மோஷன் இந்த வாரமே சட்ட சபையில கொண்டு வராங்க.
ஆக எல்லாம் சுமுகமா நடந்து முடிஞ்சுடுச்சு”
“இப்போ இன்னிக்கு நடந்த மத்த விஷயங்களைப் பத்தி சொல்லுங்க” என்றார் சந்தானம்
அதற்கு பாரி, “அதை நான் சொல்றதை விட, இதைப் ப்ளான் செஞ்ச செல்வமும், தேவராஜும்
சொல்றதுதான் சரியா இருக்கும்”
செல்வம் உடனே, “சார், உங்களுக்கு ஃபோன் செஞ்சது நம்ம ஜார்ஜ், பைக் குமாரை போட்டு
தள்ளினது அவன் கூட்டத் தலைவன் ராயபுரம் பாஸ்கர், காரணம், ரெண்டு பேருக்கும் இடையில
கொடுக்கல் வாங்கல் தகராறு. பாஸ்கர் பேரை சொல்லி பைக் குமார் நிறைய இடத்துல தண்டல் வசூல்
பண்ணி அதை பாஸ்கருக்கு தெரியாம மறைச்சு வெச்சிருக்கான், அது தெரிஞ்சதும் நாங்க அதை
நாங்க எங்களுக்கு சாதகமா ஆக்கிகிட்டோம். ரெண்டு பேரையும், தேவராஜ் வீட்டுக்கு சமரசம்
பேச வரச் சொல்லிட்டு, எங்க ஆளுங்களை விட்டு ரெண்டு பேரையும், ரேக்கி விட்டுட்டோம். அப்போ நடந்த கைகலப்புல, பாஸ்கர் குமாரை போட்டுட்டான்,
அவங்க சண்டைக்கு நடுவுல உங்க அக்கா விஷயம் வெளில வந்துச்சு.”
“என் அக்கா விஷயம் வெளில வந்துச்சா! எப்படி?
“தேவராஜ் வீட்டுல இருந்த உங்க அக்கா மாமா படத்தை பார்த்துட்டு, தேவராஜ் கிட்ட,
பாஸ்கர் சொல்லித்தான் அவன் லாரி ஏத்தி அவங்கள அடிச்சேன்னு குமார் சொன்னான். அப்போ பாஸ்கர், பொய் சொல்லாதடா, நானா சொன்னேன்,
மினிஸ்டர் அறிவுமதி சொன்னாரு நீ செஞ்சே அதுக்கு
தானடா உன் பேர்ல ஒருத்தனை உள்ள வெச்சுட்டு, உன்னை வெளில விட்டிருக்காரு” ன்னான்.
“அப்புறம்”
“குமாரை பாஸ்கர் போட்டதும், நாங்க உள்ள புகுந்து பாஸ்கரை
தூக்கிட்டோம்.”
“அது சரி, எப்படி எனக்கு ரெண்டு மணி நேரம் முன்னாடியே
ஃபோன் பண்ணினீங்க?”
“அதுதான் தேவராஜோட மாஸ்டர் ஃப்ளான். தேவராஜ், பைக் குமார் பத்தியும், அவன்தான் தன்னோட
அம்மா அப்பாவை கொலை பண்ணிணான்னு கண்டு பிடிச்சுட்டான், அதுல தான் குமார் பேர்ல வேற
ஒருத்தனை ஜெயில்ல் வெச்சுருக்காங்கன்னு கண்டு பிடிச்சோம்.”
“பிடிச்சோமா?”
“சாரி சார், உங்களுக்கு தெரியாது, நானும் தேவராஜும்
காலேஜ்-ல க்ளாஸ் மேட்ஸ் அண்ட், ஹாஸ்டல் ரூம் மேட்ஸ். “
“தேவராஜ், செல்வம் சொல்றது உண்மையா?”
“அமாம் மாமா, காலேஜ்ல மட்டும் இல்லை, நானும் செல்வமும்,
7த்ல இருந்து க்ளாஸ் மேட்ஸ்.”
