Wednesday, May 15, 2013

தடயம் - அத்தியாயம் - 14


இதுவரை வந்த நாவலை படிக்க:

தடயம் அத்தியாயம்-1

தடயம் - அத்தியாயம் - 2

தடயம் - அத்தியாயம் - 3

தடயம் - அத்தியாயம் - 4

தடயம் - அத்தியாயம் - 5

தடயம் - அத்தியாயம் - 6

தடயம் - அத்தியாயம் - 7

தடயம் - அத்தியாயம் - 8

தடயம் - அத்தியாயம் - 9

தடயம் அத்தியாயம் - 10

தடயம் - அத்தியாயம் - 11

தடயம் - அத்தியாயம் - 12"அவரை விடுங்க அவர் போய் அவரோட செல்ல பெண்ணை பார்க்கட்டும்." என்று கொடவுனின் பக்கவாட்டிலிருந்து ஒரு குரல் கேட்டது.  அந்தக் குரலைக் கேட்ட சந்தானம் அதிர்ச்சியில் உறைந்தார்.

சந்தானத்தின் காலடியில் ஒரு வெடி குண்டு இருக்கிறது என்றால்கூட அவர் இவ்வளவு நடுங்கியிருக்க மாட்டார்.  ஆனால் அந்தக் குரலைக் கேட்டதும் அவருக்கு ஏற்பட்ட நடுக்கத்தை சொல்லி மாளாது. 

அருளுக்கு அந்த குரல் வந்த திசையில் பார்க்க வேண்டும் என்று கூட தோன்றாமல் க்ருத்திகாவையே பார்த்துக் கொண்டிருந்தார்.  

சந்தானம் குரல் வந்த பக்கம் நடுக்கத்துடன் மெதுவாகத் திரும்ப அங்கு ஒரு நாற்காலியில் தேவராஜ் அமர்ந்திருந்தான். 

"தேவராஜ் நீ எப்படி இருக்கே, என்ன நடக்குது இங்க, யார் இவங்க எல்லாம், உன் வீட்டுல நடந்த கொலைக்கும், உனக்கும் என்ன சம்பந்தம், அருளோட பெண்ணை நீதான் கடத்தினியா, ஏன்,  எதுக்காக இதெல்லாம் நடக்குது?" என்று சரமாரியாக கேள்விகளை கொட்ட ஆரம்பித்தார்.

"மாமா, எத்தனை வருஷம் ஆனாலும், நீங்க போலீஸ்ங்கரதை மறக்கரதே இல்லை.  சும்மா நொய் நொய்ன்னு கேள்வி கேக்காதீங்க, பதில யாரும்  ஒரு கவர்ல போட்டு உங்களு தரதுக்கு தயாரா இல்லை.  அந்த சேர்ல உட்கார்ந்து நடக்கரத வேடிக்கை மட்டும் பாருங்க"

"என்ன அருள் சார், எப்படி இருக்கீங்க.  உங்க பொண்ணு க்ருத்திகா நல்லா இருக்காங்களா, அவங்களை கொஞ்சினது போதும் இப்ப என் பக்கம் திரும்புங்க"

"டேய் தேவராஜ், நான் உனக்கு என்னடா கெடுதல் செஞ்சேன்.  ஏண்டா எம் பொண்ணை கடத்தி வெச்சிருக்கே"

"க்ருத்திகா நிஜமாவே உங்க பொண்ணா?"

"க்ருத்திகா நாங்க தவமா தவமிருந்து பெத்த பொண்ணுடா"

"ஓ! தவமா தவமிருந்து பெத்த பொண்ணுக்கு  நீங்க ஃபீல் பண்றீங்களே, அப்படின்னா தவமா தவமிருந்து என்னை பெத்த என் அம்மாவும் அப்பாவும் ரோட்டுல அனாதையா அடிபட்டு கெடந்தாங்களே, அதுக்கு நான் எவ்வளவு ஃபீல் பண்ணணும்"

"தேவராஜ், அது ஒரு சாதாரண ஆக்ஸிடெண்ட்"

"மாமா, அது உங்களுக்கும் மத்தவங்களுக்கும், ஆனா எனக்கும் அப்படித்தான்னு யார் சொன்னா?"

"சரிடா, அது ஒரு பெரிய துக்கம்தான் ஆனா அது ஒரு ஆக்ஸிடெண்டுங்கரதுக்கு எல்லா எவிடெண்ஸும் தெரிஞ்ச, அந்த கேஸ்ல தடவியல் செஞ்ச அருள் கிட்டயே கேளூ"

"என்ன அருள் சார், மாமா சொல்றது கரெக்டா?"