“சரி மேல சொல்லுங்க, அதுக்கு முன்னாடி இதச் சொல்லுங்க,
அப்படி நீங்க ரெண்டு பேரும் க்ளோஸ் ஃப்ரெண்ட்ஸுன்னா, ஏன் அக்காவும் மாமாவும் இறந்தப்ப
செல்வம் வரலை?”
“அப்பதான் செல்வத்துக்கு டிரைய்னிங் ஆரம்பிச்சிருந்தது,
6 மாசம் அவனால வெளில வர முடியலை. அவன் வந்துதான்
நிறைய ஹெல்ஃப் பண்ணிணான். ஜார்ஜ் அங்கிள், பாரி சார் எல்லோரும் பரிச்சயம் ஆனாங்க, துரை
சார் தான் இந்த விஷயத்துக்கு எங்களுக்கு ப்ளான் பண்ணி கொடுத்தார்”
“என்னது துரை சார் ப்ளான் பண்ணி கொடுத்தாரா? அப்படின்னா எதுக்கு ஃபோன் பண்ணி உங்களை காலைல திட்டினார்?”
“சார் அவர் திட்டினார்ன்னு நாந்தான் உங்க கிட்ட சொன்னேன்,
அவர் ஃபோன் பண்ணினது சிச்சுவேஷன் ரிப்போர்ட் வாங்கரதுக்கும், உங்க ரியாக்ஷன் எப்படி
இருக்குன்னு பார்க்கரத்துக்கும்.”
“என் ரியாக்ஷனா?”
“ஆமாம் சார், நீங்க இந்த ஃபவுல் ப்ளேய கண்டு பிடிச்சிட்டீங்கன்னா,
அருளை வரவழைக்க மாட்டீங்க, அவர் உள்ள வந்தாதான், நாங்க க்ருத்திகாவை தூக்க முடியும்,
அப்பதான், இந்த விஷயம் சூடு பிடிக்கும்”
அப்போது அருள், “அம்மா க்ருத்திகா, உனக்கு இந்த விஷயம்
எல்லாம் முன்னாடியே தெரியுமா?”
“தெரியும் பா, அம்மாவுக்கும் தெரியும்,”
“அம்மாவுக்குமா?”
“இது மட்டும் இல்லை, நானும் தேவராஜும் காலேஜ் டேஸ்ல
இருந்து நல்ல ஃப்ரெண்ட்ஸ் அவரோட அம்மா, அப்பா இறந்த பிறகு இன்னும் நெருக்கமா ஆகி ஒரு
3 வருஷமா காதலிக்கரோம். தேவராஜ் உங்க க்ளோஸ்
ஃப்ரெண்டோட நெவ்யூ வா இருந்தாலும், நீங்க காதல் கல்யாணம்னா ஒத்துக்குவீங்களோ, மாட்டீங்களோன்னு
அம்மா சொன்னாங்க, அதனால் சமயம் பார்த்து உங்க கிட்ட சொல்றதா சொன்னாங்க, அது மட்டும்
இல்லை, தேவராஜ், உங்க சம்மதமும், சந்தானம் அங்கிள் சம்மதமும் இருந்தா தான் எங்க கல்யாணம்னு
சொல்லிட்டாரு.”
“தம்பி, அப்படியா சொன்னீங்க!”
“அருள் சார், எனக்கு க்ருத்திகா மனைவியா வரும் போது, உங்க அன்பும், மாமாவோட அரவணைப்பும் வேணும், அதே
சமயம், என் அம்மா அப்பா இறந்த விஷயத்தை இன்வெஸ்டிகேட் செஞ்ச நீங்க சரியா அது ஆக்ஸிடெண்டுன்னு
எப்படி சொன்னீங்கன்னு தெரியனும், அதனால எங்க ப்ளான்ல இதுவும் செர்ந்து நாங்க க்ருத்திகாவை
உங்க வீட்டில இருந்து கூட்டிட்டு போனோம்.”
“நான் இன்வெஸ்டிகேட் பண்ணினதுல, அந்த லாரில ப்ரேக்
ஃபெயில் ஆகி ரோடுல அங்க இங்க ஆடி வந்ததை பார்த்த பல பேர் சொன்னது சரியா இருந்தது ஆனா,
அந்த லாரி உங்க அப்பா அம்மா வந்த காரை பார்த்துதான் போய் அடிச்சி தூக்கிடிச்சுன்னு
கண்டு பிடிச்சேன், அது கொஞ்சம் நெருடலா இருந்தாலும், லாரியோட ப்ரேக் ஃபெயிலானது கரெக்ட்தான்,
அந்த வண்டிய டிரைவர் எப்படி ஓட்டிட்டி வந்திருக்க முடியும்னு நான் விசாரிக்கும் போது,
அமைச்சர் மகன் என்னை மீட் பண்ணி, இந்த விஷயத்தை இத்தோட விடலைன்னா, அந்த லாரி மாதிரி
அவங்க கிட்ட பினாமி பேர்ல இன்னும் 100 லாரி ஓடுது அதுல ஒன்னு இதே மாதிரி க்ருத்திகா
காலேஜ் போகும்போது தெரியாம அடிச்சா என்ன பண்ணுவேன்னு என்னை கேட்டான், அது மட்டும் இல்லாம, ரொம்ப கஷ்டப் படாதீங்க, வேணும்னா
எந்த லாரி க்ருத்திகாவை அடிக்குமோ அதோட டிரைவர் பேர், அந்த லாரியோட நம்பர் எல்லாம்
ஒரு பேப்பர்ல எழுதி என் கைல கொடுத்தான், அதுக்கு அப்புறம்தான் நான் இதை ஒரு ஆக்ஸிடெண்டுன்னு
சொல்லி க்ளோஸ் பண்ணிட்டேன். ஆனா, இந்த விஷயத்தை
நான் துரை சார் கிட்ட பர்சனலா சொல்லிட்டேனே!”
“தெரியும் அங்கிள், ஆனா, அதுக்கு எந்த ப்ரூஃப்ம் இல்லை
அதனாலதான், துரை சார், உங்களை இந்த ப்ளான்ல இருக்க வெக்க க்ருத்திகாவை கடத்தினமாதிரி
நாடகம் ஆடச் சொன்னார்.”
அப்போது, சந்தானம், “அமைச்சர் பையனை எப்ப தூக்கினீங்க?”
அதற்கு பாரி, “குமாரும், பாஸ்கரும் தேவராஜ் வீட்டுல
சண்டை போட்டிட்டிருக்கும் போது, அவனை குமாரை விட்டு வரச்சொல்லி மத்தியஸ்தம் பண்ண வரச்சொன்னோம்,
அவன் வரும் போது, அவனை வழியிலேயே தூக்கிட்டோம். தூக்கிட்டு, அமைச்சருக்கு ஃபோன் போட்டு
பையனை விட்டே பேசச் சொல்லி தனியா வரச் சொன்னோம், அவர் சரின்னு சொல்லிட்டு, அவரோட ஆளுங்களோட
வந்தாரு, அதனால ரெண்டு மூனு இடம் மாத்திட்டு, அவங்க கொஞ்சம் அலைஞ்சதுல கடுப்பாகி இருக்கும்
போது, எங்க கமேண்டோஸ விட்டு அவரோட ஆளுங்கள்ள ஒரு 10 பேரை போட்டு தள்ளிட்டோம், அதுல
கொஞ்சம் கலவரமான அவரை தனியா வந்தா, ஒழுங்கா அவரும், அவர் பையனும் இன்னிக்கு வீடு போய்
சேரலாம்னு புரிய வெச்சோம்.”
“இது பெரிய ரிஸ்க் இல்லையா பாரி?”
“சார் ரிஸ்க் தான், ஆனா, அதையெல்லாம் பார்த்தா நாமெல்லாம்,
போலீஸ்லயும், பாதுகாப்பு படைலயும் இருக்க முடியாது”
“எதுக்கு என்னை வர வழைச்சீங்க?”
“உங்க ரெப்புடேஷன், உங்க சின்சியாரிட்டி, உங்க லவ்
ஃபார் தேவராஜ், உங்க திங்கிங் மெதேட்ஸ் எல்லாம் எங்க வேலையை ரொம்ப பாதிக்கும்னு தெரியும்,
இருந்தாலும், நீங்க ஏன் வாலண்டரியா உங்க அக்கா மாமா டெத் கேசை விசாரிக்காம, அதை அருளை
நம்பி ஒப்படைச்சீங்கன்னு எங்களுக்குத் தெரியாது, அதை விசாரிக்கவும் முடியாது அதனால
உங்களுக்கு ஒரு செக் வெக்க நாங்க முடிவு பண்ணினோம்.”
“நான் ஏன் விசாரிக்கலேன்னு சொன்னா உங்களுக்கெல்லாம்
ஆச்சரியமா இருக்கும், நான் எதையாவது சரியா விசாரிக்காம விட்டுட்டாலோ, இல்லை, அக்கா,
மாமா மேல இருக்கர பாசத்துல பாக்கர எல்லோரையும், சந்தேகப் பட்டுட்டாலோ கேஸ் சொதப்பிடும்னுதான்
அருளை விசாரிக்கச் சொன்னேன், இப்பதான் தெரியுது அருளும் தன் கடமையை சரியா செய்யலைன்னு”
“கடமையை சரியா செய்யலேன்னு சொல்லாதடா, செய்ய விடலைடா?”
“ஏதோ ஒன்னு, எப்படியும், போன உசிரு திரும்பியும் வரபோகுதா
என்ன? இந்த விஷயம் எனக்கு முன்னாடியே தெரிஞ்சிருந்தா,
குமரையும், பாஸ்கரையும், நானே என்கவுண்டர் பண்ணியிருப்பேன். ஆனா, இந்த மினிஸ்டரை ஒன்னும் பண்ணியிருக்க முடியாது. இப்போ இவங்க ப்ளான்ல அதுவும் நடந்திடுச்சு.”
அப்போது, அருளின் மனைவி,”எல்லோரும் டையர்ட்டா இருப்பீங்க,
அதனால சூடா பால் கொண்டு வந்திருக்கேன்” என்றவள், சந்தானத்தையும் அருளையும் பார்த்து,
“என்னங்க உங்க கிட்டயும், சந்தானம் அண்ணா சொல்லாம க்ருத்திகாவை இன்னிக்கு இந்த ப்ளான்ல
ஒர்க் பண்ண வெச்சதுக்கும், அவங்க லவ் பத்தி உங்ககிட்ட சொல்லாம விட்டதுக்கும், சாரி,
ரெண்டு பேரும் ரொம்ப நல்ல குழந்தைங்க, ஒருத்தரை ஒருத்தர் நல்லா புரிஞ்சு கிட்டு ஒருத்தருக்கு
ஒருத்தர் அனுசரணையா இருக்காங்க, கூடிய சீக்கிரம் அவங்க கல்யாணத்தை முடிச்சுடனும்”
“தேவராஜோட மாமான்னு நான் அவனுக்கு தேவையான சமயத்துல
எதுவும் செய்யலை, ஆனா அவன் என் அரவணைப்பு வேணும்னு நினைக்கிறான்னா அதை கண்டிப்பா செய்வேன். நல்ல முகூர்த்தம் பாருங்க, கல்யாணத்தை ஜாம் ஜாம்னு
நடத்திடுவோம், என்னடா அருள் சரியா, உனக்கு இதுல சம்மதமா?”