"அதுல உனக்கு இன்னுமா சந்தேகம்"

"அப்படியா, சரி, ஒரு சாதாரண ரோட் ஆக்ஸிடண்ட்டுக்கு எப்ப தடவியல் நிபுணர்களை யூஸ் பண்ண ஆரம்பிச்சாங்க?"

அந்தக் கேள்வியால் அருள் கொஞ்சம் தடுமாற ஆரம்பித்தார், மெதுவாக இழுத்தபடி, 

"அது பத்தி ஒரு ரிபோர்ட் வேணும்னு சந்தானம் தான் கேட்டார்"
அவர் சொல்லி முடிக்கவும், அவர் முகத்தில் தேள் கொட்டியது போல ஒரு தடியன் புறங்கையால் தாக்கினான்.  அந்த அடியில் அருளுக்கு வாயின் ஓரம் கிழிந்து ரத்தம் தெறிக்க ஆரம்பித்தது.  அதை பார்த்த க்ருத்திகா கீச் என்று கத்தினாள்.

"தேவராஜ், அருள் என்னோட ஃப்ரெண்டு மட்டுமில்லை, உன்னோட அம்மா, அப்பா ரெண்டு பேருக்கும் நல்ல ஃப்ரெண்டு தெரியுமில்லை, அப்படியிருக்கும்போது இப்படி அவரை நடத்தரது நல்லது இல்லை. 

"அப்படியா மாமா, சரி நான் இப்போ உங்க விஷயத்துக்கு வரேன்.  உங்க கூட வந்தாங்களே பாரி, ஜார்ஜ், செல்வம் அவங்கள்ளாம் எங்கே?"

"என்ன சொல்றே தேவராஜ், எங்க ரெண்டு பேரையும் தனியா வரச்சொன்னே, வந்துட்டோம், எங்களை அங்க இங்க அலைகழிச்சு இங்க கொண்டு வந்துட்டு இப்போ இப்படி கேக்கரே?"

“அப்படியா மாமா, சரி அப்போ இது என்ன?” என்றபடி பக்கத்தில் இருந்த ஒரு சின்ன டேபிளில் இருந்து ஒரு ரிமோட் கண்ட்ரோலரை எடுத்து அழுத்த பக்கத்தில் இருந்த ஒரு டெலிவிஷனில் ஒளி ஒலியுடன் சந்தானம், ஜார்ஜ், செல்வமும் பாரியும் அருள் வீட்டில் பேசுவது திரையில் ஓடியது. அதைப் பார்த்ததும் அருளும், சந்தானமும் அதிர்ந்து போய் நின்றார்கள். 

“என்ன அதிர்ச்சியா இருக்கா, இன்னும் நிறைய இருக்கு.  நீங்க காலைல என் வீட்டுக்கு வந்ததுல இருந்து, இங்க வந்த வரைக்கும் எல்லாம் லைவ் ஆ எனக்கு ரிலே ஆயிட்டிருக்கு.  அந்த மூனு பேரும் இங்க வரது கொஞ்சம் கஷ்டம் தான், அப்படியே வந்தாலும், அதுக்கு முன்னாடியே நாங்க இங்க இருந்து கிளம்பியிருப்போம்.”

“தேவராஜ், நான் அவங்க 3 பேரும் எங்க பின்னாடி வரதுக்கு சம்மதிச்சதுக்கு காரணம், உன்னையும், க்ருத்திகாவையும், காப்பாத்தரதுக்குத்துதான்.  இங்க வந்ததுக்கு அப்புறந்தான் தெரிஞ்சுது இதையெல்லாம் செய்யரது நீ, ராயபுரம் பாஸ்கர் கும்பல் இல்லைன்னு.  ஏன்? எதுக்காக இப்படி செய்யரே?  உன் வீட்டுல யார் பைக் குமாரை கொலை பண்ணினது. அதை செஞ்சது நீயா இருக்கும் பட்சத்துல என் அக்கா மகன்னு பாக்காம உன்னை நானே அரெஸ்ட் பண்ண வேண்டியிருக்கும். “

தேவராஜ்,  குறும்பு பார்வையுடன், சின்னதாக புன்னகை செய்த படி, “மாமா,  பைக் குமாரை நான் கொல்லலை, அப்படியே நான் அவனை கொலை செஞ்சிருந்தாலும், உங்களால என்னை ஒன்னும் பண்ண முடியாது.  காரணம், அவன் உங்க போலீஸ் ரெகார்ட் படி இப்போ வேலூர் ஜெயில் ல இருக்கான். அப்படியிருக்கும் போது அவன் எப்படி என் வீட்டுல செத்துப்போக முடியும்.”