“சம்மதமா! என்னடா கேக்கர, இதுதான் க்ருத்திகாவுக்கு
சந்தோஷம்னா, அதை நான் எப்படிடா தடை போடுவேன், அடுத்த முகூர்த்ததுல கல்யாணம் பண்ணிடுவோம்”
என்றவர், தேவராஜ் பக்கம் திரும்பி, தம்பி, நான் உங்களுக்கு ஒரு உதவியும் பண்ணலை ஆனா
நீங்க உங்க அன்பை எங்க மேல கொஞ்சங்கூட கொறைக்கல, இதே அன்போட க்ருத்திகாவை நீங்க பார்த்துப்பீங்கன்னா,
க்ருத்திகாவுக்கும் உங்களுக்கும் அடுத்த முகூர்த்ததுல கல்யாணம், சரியா”
“அருள் மாமா, இதெல்லாம் கேக்கனுமா, என்னிக்கு முகூர்த்தம்னு
சொல்லுங்க மிச்ச விஷயத்தை நான் பார்த்துக்கரேன்”
சந்தானம் குறுக்கிட்டு, “இருடா, உங்க மாமிகிட்ட ஒரு
வார்த்தை சொல்லிடரேன், அவளை நாளைக்கு புறப்பட்டு வரச் சொல்லிடரேன், நாளை மறுநாள் கோவில்ல
சின்னதா நிச்சயம் செய்துட்டு, அடுத்த முகூர்த்ததுல கல்யாணம்” என்றார்.
அப்போது க்ருத்திகா, “அப்பாடா எல்லாம் நல்ல படியா
முடிஞ்சுது, தேவ், மொதல்ல ஒரு நல்ல வீடா வாங்கு, அந்த கொலை நடந்த வீட்டுல என்னால குடுத்தனம்
நடத்த முடியாது, இந்த மீசையை டிரிம் பண்ணு, இனிமே நீ தாடி வெக்கக்கூடாது, எனக்கு ஒரு
டைமண்ட் நெக்லஸ் செட், ஒரு ஒட்டியாணம், அதோட மாட்சிங் இயர் ரிங்ஸ், வளையல் எல்லாம்
நம்ம ரிசப்ஷனுக்கு வேணும், மொதல்ல ரிம்லெஸ் க்ளாஸ் போடரத நிறுத்து, அதுக்கு பதிலா காண்டாக்ட்
லென்ஸ் போடு, தொப்பையை கொறச்சா டி-சர்ட்டை இன் பண்ணலாம், அப்புறம்..”
தேவ் தலைக்கு மேல கையைத் தூக்கி, “அருள் மாமா, சந்தானம்
மாமா, இவளை கல்யாணம் பண்ணி இவளை கண்கலங்காம வெச்சுக்கரதுகுள்ள என் அப்பா கஷ்டப்பட்டு
சேர்த்து வெச்ச சொத்தெல்லாம் காலியாயிடும் போல இருக்கே”
“டேய், சும்மா உன்னை ஓட்டினேன், நீ, எப்ப ரெடியோ அப்ப
நானும் ரெடி உன்னை கல்யாணம் செஞ்சுக்க, ஆனா அந்த வீடு விஷயம் மட்டும் தான் என்னோட டிமாண்ட்”
“அவ்வளவுதானே, க்ருத்திமா, நான் உனக்காக ஏற்கனவே ஒரு
பெரிய ஃப்ளாட் வாங்கி வெச்சிருக்கேன் அதை உன் கல்யாணத்துக்கு பரிசா கொடுத்துடரேன்”
“அருள் மாமா, அப்படியே அந்த டைமண்ட் செட்டும் ஞாபகம்
வெச்சுக்கங்க, ஒட்டியாணம் இப்ப வேண்டாம், அவளோட சீமந்தம் போது போட்டா போதும்”
“இப்படியே பேசிகிட்டிருந்தா, ஒரு நாள் உன்னை செல்வம்
அண்ணா கிட்ட சொல்லி போடச் சொல்லிடுவேன்” என்றபடி தன் வலக்கையால் தேவ்ராஜின் இடக்கையை
இறுக்கிப் பிடித்து அவன் தோளில் சாய்ந்தாள் க்ருத்திகா.
இவர்களது செல்ல நாடகத்தை கண்களில் நீர் வர பார்த்த
படி மெதுவாக தன் மனைவியை கைப்பேசி மூலம் அழைக்க வராண்டாவை நோக்கி நகர்ந்தார் சந்தானம்,
(முற்றும்.)