“என்னடா சொல்றே நீ? அவன் வேலூர் ஜெயில்ல இருக்கானா? எப்படிடா?”

“நான் சொல்லலை, அப்படித்தான் உங்க ரெகார்ட்ஸ் சொல்லுது.  அம்மாவும் அப்பாவும், ஆக்ஸிடெண்ட்ல இறந்து போனதும், நான் தோண்டித் துருவி கண்டு பிடிச்சது என்னது தெரியுமா, அன்னிக்கு பைக் குமார்தான் லாரி ஓட்டிட்டு வந்து, அவங்க வந்த வண்டியை அடிச்சு தூக்கிட்டான்னு”

“அதை ஏண்டா எங்கிட்ட சொல்லலை”

“சொல்லியிருந்தா என்ன பண்ணியிருப்பீங்க?”

“அவனை உடனே தூக்கி உள்ள வெச்சிருப்பேனே?”

“அப்படியா!, அப்போ ஏன் அதை நீங்களே கண்டு பிடிக்கலை?”

தயங்கிய படி, “அது வந்து .... அந்த சமயம் எனக்கு வேற இம்பார்டண்ட் அசைன்மெண்ட்ஸ் இருந்துச்சு, அதனாலதான் அருளை இதைப் பத்தி தீர விசாரிக்கச் சொன்னேன்.”

“அது எப்படி உங்க ஜுரிஸ்டிக்‌ஷன்ல நடந்த ஒரு ஹிட் அண்ட் ரன் கேஸ்ல, அதுவும், உங்க அக்காவும், மாமாவும், செத்துப் போன கேஸ்ல, இவ்வளவு மெத்தனமா இருக்க முடிஞ்சுது, நீங்களே டைரெக்ட்டா இன்வால்வ் ஆகாம, உங்க ஃப்ரெண்டை விட்டு விசாரிக்க சொன்னீங்க?”

அந்தக் கேள்வியால் அடிபட்ட வலி முகத்தில் தெரிந்தபடி, “மெத்தனம் இல்லைடா, My hands were totally tied என்னால ஒன்னும் செய்ய முடியலை”

“அப்ப  இப்ப எதுக்கு நாட்டாமை பண்ணிகிட்டிருக்கீங்க, எல்லாத்தையும், நான் பார்த்துக்கரேன்.”

“சரிடா, நான் என் அக்கா செத்ததுக்கு ப்ராயச்சித்தமா எதுவும் செய்யலை, அதுக்கு அருளோட குடும்பத்தை எதுக்கு பழி வாங்கறே?”

“அது தனி கதை, அதுக்கு அப்புறம் வரேன்.  உங்க கையை யார் கட்டிப் போட்டங்க, ஏன்? அதைச் சொல்லுங்க”

தயங்கிய படி, “அதாவது எனக்கு அப்போ வேலை ஜாஸ்தி இருந்ததுனால எதுவும் செய்ய முடியலைங்கரதை தான் நான் my hands were totally tiedன்னு சொன்னேன்.  மத்தபடி யாரும் என் கையை கட்டி போடலை”

அப்போது அருள், “ஏன் சந்தானம் பயப்படரியா, எங்கிட்டயே எத்தனை தடவை சொல்லியிருக்க, அது ஒரு ஆக்ஸிடெண்ட் இல்லை கொலை, ஆனா யாருன்னு தெரியாம ஒன்னும் பண்ண முடியலைன்னு, இப்ப இப்படி பேசர”

சந்தானம் கோபமாக “அருள்” என்றார்.

“எங்கிட்ட கோபிச்சு என்ன புண்ணியம், இப்போ எதுக்குன்னு தெரியாம என் குடும்பமும், இவன்கிட்ட மாட்டிகிட்டு இருக்கு.  டேய், ஏண்டா என்னையும் என் குடும்பத்தையும் என்ன பண்ணப்போறே?”

“அருள் சார், எங்க மாமாவோட ஆத்ம நண்பர் யார்”

“நான்”

“அப்போ, எங்க அடிச்சா இவருக்கு வலிக்கும்” என்ற படி மெலிதாக சிரிக்கத் துவங்கினான்.

“டேய் டேய் இது தப்புடா, அவரை விட்டுடு, நான் உன் மாமாவா இருந்தும் கூட உனக்கு ஹெல்ப் பண்ண முடியலை, அதுக்கு அவரை பழி வாங்காதே, ப்ளீஸ்” என்று கெஞ்சத் துவங்கினார்.

“விட்டுடரேன், மாமா விட்டுடரேன், இவரை, க்ருத்திகாவை, ஏன் உங்களையும் விட்டுடரேன், ஆனா, யார் அதை கொலையில்லை ஆக்ஸிடெண்டுன்னு எழுதச் சொன்னாங்கன்னு சொல்லுங்க விட்டுடரேன்.”

அருள் சந்தானத்தை முந்திக்கொண்டு, “யாரும் எங்களை அப்படி எழுதச் சொல்லலை.  நான் கண்டு பிடிச்சது இதுதான், அந்த லாரில ப்ரேக் ஃபெயிலாகி அந்தக் கார்மேல மோதியிருக்கு அதுவும் இல்லாம அந்த லாரி ரோடுல அங்கயும் இங்கயும் ஓடி ப்ரேக் பிடிக்காம வந்ததை பார்த்த பல கார், ஸ்கூட்டர்கள் ரோடை விட்டு ஒதுங்கிட்டாங்க ஆனா உங்க அப்பா அதை கவனிக்காம நேரா வந்துட்டாரு”

“அப்படியா! இதை ஏன் மாமா, நீங்களும் எங்கிட்ட முன்னாடியே சொல்லலை?”

“நான் எதைச் சொன்னாலும் அதைப் பக்குவமா எடுத்துக்கர பக்குவத்துல அப்போ நீ இல்லை தேவராஜ்”

அப்போது, க்ருத்திகாவின் அருகில் இன்னொரு நாற்காலியில் கட்டிப் போடப் பட்டிருந்த ஒரு இளைஞன் மெதுவாக முனகியபடி தலையைத் தூக்கினான்.  அவனைப் பார்த்த அருள், “தேவராஜ், என்ன பண்றே, இவன் யார் தெரியுமா?, இவன் அப்பா எவ்வளவு பெரிய ஆள்னு தெரியுமா? இவனை இங்க எதுக்காக கட்டிப் போட்டிருக்கே? இவன் முகமெல்லா இப்படி ரத்தம், இவனை அடிச்சியா? இவனோட அப்பாவுக்கு மட்டும், இது தெரிஞ்சுது உன்னை யாராலும், ஏன், அந்த ஆண்டவனாலும் காப்பாத்த முடியாது” என்றார்.

தேவராஜ், சிரித்தபடி, “அப்படியா! இவன் அப்பா பெரிய ஆளா?, என்ன ஒரு 6 அடி உயரம் இருப்பாரா?  போதும் அருள் சார், ரொம்ப பயமுறுத்தாதீங்க.  பாருங்க என் கால் எப்படி நடுங்குதுன்னு” என்றபடி தன் காலை வேடிக்கையாக ஆட்டினான். 

“அருள் சார், அந்தாளையும் தூக்கிட்டு வர ஒரு டீம் போயிருக்கு.  இப்ப வந்துடுவார், அவர்கிட்டயே கேக்கலாம் அவரு எவ்வளவு பெரிய ஆளுன்னு”

சந்தானம் உடனே, “அருள், யார் இந்தப் பையன், யார் இவனோட அப்பா?”
அருள் நடுக்கத்துடன், “சந்தானம், அதை அப்புறம் சொல்றேன், ஆனா, தேவராஜ், வெவரம் தெரியாம விளையாடரான், இப்படி இந்தப் பையனை வெச்சிருக்கான்னு இவனோட அப்பாவுக்குத் தெரிஞ்சாலே போதும், நாம எல்லோரும் அதோ கதிதான், இதுல தேவராஜ் அவரையே தூக்கிட்டு வரச் சொல்லியிருக்கான்னா, இன்னும் என்னென்னவெல்லாம் நடக்கப் போகுதோ தெரியலை.”

அப்போது “டேய், யார்டா அது, எம் பையனை கடத்தி வெச்சிட்டு என் கிட்ட பேரம் பேசரது, உங்க அத்தனை பேரையும், உங்க ஊர் சனத்தோட எரிச்சுடுவேன்” என்ற படி ஒருவர் வெள்ளை வேட்டி சட்டையில வந்தார், அவரை கொண்டு வந்த தேவராஜின் ஆட்கள் ஒரு நாலு அடி தள்ளி கைகளைக் கட்டிய படி நின்றனர்.  அவரைப் பார்த்த சந்தானத்தின் காலடியில் பூமி வெடித்து சிதறியது மாதிரி உணர்ந்தார், கால்கள் பலமிழந்து பட்டென்று தரையில் உட்கார்ந்தார்.  அருளுக்கும், சந்தானத்துக்கும், முகத்தில் ரத்த ஓட்டம் சுத்தமாக நின்று வெளிறிப்போயிருந்தது. 

ஆனால், தேவராஜ் சிரித்த படியே, “யோவ், சும்மா கத்தி உன் பையன் உசிரை நீயே வாங்கிடாதே” என்றான்

(தொடரும்)

No comments: